சொத்து வாங்குறதுக்கு முன்னாடி இந்த பவர்ஃபுல் "அயன் பட்டா" இருக்கான்னு பாருங்க.. பணம் விஷயத்துல உஷார்
சென்னை: தமிழகத்தில் நிலம் வாங்குவது என்பது ஒரு சராசரி மனிதனின் வாழ்நாள் கனவாக உள்ள நிலையில், அந்த முதலீடு சட்ட சிக்கல்களில் சிக்காமல் இருக்க "அயன் பட்டா" குறித்த தெளிவான புரிதல் அவசியம் என்று அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி விழிப்புணர்வு செய்தியை வெளியிட்டுள்ளார். அயன் பட்டா என்பது வெறும் காகிதம் மட்டுமல்ல, அது ஒரு நிலத்தின் மீதான முழுமையான சட்டப்பூர்வ உரிமையை உறுதிப்படுத்தும் மிக முக்கியமான ஆவணம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அயன் பட்டா என்றால் என்ன தெரியுமா? "அயன்" என்ற பாரசீகச் சொல்லுக்கு "முதன்மை" அல்லது "அரசுக்குச் சொந்தமான" என்று பொருள். நில வருவாய்த் துறையைப் பொறுத்தவரை, இது "அரசு தீர்வையுள்ள நிலம்" (Government Ryotwari Land) என்பதைக் குறிக்கிறது.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட ரயத்வாரி முறைப்படி, அரசு நேரடியாகக் குடியானவருக்கு வழங்கிய பட்டாவே இதுவாகும். இதன் கீழ் நிலத்திற்கான வரியைச் செலுத்தும் வரை, அந்த நிலத்தின் மீது உரிமையாளருக்கு முழு அதிகாரம் உண்டு என்ற உத்தரவாதம் கிடைக்கிறது. முற்காலத்தில் கோயில்களுக்கும் தனிநபர்களுக்கும் வழங்கப்பட்ட "இனாம் நிலங்கள்" பிற்காலத்தில் ரயத்வாரி முறைக்கு மாற்றப்பட்டபோது அவையும் அயன் நிலங்களாக வகைப்படுத்தப்பட்டன.
அயன் பட்டாவின் சட்ட முக்கியத்துவம்
ஒரு நிலத்தின் உரிமையாளர் அரசுக்குரிய நிலவரியைச் செலுத்திவிட்டு, அந்த நிலத்தை முழு அதிகாரத்துடன் அனுபவிக்க அயன் பட்டா வழிவகை செய்கிறது. சிட்டா, அடங்கல் மற்றும் அ-பதிவேடு (A-Register) போன்ற வருவாய் ஆவணங்களில் உரிமையாளர் பெயர் மற்றும் சர்வே எண்கள் சரியாக ஒத்துப்போகும் பட்சத்தில், அந்த உரிமை மிகவும் வலுவானதாகக் கருதப்படுகிறது.
இத்தகைய நிலங்களை விற்பனை செய்வதோ அல்லது பத்திரப் பதிவு செய்வதோ மிகவும் எளிதானது. குறிப்பாக, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் வழங்குவதற்கு அயன் பட்டாவை ஒரு முதன்மை ஆவணமாகக் கருதுகின்றன. இது எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய தேவையற்ற நிலப் பிணக்குகளையும் தவிர்க்க உதவுகிறது.
வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டியவை
சமீபகாலமாக அயன் பட்டா என்ற பெயரில் பஞ்சமி நிலங்கள், இனாம் நிலங்கள் மற்றும் அரசு ஆக்கிரமிப்பு நிலங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இத்தகைய மோசடிகளில் சிக்கினால் நில உரிமையை இழப்பதோடு, நீதிமன்ற வழக்குகளையும் சந்திக்க நேரிடும்.
எனவே, ஒரு நிலத்தை வாங்கும் முன் அதன் வகைப்பாடு முறையாக 'அயன்' என்று மாற்றப்பட்டுள்ளதா என்பதை அ-பதிவேடு மூலம் சரிபார்ப்பது அவசியம். மேலும், கிராம நிர்வாக அலுவலர் (VAO) மற்றும் தாசில்தார் அலுவலகம் வழியாகப் பதிவுகளை நேரடியாகச் சரிபார்த்து உறுதி செய்துகொள்ள வேண்டும்.
பாதுகாப்பான முதலீடு
நிலம் தொடர்பான வில்லங்கங்கள் அல்லது வழக்குகள் உள்ளனவா என்பதை சட்ட வல்லுநர்கள் மூலம் ஆய்வு செய்ய வேண்டும் (Due Diligence). அரைகுறை ஆவணங்கள் கொண்ட நிலத்தில் அவசரப்பட்டு முதலீடு செய்வதை விட, தெளிவான ஆவணங்கள் கொண்ட சொத்திற்காகக் காத்திருப்பதே புத்திசாலித்தனம்.
பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் மட்டுமே நில மோசடிப் பேர்வழிகளிடம் இருந்து தப்பிக்க முடியும். அயன் பட்டா போன்ற அடிப்படை விஷயங்களை அறிந்து செயல்படுவது பாதுகாப்பான மற்றும் அமைதியான சொத்துரிமைக்கு அடித்தளமாகும் என்று டாக்டர் ஆ.ஹென்றி தனது விழிப்புணர்வு பதிவில் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications