சான்ஸே இல்லை.. ஆளுநர் மாளிகையில் ஓபிஎஸ்ஸை பார்த்து ஈபிஎஸ் கொடுத்த ரியாக்சன்.. பரவும் வீடியோ
சென்னை: சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் இன்று ஆளுநர் ஆர்என் ரவி பொங்கல் விழா கொண்டாடினார். இந்த விழாவை முதல்வர் ஸ்டாலின் புறக்கணித்த நிலையில் எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் தங்களின் ஆதரவாளர்களுடன் பங்கேற்றனர். இந்நிலையில் தான் விழாவுக்கு ஓ பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் வந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கொடுத்த ரியாக்சன் தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.
அதிமுகவில் ஓ பன்னீர் செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வந்தனர். இந்நிலையில் தான் கடந்த ஆண்டு ஒற்றை தலைமை பிரச்சனை எழுந்தது.
இதையடுத்து நடந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

அதிமுக பிரச்சனை
இதனை ஓ பன்னீர் செல்வம் தரப்பு எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையே எதிர்க்கட்சி துணை தலைவர் பொறுப்பில் ஓ பன்னீ்ர் செல்வத்துக்கு பதில் ஆர்பி உதயக்குமார் நியமிக்கப்பட்டார். இதனை இன்னும் சபாநாயகர் அப்பாவு ஏற்கவில்லை. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தொடர்ந்து கோரிக்கைகள் வைத்தாலும் கூட எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் அப்பாவு முடிவு எடுக்கவில்லை. மேலும் ஓ பன்னீர் செல்வத்தின் இருக்கையும் மாற்றம் செய்யப்படவில்லை. இதனால் தனித்தனி அணியாக செயல்பட்டாலும் கூட எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் சட்டசபையில் அருகருகே அமர்ந்துள்ளனர்.

ஆளுநர் மாளிகை பொங்கல் விழா
இந்நிலையில் தான்ஆளுநர் மாளிகையில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் தமிழக முதல்வர், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், நீதிபதிகள், ஆதீனங்கள், பிஷப்கள், முஸ்லிம் குருமார்கள், விளையாட்டு துறையில் சாதனை படைத்த வீரர், வீராங்கனைகள், தமிழ் ஆர்வலர்கள், சமூக சேவகர்கள் உள்பட 1800க்கும் அதிகமானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இன்று மாலை ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் ஆளுநர் ஆர்என் ரவி தமிழ் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் வேஷ்டி, சட்டை, பரிவட்டம் கட்டி இருந்தார். அவரது மனைவி பட்டுப்புடவை அணிந்திருந்தார்.

அதிமுகவினர் பங்கேற்பு
இந்த விழாவில் முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது அணியின் எம்எல்ஏக்கள், முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவரது ஆதரவாளர்கள், பாஜக எம்எல்ஏக்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். தமிழ்நாட்டை, தமிழகம் என ஆளுநர் ஆர்என் ரவி கூறியது, சட்டசபையில் ஏற்பட்ட பிரச்சனை மற்றும் பொங்கல் திருவிழா அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற பெயரை தவிர்த்து தமிழகம் என குறிப்பிட்டதோடு, தமிழ்நாட்டின் இலச்சின் இடம்பெறாததால் முதல் ஸ்டாலின் புறக்கணித்தார். அமைச்சர்கள், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியில் உள்ளவர்கள் யாரும் பங்கேற்கவில்லை.

முதல் வரிசையில் எடப்பாடி பழனிச்சாமி
இந்நிலையில் தான் தற்போது இணையதளத்தில் ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் ஓ பன்னீர் செல்வத்தை பார்த்து எடப்பாடி பழனிச்சாமி அணியினர் கொடுத்த ரியாக்சன் பதிவாகி உள்ளது. அதாவது ஆளுநர் மாளிகையில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்க சென்ற எடப்பாடி பழனிச்சாமி தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் முதல் வரிசையில் போடப்பட்டு இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தார். எடப்பாடி பழனிச்சாமி அருகே முன்னாள் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன், எஸ்பி வேலுமணி, செங்கோட்டையன் உள்ளிட்டவர்கள் இருந்தனர்.

எடப்பாடி பழனிச்சாமி ரியாக்சன்
இந்த வேளையில் விழாவில் பங்கேற்க ஓ பன்னீர் செல்வம் நடந்து வந்தார். அவருடன் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டவர்கள் வந்திருந்தனர். இவர்கள் அனைவரும் எடப்பாடி பழனிச்சாமியை கடந்து செல்ல வேண்டிய சூழல் இருந்தது. இதையடுத்து ஓ பன்னீர் செல்வம் தனது அணியினருடன் எடப்பாடி பழனிச்சாமி முன்பு நடந்து சென்றார். இந்த வேளையில் அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்து கொள்ளவில்லை. மாறாக எடப்பாடி பழனிச்சாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்பி வேலுமணி ஆகியோர் ஓ பன்னீர் செல்வம் வந்த திசைக்கு எதிராக பார்த்தபடி இருந்தனர். தற்போது இந்த வீடியோ வெளியாகி இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications