டெல்லிக்கு ஏன் போனீங்க? செங்கோட்டையிடம் கேட்ட எடப்பாடி.. வந்து விழுந்த பதில்.. சண்டைக்கு காரணம்?
சென்னை: அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்காக எடப்பாடி பழனிச்சாமிக்கு விவசாயிகள் எடுத்த பாராட்டு விழாவில் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை. விழாவை அவர் புறக்கணித்தது சர்ச்சையாகியிருக்கிறது.
உள் கட்சி பூசல் தான் காரணம் என சொல்லப்பட்டது. அதற்கேற்ப, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் வைக்கப்படாததால் செல்லவில்லை என செங்கோட்டையன் சொல்கிறார். அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் புகைப்படம் இல்லாததால் அந்த விழாவை புறக்கணித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். நாங்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டவர்கள். எங்களை வளர்த்து ஆளாக்கிய தலைவர்களின் படங்கள் விழாவில் இல்லை. அதனால் அந்த கூட்டத்திற்கு நான் செல்லவில்லை என்று கூறி உள்ளார்.

ஆனால், உண்மையான காரணம் அது கிடையாது என்கின்றனர் அதிமுகவினர். நம்மிடம் பேசிய சீனியர் ஒருவர், "2026-ல் அதிமுக ஆட்சியைப் பிடிக்க வேண்டுமானால் கட்சியில் ஒற்றுமை இருக்க வேண்டும். பிரிந்தவர்கள், நீக்கப்பட்டவர்கள் கட்சியில் மீண்டும் சேர்க்கப்பட வேண்டும் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார் செங்கோட்டையன். கடந்த 1 வருடமாக சசிகலாவிடம் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறார். சசிகலாவின் எண்ணத்தை பிரதிபலிப்பதைப் போலவே செங்கோட்டையனின் சமீபகால நடவடிக்கைகள் இருக்கின்றன.
சசிகலா, தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை இணைப்பது பற்றி எடப்பாடியிடம் பலமுறை வலியுறுத்தி விட்டார். எடப்பாடி அதனை ஏற்க மறுத்து வருகிறார். இதனால், கடந்த 6 மாதங்களாக எடப்பாடிக்கும் செங்கோட்டையனுக்கும் பேச்சுவார்த்தை இல்லை. அதே போல, பிரிந்தவர்களை சேர்ப்பதும் பாஜகவுடன் கூட்டணி வேண்டும் என்பதும் எஸ்.பி. வேலுமணியின் விருப்பம்.
இதே கருத்தில் சில மூத்த அமைச்சர்களும் இருக்கின்றனர். அவர்களுடன் இணைந்து செங்கோட்டையனும் செயல்படுகிறார். இதனை எடப்பாடியால் ஜீரணிக்கமுடியவில்லை. இந்த நிலையில், வேலுமணியின் இல்லத் திருமண விழா அடுத்த மாதம் நடக்கவிருக்கிறது. அதற்கான அழைப்பிதழை டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து கொடுத்திருக்கிறார் வேலுமணி. அவருடன் செங்கோட்டையனும் இருந்தார். அப்போது, செங்கோட்டையனை அமித் ஷாவிடம் அறிமுகப்படுத்தியிருக்கிறார் வேலுமணி. செங்கோட்டையனின் அரசியல் பேக் ரவுண்டை அறிந்து, அவரிடம் நிறைய விசயங்களை விவாதித்துள்ளார் அமித் ஷா.
எடப்பாடியின் அரசியல் குறித்து அந்த சந்திப்பில் பேசப்பட்டுள்ளது. திருமண விழாவுக்கு வருவதாக அமித் ஷா உறுதி தந்திருக்கிறார். மேலும், எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளுங்கள் எனவும் செங்கோட்டையனிடம் உரிமையாக சொல்லியிருக்கிறார் அமித் ஷா. இந்த சந்திப்பு ரகசியங்களை அறிந்த எடப்பாடி, கோபப்பட்டுள்ளார். ஏற்கனவே செங்கோட்டையன், சசிகலாவின் தொடர்பில் இருப்பதை எடப்பாடி விரும்பாத நிலையில், தனக்குத் தெரியாமல் அமித் ஷாவை சந்தித்ததை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. டெல்லியின் உதவியை வாங்கி தனக்கு எதிராக குழி பறிக்கிறாரா என்ற கோபம் அவருக்கு.
இந்த நிலையில், டெல்லி சென்றதை செங்கோட்டையனிடம் விசாரித்திருக்கிறார் எடப்பாடி. செங்கோட்டையன் முறையாக பதில் சொல்லாமல் எடுத்தெறிந்து பேசும் வகையில் பதில் தந்திருக்கிறார். இதனால் கோபப்பட்ட எடப்பாடி, சில வார்த்தைகளை விட்டிருக்கிறார். இதனால் இருவருக்கும் வார்த்தைகள் தடித்துள்ளன. இந்த சூழலில்தான் எடப்பாடிக்கான விழாவை செங்கோட்டையன் புறக்கணித்திருக்கிறார். இந்த உள்கட்சி மோதல், கட்சிக்கு நல்லதல்ல என்பதை உணர்ந்து இருவருக்கும் இடையிலான சமாதான பேச்சை சிலர் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்" என்று விவரிக்கிறார்.
இதற்கிடையே, அமித் ஷாவுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர் வேலுமணி. அவருடன் சென்று தான் செங்கோட்டையன் அமித் ஷாவை சந்தித்தார். வேலுமணியை விட்டு விட்டு செங்கோட்டையன் மீது மட்டும் எடப்பாடி கோபம் காட்டுவது ஏன் ? என்ற கேள்வியும் பின்னணி விவரங்கள் அறிந்தவர்கள் எழுப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications