அது என்னங்க Mandamus.. லீகல் டீமை அழைத்து.. சட்டென விஜய் கேட்ட 4 கேள்வி.. இனிதான் ராவண ஆட்டம்?
சென்னை: தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 'தவெக' (TVK) தலைவர் விஜய்யின் ஆளுநர் சந்திப்புகள், அடுத்தகட்டமாக சட்டப் போராட்டத்தை நோக்கி நகர்வதை உறுதிப்படுத்தியுள்ளன. கடந்த 48 மணி நேரத்தில் இரண்டு முறை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரிய விஜய், தற்போது டெல்லி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் சட்ட நிபுணர்களுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்த ஆலோசனையில் விஜய் முன்வைத்த நான்கு முக்கிய கேள்விகளும், அதற்கான சட்ட ரீதியான தீர்வுகளும் குறித்த விரிவான தொகுப்பு இதோ:
1. அதிக இடங்கள் இருந்தும் ஆளுநர் அழைக்க மறுத்தால் என்ன செய்வது? என்ற விஜயின் கேள்வி
தவெக 107 இடங்களைப் பெற்றுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்தையும் சேர்த்து 112 பேர் ஆதரவு விஜய்க்கு உள்ளது. பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், தனிப்பெரும் கட்சி (Single Largest Party) என்ற அடிப்படையில் தன்னையே முதலில் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்பது விஜய்யின் வாதம்.

ஆளுநர் தொடர்ந்து தாமதம் செய்தால், அது அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 164-க்கு எதிரானது என சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்நிலையில், ஆளுநருக்கு எதிராக 'Mandamus' மனுவைத் தாக்கல் செய்து, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிவெடுக்க உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தை நாடத் தயாராகி வருகிறார் விஜய்.
'மாண்டமஸ்' (Mandamus) மனு என்பது ஒரு அரசு அதிகாரி அல்லது ஆளுநர் போன்ற அரசியலமைப்புப் பதவியில் இருப்பவர், தனது சட்டபூர்வமான கடமையைச் செய்யத் தவறும்போது, அந்தப் பணியை உடனடியாகச் செய்யுமாறு நீதிமன்றம் பிறப்பிக்கும் "செயலுறுத்தும் பேராணை" ஆகும். இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 226-ன் கீழ் உயர்நீதிமன்றத்திலோ அல்லது பிரிவு 32-ன் கீழ் உச்சநீதிமன்றத்திலோ இந்த மனுவைத் தாக்கல் செய்யலாம். தற்போதைய சூழலில், பெரும்பான்மை நிரூபிக்கத் தயாராக இருக்கும் ஒருவரை ஆட்சி அமைக்க அழைக்காமல் ஆளுநர் காலம் கடத்தினால், அவர் தனது கடமையிலிருந்து தவறுவதாகக் கருதி, அவரைச் செயல்படப் பணிக்கக் கோரி விஜய் தரப்பு இந்த மனுவைப் பயன்படுத்த முடியும்.
2. நீதிமன்றத்திற்குச் சென்றால் தீர்வு கிடைக்குமா? என்ற விஜயின் கேள்வி
சமீபத்திய கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா அரசியல் குழப்பங்களின் போது, உச்சநீதிமன்றம் நள்ளிரவில் கூட விசாரணை நடத்தி தீர்ப்பளித்துள்ளது. ஆளுநரின் அதிகாரங்கள் வரம்பற்றவை அல்ல என்பதை நீதிமன்றம் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது. விஜய்யின் சட்டக் குழுவினர், "சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்" என்பதை வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றம் அல்லது நேரடியாக உச்சநீதிமன்றத்தை அணுகத் திட்டமிட்டுள்ளனர்.
3. 'எஸ்.ஆர். பொம்மை' (S.R. Bommai) வழக்கு என்கிறீர்களே? என்ற விஜயின் கேள்வி
1994-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க எஸ்.ஆர். பொம்மை v. இந்திய யூனியன் வழக்குத் தீர்ப்புதான் தற்போதைய சூழலில் விஜய்க்கான துருப்புச் சீட்டு.
"ஒரு கட்சியின் பெரும்பான்மையை ஆளுநர் மாளிகையில் வைத்து ஆளுநர் தீர்மானிக்கக் கூடாது; அது சட்டமன்றத்தின் தளத்தில்தான் (Floor Test) நிரூபிக்கப்பட வேண்டும்" என்பதுதான் இந்தத் தீர்ப்பின் சாராம்சம்.
இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், ஆளுநர் விஜய்க்கு வாய்ப்பு வழங்காமல் இழுத்தடிப்பது சட்டவிரோதமானது என வழக்கறிஞர்கள் வாதிடுகின்றனர்.
4. மீண்டும் தேர்தலா அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சியா? என்ற விஜயின் கேள்வி
ஆளுநர் ஒருவேளை எந்தக் கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தால், அவர் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 356-ன் கீழ் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு (President's Rule) பரிந்துரைக்கலாம். அப்படி நடந்தால் அடுத்த 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
ஆனால், தவெக போன்ற ஒரு கட்சி 107 இடங்களை வைத்துள்ள நிலையில், அவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த திட்டமிட்டுவது ஜனநாயக விரோதமானது என காங்கிரஸ் சட்ட நிபுணர்கள் விஜய்யிடம் தெரிவித்துள்ளனர். ஒருவேளை தேர்தல் மீண்டும் வந்தால், அது 'மக்களின் தீர்ப்பை அவமதிக்கும் செயல்' என மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லவும் விஜய் தரப்பு திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications