சூப்பர் எல் நினோ.. ரெட் அலர்ட்.. வரலாறு காணாத வெப்பம் ஏற்படுமா? இந்தியாவிற்கு வரப்போகும் பாதிப்பு
சென்னை: ஒரு பக்கம் அதி கனமழை வெள்ளம் மற்றொரு பக்கம் சுட்டெரிக்கும் வெயில் வறட்சி என உலகத்தில் ஏதோ ஒன்று நிகழப்போவதற்கான அறிகுறி தென்படுகிறது. சூப்பர் எல் நினோ இந்த ஆண்டு இறுதிக்குள் நிச்சயம் வந்து விடும் என்று ஆய்வாளர்கள் உறுதியாக கூறியுள்ளனர். எதனால் இந்த காலநிலை மாற்றம் சூப்பர் எல் நினோ பாதிப்பினால் என்னென்ன மாற்றங்கள் இந்த உலகத்தில் ஏற்படும் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தரராஜன் கூறியுள்ளார்.
எல் நினோ என்ன செய்யும்: கடல் வெப்ப அலையை அதிகரிக்க கூடிய எல் நினோ நிகழ்வு இந்தாண்டு மீண்டும் திரும்புவதற்கு 90 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக புதிய ஆய்வு கூறுகிறது. கோடை வெப்பம் இன்னும் அடுத்தடுத்த ஆண்டுகளில் வாட்டி வதைக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்தாண்டு இறுதியில் வானிலையைப் புரட்டிப் போட வைக்கும் சூப்பர் எல் நினோ உலகை நெருங்கி கொண்டிருக்கிறது. முன் எப்போதும் இல்லாத வெப்ப நிலை உயர்வை சென்னை, புதுச்சேரி போன்ற கடலோர நகரங்கள் எதிர்கொள்ள கூடும். ஏற்கனவே ஏப்ரல், மே மாதங்களில் இதுவரை இல்லாத கடல் வெப்ப நிலை இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியது. ஆராய்ச்சியாளர்களே அச்சப்படும் அளவிற்கு பூமியின் வெப்ப நிலை திடீர் உயர்வு ஏற்படும் என கணிக்கின்றனர்.

எந்த நாடுகளுக்கு பாதிப்பு: இது குறித்து DW Tamil யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கால நிலை மாற்றம், எல் நினோ மற்றும் உலகளாவிய தாக்கம் ஆகியவை குறித்து கூறியுள்ளது. எல் நினோவின் தாக்கம் 2023 தொடங்கி 3 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம். இந்த கால கட்டத்தில் அமெரிக்கா போன்ற பகுதிகளில் தீவிர மழை, சூறாவளி, திடீர் வெள்ளம் போன்ற அசாதாரண நிலை உருவாகும். உலகின் மற்ற பகுதிகள் காட்டு தீ, வறட்சி, தாக்கம் ஏற்படும். தென் ஆப்ரிக்கா, இந்தியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் தீவிர வெப்ப நிலை, வறட்சியால் பாதிக்க கூடும். ஏற்கனவே இந்தியாவில் வெப்ப அலை தாக்கம் முன்கூட்டியே தொடங்கி விட்டது. இதே நிலை நீடித்தால் பருவமழையில் தாக்கத்தை ஏற்படுத்தி குடிநீர் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். புவி வெப்பம் அடைதல் வரம்பு 2027 ஆம் ஆண்டுக்குள் 1.5 டிகிரி செல்சியல் கடக்க 66 சதவீதம் வாய்ப்பு உள்ளது என்று கூறுகின்றனர் இதற்கு எல் நினோ காரணம் என்றாலும் மனிதர்களும் காரணம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். தொழிற்துறை வளர்ச்சி, புதைப் படிவ எரிபொருள் பயன்பாடு உள்ளிட்ட மனித நடவடிக்கைகள் தான் இதற்கு முக்கிய காரணம் என்கின்றனர்.
பூவுலகு சுந்தரராஜன்: இந்த எல் நினோ தாக்கம் குறித்து யூடுயூப் சேனலில் பேசியுள்ள சுந்தரராஜன் எல்நினோ பற்றியும் கடல் வெப்பநிலை உயர்வு பற்றியும் கூறியுள்ளார். 1982 ஆண்டு பெருங்கடலின் வெப்பம் எப்படி அதிகரித்தது. அந்த ஆண்டு சூப்பர் எல் நினோ ஆண்டாக இருந்தது. அதே போல இந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு சூப்பர் எல்நினோ ஆண்டாக இருக்கும் என்று அறிவித்து விட்டார்கள். கடல் வெப்பம் அதிகரித்து வருகிறது. கடல் ஏன் வெப்பமாகிறது என்று பார்த்தால் புவி ஆற்றல் சமநிலை தன்மையில் வேறுபாடு ஏற்பட்டிருக்கிறதா என்று பார்த்தால் ஆம் என்றுதான் சொல்ல முடியும். சூரியனில் இருந்து புவி மண்டலத்திற்கு வரும் வெப்பம் மீண்டும் வளி மண்டலத்திற்கு திரும்பி செல்ல முடியாத அளவிற்கு கார்பனின் அளவு சேர்ந்து விட்டது.
உலக வானிலை ஆய்வு மையம்: சமீபத்தில் உலக வானிலை ஆய்வு மையம் ஒரு மிக முக்கியமான ஆய்வறிக்கையை வெளியிட்டது. அந்த ஆய்வில், சூரியனில் இருந்து வரக்கூடிய வெப்பத்தில் அல்லது ஹீட் எனர்ஜியில் சக்தியானது மீண்டும் ஒரு சதவிகிதம் மட்டும்தான் வளிமண்டலத்திற்கு திரும்பி போகிறது. மீதமுள்ள 99 சதவிகித வெப்பமும் பூமியிலேயே தங்கி விடுகிறது.
பூமியில் தங்கும் வெப்பம்: இது பயங்கர அதிர்ச்சிகரமான தகவல்தான். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு வெப்பம் எந்த அளவிற்கு வளி மண்டலத்திற்கு திரும்ப செல்கிறதோ அந்த அளவிற்கு நல்லது. ஆனால் இப்போது வெறும் 1 சதவிகிதம் மட்டுமே வளி மண்டலத்திற்கு திரும்ப செல்கிறது. மீதமுள்ள 99 சதவிகித வெப்பமும் பூமியிலேயே தங்கி விடுகிறது. இதற்குக் காரணம் வளிமண்டலத்தில் கார்பன் அதிகரித்ததுதான்.
கடலில் உயரும் வெப்பம்: பூமியில் தங்கும் வெப்ப சக்தியில் 89 சதவிகிதத்தை பெருங்கடல்கள் வாங்கிக்கொள்கின்றன. 1982ஆம் ஆண்டை விட பெருங்கடல்களின் வெப்பம் அதிகமாக உயர்ந்து இருக்கிறது. சூரியனில் இருந்து புவிக்கு வரும் வெப்ப சக்தியில் 1 சதவிகிதம் வளிமண்டலத்திற்கு செல்கிறது. 89 சதவிகிதம் கடலுக்கு சென்று தங்கி விடுகிறது என்றால் மீதமுள்ள 10 சதவிகித வெப்பத்தில் 6 சதவிகிதம் நிலப்பரப்பை சூடாக்குகிறது. மீதமுள்ள 4 சதவிகித வெப்பம் துருவப்பகுதிகளான ஆர்டிக், அண்டார்டிகாவில் உள்ள பனிகள் அதிகம் உருக காரணமாகி விடுகிறது.
அணுகுண்டு: அப்ப நீங்க யோசிச்சு பாருங்க.. எந்த அளவிற்கு வெப்பம் பூமியில் தங்குகிறது என்று சமீபத்தில் ஜேக்கப்சன் என்பவர் ஒரு புள்ளி விபரம் போட்டிருந்தார். ஒவ்வொரு விநாடிக்கும் கிட்டத்தட்ட 11 ஹிரோசிமா அணுகுண்டுகள் போட்டால் எந்த அளவிற்கு வெப்பம் வருமோ அந்த அளவிற்கு வெப்பத்தை பெருங்கடல்கள் வாங்கிக்கொண்டிருக்கின்றன.

40 ஆண்டுகளில் உயரும் வெப்பம்: 1982ஆம் ஆண்டு முதல் 2023 வரை கடந்த 40 ஆண்டுகளில் அதிக அளவிலான வெப்பம் உயர்ந்து உள்ளது. 1982 முதல் 2002 வரை 20 ஆண்டுகளிலும் அதற்கு பின்னரான 20 ஆண்டுகளிலும் வெப்ப ஆற்றலான பூமியில் தங்கிப்போவது இரு மடங்காகி உள்ளது. தங்குகின்றன வெப்ப ஆற்றலில் 89 சதவிகிதம் பெருங்கடல்கள் வாங்கிக்கொள்கின்றன. ஒரு 6 சதவிகிதம் நிலப்பரப்பு வாங்கிக்கொள்கிறது. 4 சதவிகிதம் துருவப்பகுதிகளில் உள்ள பனி உருகுவதற்கு காரணமாக இருக்கிறது. பனி அதிகமாக இருந்தால் வெப்பத்தை திரும்ப அனுப்பி விடும். ஆர்டிக் பகுதியில் உள்ள பனி உருகி நிறம் மாறினால் வெப்பத்தை அதிகம் உள் வாங்கிக்கொள்ளலாம். இதுவும் ஆபத்தானதுதான்.
காலநிலை மாற்றம்: காலநிலை மாற்றத்தை அதிகரிப்பதற்கான சூழ்நிலைலையாக உள்ளது. புவியின் வெப்பத்தை அதிகரிக்காமல் சீர்கெடாமல் இருப்பதற்கு ஒரே வழி கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தி பூஜ்ஜியம் ஆக்குவதுதான் என்றும் சுந்தரராஜன் கூறியுள்ளார். வேறு வழியே கிடையாது. ஏற்கனவே 99 சதவிகித வெப்பம் கடலிலும் நிலப்பரப்பிலும்தான் உள்ளது. ஒரு சதவிகித வெப்பமும் வளிமண்டலத்திற்கு போகாமல் பூமியிலேயே நின்று விட்டால் என்ன நடக்கும் என்பதை நினைத்து பார்க்கவே பயமாக இருப்பதாக ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். வெப்பநிலை உயர்ந்து கொண்டே செல்வதால் ஆர்டிக் பகுதியில் உள்ள பனி அதிகமாக உருகி அங்குள்ள கட்டமைப்பே தலைகீழாக மாறி விடும் என்று அந்த அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் எல் நினோ இந்த ஆண்டு இறுதிக்குள் நிச்சயம் வந்து விடும் என்று ஆய்வாளர்கள் உறுதியாக கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications