"அதிமுக+ பாமக+ தேமுதிக.." பெரிதாக திட்டம் போடும் எடப்பாடி? லோக்சபா தேர்தல் பிளான் இதுதான்!
சென்னை: மிக விரைவில் லோக்சபா தேர்தல் நடக்க உள்ள நிலையில், இதில் அதிமுக தலைமையில் மிகப் பெரிய கூட்டணியை அமைக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு வருகிறார். இந்த லோக்சபா தேர்தலுக்கு அதிமுக பிளான் என்ன என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில காலமே இருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தேசியளவில் பாஜக கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் நேரடி போட்டி இருக்கிறது.

அதேநேரம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்கே இரு பெரும் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கூட்டணிக்கு இடையே தான் போட்டி, இதில் திமுக கூட்டணியை உறுதி செய்து தொகுதிப் பங்கீடு வரை சென்றுவிட்டது. முதற்கட்ட பேச்சுவார்த்தையும் முடிந்துவிட்டது.
கூட்டணி: ஆனால், அதிமுகவில் இன்னும் கூட்டணி எதுவும் உறுதியாகவில்லை. லோக்சபா தேர்தல் குறித்த அறிவிப்பு வந்த பிறகே கூட்டணி குறித்து அறிவிப்போம் என்று அதிமுக தொடர்ந்து கூறி வருகிறது. அதேநேரம் கூட்டணியை இறுதி செய்ய அங்கே பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே முன்னாள் அமைச்சரும் மூத்த அதிமுக நிர்வாகியுமான வைகைச் செல்வன், அதிமுக கூட்டணி தொடர்பாகவும் பாஜக எதிர்ப்பு நிலைப்பாடு தொடர்பாகவும் டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விளக்கமாகப் பேசியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "அதிமுக லோக்சபா தேர்தலுக்குத் தயாராக இருக்கிறது. தேர்தல் அறிக்கை தொடர்பாக விவாதித்து முடிவெடுக்கத் தேர்தல் அறிக்கை குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதுபோக பல குழுக்கள் போட்டிருக்கிறோம். அந்த குழுக்கள் தங்கள் பணிகளைத் தொடங்கியுள்ளன. இந்த தேர்தல் களத்தில் வழக்கம் போல அதிமுக முக்கிய பங்கை வகிக்கும்.
திமுக கூட்டணி: அரைச்ச மாவை அரைப்போமா என்பது போல திமுக கூட்டணி 15 ஆண்டுகள் ஒன்றுதான். யாரும் புதிதாக அங்கே செல்வதில்லை. அவர்கள் பிரிந்து சென்றுவிட்டக் கூடாது என திமுக பாதுகாத்து வருகிறது. ஆனால் அப்படிப்பட்ட அந்தக் கூட்டணிக்குள்ளும் கூட மனக்கசப்புகள் வரலாம். அதற்கான மருந்தை அதிமுக நிச்சயம் தரும்.
பாஜகவின் துரோகம்: மாநில உரிமைகளை மீட்பதை மையப்படுத்தி லோக்சபா தேர்தலை அதிமுக எதிர்கொள்ளும். கடந்த 10 ஆண்டுகளாக பாஜக தமிழ்நாட்டிற்குச் செய்த துரோகங்களை எல்லாம் பட்டியலிடுவோம். அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகளை நாங்கள் பட்டியலிடுவோம்.
திமுக மட்டுமின்றி நாங்கள் பாஜகவையும் சேர்த்தே கடுமையாக எதிர்கிறோம். பாஜக உடன் கூட்டணி என்பதே இல்லை. அமித் ஷா கூட்டணி கதவுகள் திறந்து இருக்கிறது என்கிறார் சரி. ஆனால், எந்த கதவு வழியாகப் போக வேண்டும் என்பதை நாங்கள் தான் முடிவெடுப்போம்.
பாஜக: பாஜக அதிக வாக்கு வங்கி அதிகரித்துள்ளதாக அக்கட்சித் தலைவர்கள் சொல்வார்கள். அது மாநிலத்தில் ஆங்காங்கே சில இடங்களில் ஓரிரு சதவிகிதம் அதிகரிக்கலாம். ஆனால், மாநிலம் முழுக்க பார்க்கும் போது வெற்றி பெறும் அளவுக்கான வாக்குவங்கி அவர்களுக்குக் கிடைக்காது. அதிமுக கூட்டணி இல்லாமல் பாஜகவால் கடந்த முறை பெற்ற வாக்குகளைக் கூடப் பெற முடியாது என்பதே உண்மை" என்று அவர் தெரிவித்தார்.
மெகா பிளான்: தொடர்ந்து அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை எப்படி சென்று கொண்டிருக்கிறது என்ற கேள்விக்குப் பதிலளித்த வைகை செல்வன், "பாமக மற்றும் தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் நல்ல பதில் கிடைக்கும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications