அரசு வேலையை உதறிய வேலூர் Dr.பசுபதி முதல் பூக்கடைக்காரரின் மகன் வரை! யார் இந்த 33 அதிமுக வேட்பாளர்கள்
சென்னை: மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் 33 வேட்பாளர்களின் பின்னணி என்ன?
அதிமுக சார்பில் போட்டியிடும் தொகுதிகளும் அதன் வேட்பாளர்களும் அவர்களின் பின்னணியும்:

வடசென்னை - ராயபுரம் மனோ
வடசென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ராயபுரம் மனோ. இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ராஜினாமா செய்தார். மூப்பனார், வாசன், ஈவிகேஎஸ் இளங்கோவன், பீட்டர் அல்போன்ஸ், ஞானதேசிகன், கோபண்ணா ஆகியோருடன் நெருங்கிய நட்பில் இருந்தார் ராயபுரம் மனோ. காங்கிரஸ் கட்சியில் கவுன்சிலராக, அகில இந்திய உறுப்பினராக, மாவட்ட தலைவராக பல்வேறு பதவிகளில் இருந்துள்ளார் மனோ. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவில் இணைந்த ராயபுரம் மனோவிற்கு வடசென்னை லோக்சபா தொகுதியின் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தென்சென்னை - ஜெயவர்த்தன்
தென் சென்னை வேட்பாளார் ஜெயவர்த்தன் தொகுதிக்கு நன்கு அறிமுகமானவர். ஜெயலலிதா காலத்திலேயே வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றவர். தன்னுடைய 26-ம் வயதில் முதன்முதலாக எம்.பி ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஜெயவர்தன். ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவக் கல்வியை நிறைவு செய்துள்ளார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் என்ற அறிமுகத்துடன் மூன்றாவது முறையாக தென் சென்னை லோக்சபா தொகுதியில் களம் காண்கிறார் ஜெயவர்த்தன்.
காஞ்சிபுரம் - ராஜசேகர்
பெரும்பாக்கம் ராஜசேகர், அதிமுக துணை அமைப்பாளர் அம்மா பேரவை மாநில செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். பரங்கிமலை கிழக்கு ஒன்றிய செயலாளராக பணியாற்றி வருகிறார். அதிமுகவில் 47 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்து வருகிறார். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாக்கம் ஊராட்சி மன்ற 12 வார்டுகளையும் இவரது ஆதரவாளர்களே கைப்பற்றினர். செங்கல்பட்டு பகுதியில் முக்கிய நபராக இவர் இருக்கிறார்.
அரக்கோணம் - ஏ.எல்.விஜயன்
ஏ.எல்.விஜயனின் (45) தந்தை பெயர் லட்சுமணன். இவர் பி.ஏ படித்துள்ளார். இவர் ஜவுளிக் கடை நடத்தி வருகிறார். மேலும், சோளிங்கர் முன்னாள் பேரூராட்சி தலைவராக பதவி வகித்தவர். தற்போது, ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் கிழக்கு ஒன்றியச் செயலாளராக உள்ளார்.
கிருஷ்ணகிரி - ஜெயப்பிரகாஷ்
58 வயதாகும் ஜெயபிரகாஷ், எம்ஏ எல்எல்பி படித்துவிட்டு கிரானைட் , டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார். ஒசூரை சேர்ந்த இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு பாமகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். தற்போது அதிமுக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவராகவும் உள்ளார். மேலும், ஏற்கெனவே ஒரு முறை நகராட்சி கவுன்சிலராக பதவி வகித்தவர்.
ஆரணி - கஜேந்திரன்
47 வயதாகும் கஜேந்திரன் பி.ஏ. படித்துள்ளார். கட்டுமானத் தொழில் செய்து வருகிறார். இவர் 12 ஆண்டுகளாக அதிமுக இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்டச் செயலாளராகவும் ஆரணி தெற்கு ஒன்றியச் செயலாளராகவும் மாவட்ட கற்பகம் கூட்டுறவு பண்டக சாலையின் தலைவராக 2019 முதல் 2023 ஆம் ஆண்டு வரையும் இருந்தார்.

விழுப்புரம் - பாக்யராஜ்
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள காந்தளவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியராஜ். இவர் அதிமுக கட்சியில் 2011 முதல் உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். கடந்த அதிமுக ஆட்சியில் 2011 முதல் 2014 வரை தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலை இணை இயக்குனராக பணியாற்றினார். தற்பொழுது கள்ளக்குறிச்சி மாவட்ட மாணவரணி செயலாளராக உள்ளார். மேலும் இவர் ஸ்டார் ஹோட்டல் ஒப்பந்ததாரராக பணி செய்து வருகிறார்.
சேலம் - விக்னேஷ்
சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு படித்த இளைஞர் ஒருவரை நிறுத்த வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்ததாக கூறப்படுகிறது. அதன்படி, சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மணியின் உறவினரும், ஒன்றிய அவைத் தலைவர் பரமசிவத்தின் மகனும், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளருமான விக்னேஷ் நாடாளுமன்ற தேர்தல் அதிமுக வேட்பாளராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
நாமக்கல் - தமிழ்மணி
64 வயதாகும் தமிழ்மணி எம்எஸ்சி வேளாண்மை படித்துள்ளார். இவருடைய சொந்த ஊர் பரமத்தி. கடந்த 1984 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசின் வேளாண்மை துறையில் 10 ஆண்டுகள் பணி செய்தார். 1993 ஆம் ஆண்டு முதல் சமையல் எண்ணெய் தயாரிப்பு மற்றும் போக்குவரத்து துறையில் சுயதொழில் முனைவோராக உள்ளார். கட்சியில் வர்த்தக அணி மாவட்டச் செயலாளராக உள்ளார்.
ஈரோடு - ஆற்றல் அசோக்குமார்
புதுமுக வேட்பாளரான ஆற்றல் அசோக் குமார் 1970 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி பிறந்தார். ஈரோடு மாவட்டம், கொடுமுடி தாலுகாவில் உள்ள புதுப்பாளையம் கிராமத்தில் பிறந்தவர். அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த பின்னர் கோயம்புத்தூர் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் 1987-1991 வருடத்தில் மின் பொறியியல் பயின்று பட்டம் பெற்றவர். ஆற்றல் அசோக் அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் உள்ள லூயிஸ்வில் பல்கலைக்கழகத்திலிருந்து முதுகலை மின் மற்றும் கணினி பொறியியல் எம்எஸ் பட்டம் பெற்றார். பாஜக மாநில ஓபிசி அணியின் துணை தலைவராக, ஆற்றல் அசோக்குமார் பதவி வகித்து வந்தார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் சவுந்தரத்தின் மகனான அசோக்குமார், தற்போதைய மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏ சரஸ்வதியின் மருமகன் ஆவார். அதிமுக -பாஜக கூட்டணி சார்பில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட விரும்பிய அசோக்குமார், தான் நிறுவனராக உள்ள ஆற்றல் அறக்கட்டளை மூலம், மருத்துவ சிகிச்சை, மலிவு விலை உணவகம் உள்ளிட்ட சேவைகளை மேற்கொண்டு வந்தார். அதிமுக - பாஜக கூட்டணி முறிந்த நிலையில், பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். ஆற்றல் அசோக்குமார் தற்போது ஈரோடு லோக்சபா தொகுதியில் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
கரூர் - கே.ஆர்.எல்.தங்கவேல்
அருண் டெக்ஸ் தங்கவேல் கரூர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளராக இருந்து வருகிறார். இவர் பாரம்பரிய அதிமுக உறுப்பினர். ஜவுளி தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்ஆர் விஜயபாஸ்கருக்கு மிகவும் நெருக்கமானவர் என தெரிகிறது.

சிதம்பரம் - சந்திரஹாசன்
அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுக்கா மணக்குடையான் தாமரைப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த மாயவன் என்பவரின் மகன் சந்திரஹாசன். பெரம்பலூர் மாவட்ட கழக இலக்கிய அணிச் செயலாளராக பொறுப்பு வகிக்கிறார். இவருக்கு 71 வயது. தற்பொழுது பெரம்பலூர் மாவட்ட இலக்கிய அணிச் செயலாளராக உள்ளார். இவர் வேளாண் துறையில் உதவி வேளாண் அதிகாரியாக இருந்தவர். அந்த பணியை ராஜினாமா செய்துவிட்டு தற்போது முழு நேரமும் அதிமுகவில் இருக்கிறார்.
நாகை - டாக்டர் சுர்ஜித் சங்கர்
இவர் எல்எல்பி பிஎல்எம், எம்எஸ்டபிள்யூ , பிஎச்டி படித்துள்ளார். இவர் புரட்சித் தலைவி பேரவை துணைச் செயலாளராக உள்ளார்.
மதுரை - சரவணன்
அரசியலுக்கு வந்து முதலில் மதிமுகவில் இருந்தவர் அதன்பின் பாஜகவிற்கு சென்றார். அங்கிருந்து அப்படியே திமுகவில் இணைந்தார். பாஜகவுடன் ரகசிய தொடர்பில் இருந்ததால் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு சீட் கிடைக்காமல் ஓரங்கட்டப்பட்டார். இதனால் பாஜகவில் இணைந்தார். கடந்த 2021ஆம் ஆண்டு மதுரை வடக்கு சட்டசபை தொகுதியில் சரவணன் போட்டியிட சீட் அளிக்கப்பட்டது. பாஜக தலைமையிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அங்கிருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்த சரவணனுக்கு தற்போது மதுரை லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர் கழக மருத்துவ அணி இணைச் செயலாளராக உள்ளார்.
தேனி - நாராயணசாமி
ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் தேனி கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளராக உள்ளார்.
ராமநாதபுரம் - ஜெயபெருமாள்
ராமநாதபுரம் அதிமுக செல்வாக்குள்ள தொகுதிதான். ஏற்கனவே இங்கே 2014ல் அப்போது அதிமுக சார்பாக அன்வர் ராஜா வென்ற தொகுதிதான். அதுவும் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இங்கே அன்வர் ராஜா 2014ல் வென்றார். அதே மாவட்டத்தில் அதிமுகவிற்கு "வாய்ஸ்" உள்ள சில வேட்பாளர்கள் உள்ளனர். அந்த தொகுதியில் நன்கு அறிமுகமான முக்கியப்புள்ளிகள் இருக்கும் போது அங்கே உள்ளவர்களை நியமிக்காமல் விருதுநகரில் இருந்து ஜெயபெருமாளை கொண்டு வந்து இங்கே வேட்பாளராக அறிவித்துள்ளனர்.
கோவை - சிங்கை ராமச்சந்திரன்
ராமச்சந்திரன் கோவிந்தராசு என்றும் அழைக்கப்படும் சிங்கை ஜி. ராமச்சந்திரன் அந்த கட்சியின் சர்ப்ரைஸ் தேர்வாகி உள்ளார். அ.தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் செயலாளராக பணியாற்றிய இவர், மார்ச் 2016ல் அப்போதைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவால் அந்த பதவியில் நியமிக்கப்பட்டார். தற்போது அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவராக உள்ளார்.
பொள்ளாச்சி- கார்த்திக் அப்புசாமி
இவர் முன்னாள் எம்பியும் தற்போது மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனின் அக்கா மகன். இவர் ஆணைமலை ஒருங்கிணைந்த ஒன்றிய செயலாளராக உள்ளார். மாசாணியம்மன் திருக்கோவில் அறங்காவலர் குழுத் தலைவராகவும் இருந்துள்ளார்.
திருச்சி - கருப்பையா
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுக்கா குழந்திரான்பட்டு கிராமத்தை சேர்ந்தவர். ஒருங்கிணைந்த புதுகை மாவட்ட அதிமுக இளைஞரணி மற்றும் இளம் பெண்கள் பாசறையின் மாவட்டச் செயலாளராக உள்ளார். சிமெண்ட் , ஜல்லி வியாபாரம் செய்து வருகிறார். முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவர்.

பெரம்பலூர் - சந்திரமோகன்
தற்போது அ.தி.மு.க எம்.ஜி.ஆர் மன்ற பெரம்பலூர் மாவட்ட இணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். ஒப்பந்ததாரராக உள்ளார். 2016 ஆம் ஆண்டுதான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். திமுக எம்பியாக இருந்த செல்வராஜின் தம்பி துரைராஜின் மகன்.
மயிலாடுதுறை - பாபு
இவரது தந்தை பவுன்ராஜ் 1986 ஆம் ஆண்டு திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பவுன்ராஜ் தற்போது தனது மகனுக்கு மயிலாடுதுறை எம்பி சீட்டை பெற்றுவிட்டார்.
ஸ்ரீபெரும்புதூர் - டாக்டர் பிரேம் குமார்
திருவள்ளூர் மாவட்ட எம்ஜிஆர் மன்றத் தலைவராக இருந்து வரும் பூவை ஞானத்தின் மகன். காஞ்சிபுரத்தில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் மருத்துவம் படித்து விட்டு அங்கேயே மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். குன்றத்தூர் மாதா மருத்துவக் கல்லூரியிலும் பணியாற்றி வருகிறார்.
தருமபுரி - அசோகன்
தருமபுரி அதிமுக நகரச் செயலாளராக இருக்கும் பூக்கடை ரவியின் மகன். தருமபுரி நகராட்சி 33 ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினராக உள்ளார். தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உதவி பேராசிரியராகவும் அறுவை சிகிச்சை நிபுணராக உள்ளார்.
திருப்பூர் - அருணாசலம்
அருணாச்சலம் டிப்ளமோ படித்துள்ளார். 1977 ஆம் ஆண்டு பிறந்தவர். பெருந்துறை அருகே பெரிய வேட்டுவபாளையம் பகுதி விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளராக பணியாற்றி வருகிறார்.

நீலகிரி - லோகேஷ்
தமிழ்நாடு சட்டசபை முன்னாள் சபாநாயகரும் அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான தனபால் மகன்தான் லோகேஷ் தமிழ்ச் செல்வன். பி.காம் எம்பிஏ படித்துள்ளார். இவர் அதிமுக ஐடி பிரிவு அவிநாசி தொகுதி பொறுப்பாளராக பதவி வகித்துள்ளார். சேலத்தில் பிறந்த லோகேஷ் தமிழ்செல்வன் ஐடி நிறுவனம் நடத்தி வருகிறார்.
வேலூர் - டாக்டர் பசுபதி
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகில் உள்ள குக்கிராமத்தை சேர்ந்தவர். இவர் அரசு மருத்துவமனை மருத்துவராக இருந்தார். இவரது மனைவியும் மருத்துவர். வாணியம்பாடியில் கிளினீக் வைத்துள்ளார். இவர் அதிமுகவில் எந்த பதவியிலும் இல்லை. மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதால் அரசு மருத்துவர் பதவியிலிருந்து தற்போது விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.
திருவண்ணாமலை - கலியபெருமாள்
திருவண்ணாமலை தெற்கு ஒன்றியச் செயலாளரான கலியபெருமாள் தென்மாத்தூரை சேர்ந்தவர். தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அக்ரி.கிருஷ்ணமூர்த்தியின் தீவிர ஆதரவாளர். ஒன்றிய மாணவரணி இணை செயலாளர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி செயலாளர், அழகானந்தல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குநர் பதவிகளை வகித்தவர். ஒப்பந்ததாரரான இவர், மக்களவைத் தேர்தலில் முதன்முறையாக களம் இறங்குகிறார்.
கள்ளக்குறிச்சி - குமரகுரு
இவர் 2006 ஆம் ஆண்டு திருநாவலூர் எம்எல்ஏவாகவும் 2011, 2016 ஆம் ஆண்டுகளில் இரு முறை உளுந்தூர்பேட்டை எம்எல்ஏவாகவும் இருந்துள்ளார். 2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட விஜயகாந்தை தோற்கடித்தார். 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலிில் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு 5,256 வாக்கு வித்தியாசத்தில் திமுகவிடம் தோல்வி அடைந்தார். கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளராக உள்ளார்.
சிவகங்கை - சேவியர் தாஸ்
49 வயதாகும் சேவியர் எஸ்எஸ்எல்சி வர படித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே பனங்குடியை சேர்ந்தவர். 1997 ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்து பனங்குடி கிளைச் செயலாளராகவும் நடராஜபுரம் கூட்டுறவு சங்கத் தலைவராகவும் இருந்தார். கல்லல் ஒன்றியச் செயலாளர். கல் குவாரி நடத்தி வருகிறார்.
நெல்லை - ஜான்சி ராணி
நெல்லை தொகுதி முதலில் திமுகவிலிருந்து வந்த சிம்லா முத்துச்சோழனுக்கு வழங்கப்பட்டது. பிறகு கட்சிக்கு வந்த 15 நாட்கள் கூட ஆகவில்லை, அதற்குள் எம்பி சீட்டா என எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து ஜான்சிராணி வேட்பாளரானார். நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக இணை செயலாளராக ஜான்சிராணி உள்ளார். ஜான்சிராணி தற்போது திசையான்விளை பேரூராட்சி தலைவராகவும் உள்ளார்.
புதுச்சேரி - தமிழ்வேந்தன்
இவர் அரியாங்குப்பத்தை சேர்ந்தவர். 34 வயதானவர். இவர் மீனவர் சமூகத்தை சேர்ந்தவர். ரியல் எஸ்டேட், கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். புதுவை அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் மாநிலச் செயலாளராக இருக்கிறார்.
தூத்துக்குடி - சிவசாமி வேலுமணி
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குட்பட்டவர். தென் சென்னை வடக்கு மேற்கு மாவட்ட திநகர் பகுதி செயலாளராக உள்ளார். டிஎம்ஒய்எஸ் முடித்துள்ளார். சென்னை வடபழனியில் பாரம்பரியமாக மருத்துவமனை நடத்தி வருகிறார். இவர் அதிமுக தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.பி.சண்முகநாதனின் அக்கா மகன்.
கன்னியாகுமரி - பசிலியா நசரேத்
நாகர்கோவில் கீழராமன்புதூரை சேர்ந்தவர் பசிலியான் நசரேத். கோட்டாறு மறைமாவட்ட ஆயர் பேரவையின் உறுப்பினர், கோட்டாறு மறைமாவட்ட கடலோர அமைதி மற்றும் வளர்ச்சிக் குழு உறுப்பினர், குமரி மாவட்ட முக்குவர் மீனவர் சங்கத்தின் பொருளாளர் ஆகிய பொறுப்புகளை வகித்து வருகிறார். ஆர்.சி. மீனவர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் மீனவர் மற்றும் சிறுபான்மையினர் வாக்குகள் இவருக்கு கணிசமாக கிடைக்கும்.
-
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு










Click it and Unblock the Notifications