“பயந்தவன் கூட எதிர்க்கத் தொடங்கிவிட்டான்”- அதிமுகவின் எதிர்காலம்? ஜெ. உதவியாளர் பூங்குன்றன் கணிப்பு!
சென்னை : அதிமுகவின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது பற்றி ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளராக பணிபுரிந்த பூங்குன்றன். ஓபிஎஸ்ஸை ஈபிஎஸ்ஸும், ஈபிஎஸ்ஸை ஓபிஎஸ்ஸும் எதிர்த்துக் கொண்டிருக்கும் வரை அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறிதான் என்கிறார் பூங்குன்றன்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியால், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து, அதிமுகவில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்பட்டு அதில், எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதற்கான ஆவணங்கள் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையமும் அவரை பொதுச்செயலாளராக அங்கீகரித்துள்ளது.

நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கிய நிலையில், தனது பலத்தை நிரூபிக்க திருச்சியில் மாநாடு நடத்தினார் ஓ.பன்னீர்செல்வம். தொடர்ந்து மக்கள் மன்றத்தை நாட முடிவெடுத்துள்ள ஓபிஎஸ், கொங்கு மண்டலம் மற்றும் தென் மண்டலத்தில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளார். அதேபோல் தனது பலத்தை நிரூபிக்க மதுரையில் மாநாடு நடத்த ஏற்பாடுகளைச் செய்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுகவுக்கு என இருக்கும் செல்வாக்கை வரும் 2024 நாடாளுமன்ற மற்றும் 2026 சட்டமன்ற தேர்தலில் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கும் பாஜக தலைமை, ஓபிஎஸ்ஸுடன் இணைந்து செயல்படுமாறு எடப்பாடி பழனிசாமியை பலமுறை அறிவுறுத்தி விட்டது. ஆனாலும், பிடிவாதமாக இருந்து வருகிறார் ஈபிஎஸ். சமீபத்தில் எடப்பாடி டீம் டெல்லி சென்றிருந்த போதும் அமித் ஷா இதுகுறித்துப் பேசியதாகத் தெரிகிறது.
அதிமுகவின் எதிர்காலம் சிறக்க, அதிமுகவில் பிரிந்து சென்றவர்கள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பது ஓபிஎஸ், சசிகலா தரப்பினர் மட்டுமல்லாது பொதுவான அதிமுக தொண்டர்களின் கருத்தாகவும் இருக்கிறது. இந்நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளராகப் பணிபுரிந்த பூங்குன்றன், அதிமுகவில் ஒற்றுமையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
கேள்வி பதில் என்னும் பெயரில் பூங்குன்றன் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவில், "அதிமுக-வின் எதிர்காலம் எப்படி? எடப்பாடி பழனிசாமியை ஓ.பன்னீர்செல்வமும், ஓபிஎஸ்ஸை ஈபிஎஸ்ஸும் எதிர்த்துக் கொண்டிருக்கும் வரை அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறிதான். எதிர்க்கட்சியை முழுமையாக எதிர்க்கத் தொடங்கினால்தான் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். அண்ணன், தம்பி ஒற்றுமையாக இருக்கும் வரை ஊரில் எதிர்க்கத் தயங்குவார்கள்.

அதுவே இருவரும் பிரிந்து விட்டார்கள் என்றால் பயந்தவன் கூட எதிர்க்கத் தொடங்கிவிடுவான் என்பது நாம் பார்த்துக் கொண்டிருக்கும் உண்மை! பிரிந்து கிடப்பதால் எதிர்க்க வேண்டியவர்களை எதிர்க்க முடியாமல், நமக்கு வேண்டியவர்களை எதிர்த்துக் கொண்டிருக்கிறோம். இது மாறும் போது எதிர்காலமும் மாறும்!" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications