அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன?
சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மக்கள் நீதி மய்யம், ஒரே ஒரு சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்த மனநிறைவோடு தேர்தல் போட்டியிலிருந்து விலகிக் கொண்டுள்ளது. திமுக உடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்த கமல் கடைசியில் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளார்.
கடந்த 2021 தேர்தலில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு கமல்ஹாசன் ஒதுக்கிய 40 தொகுதிகளில் 3 தொகுதிகளை வேண்டாம் எனக் கூறி திரும்ப அளித்தார் சரத்குமார். இந்த முறை 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சில வாரங்களாக திமுகவுடன் தொடர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுவந்த கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் இந்தத் தேர்தலிலேயே போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறார்.

சென்ற முறை 40 தொகுதிகளை மநீம கூட்டணியில் பெற்ற சரத்குமார், அவரும் அவரது மனைவி ராதிகாவும் போட்டியிடப் போவதில்லை எனப் பின்வாங்கினார். இம்முறை அதைக் கமல்ஹாசன் செய்திருக்கிறார். ஒவ்வொரு தேர்தல்களிலும் இப்படியான நகைச்சுவை காட்சிகள் அரங்கேறும். தொடர்ந்து கமல் கட்சியிலேயே இவ்வாறான காட்சிகள் அரங்கேறி வருவதுதான் அபூர்வமாகப் பார்க்கப்படுகிறது.
மக்கள் நீதி மய்யம் என்ற புதிய கட்சியை கமல்ஹாசன் தொடங்கி 9 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. கட்சி அரசியல் களத்தில் அடி எடுத்து வைத்த இரண்டாவது தேர்தலிலேயே பெரிய சறுக்கலைக் கண்டுள்ளது. கமல்ஹாசனுக்கு இது புதுமை அல்ல. அவரால் 2021 தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வானதி சீனிவாசனையே தோற்கடிக்க முடியவில்லை. நட்சத்திர வேட்பாளரான அவர், தமிழ்நாட்டில் அதிகம் செல்வாக்கு இல்லாத பாஜக வேட்பாளரால் தோற்கடிக்கப்பட்டார்.
எடுபடாத 'செண்ட்ரிசம்'
அதற்குக் காரணம், கோவை தொழிலதிபர்கள் நிறைந்த பகுதி. படித்தவர்கள் மிகுந்த மாவட்டம். அங்கே 1998 முதல் பாஜகவின் தாக்கம் அதிகம் உண்டு. எல்.கே.அத்வானி 'குறி'வைக்கப்பட்ட பகுதி. வலதுசாரி ஆதிக்கம் வலுவாகக் கட்டமைக்கப்பட்ட மாவட்டம். அங்கே போய், தான் வலது என்றும் சொல்லிக் கொள்ள முடியாமல் இடது என்றும் சொல்லிக் கொள்ளாமல் 'மய்யம்' என ஒரு கோட்பாட்டைப் பேசி வாக்காளர்களை மேற்கொண்டு குழப்பி, தானும் குழம்பினார் கமல்.
செய்தியாளர்கள் விளக்கம் கேட்டபோது, 'தெற்கு ஆசியாவிலேயே 'செண்ட்ரிசம்' அரசியல் பேசும் ஒரே கட்சி மநீக" என்றார். 'ஒரு அநீதி நடத்தால் மக்கள் நீதி மய்யம் எந்தப் பக்கம் நிற்கும்? பாதிக்கப்பட்டவர் பக்கமா? பதிப்பை ஏற்படுத்திய பக்கமா? 'நடுநிலை' என்று உலகில் ஒன்று இல்லவே இல்லை" என்றார்கள் இடதுசாரிகள்.
'ஊடக உந்துதலுக்காகக் கட்சி ஆரம்பிக்க முடியாது' என்றவர் 2019 மக்களைத் தேர்தலுக்கு முன்பாக பிப்ரவரி 21, 2018இல் ரஜினியை முந்திக் கொண்டு கட்சி ஆரம்பித்தார். அதன் பின் டார்ச் லைட் அரசியல் என டிஜிட்டல் அரசியலில் அதிகம் கவனம் செலுத்தினார். டிவியை உடைத்தார். தான் கட்டும் வரிப்பணத்தில் அரசியல்வாதிகள் கொள்ளை அடிக்கிறார்கள் என்றார். '1 லட்சம் கோடியாக இருந்த கடன் சுமை இன்று திடீரென்று 5.7 லட்சம் கோடியாக உயர்ந்தது எப்படி?' என நியாயம் கேட்டார். மக்கள் வரிப்பணம் ஊழலாகப் போய்ச் சேருகிறது என்றார்.
உண்மைதான். அதிகம் வரி கட்டக்கூடிய நடிகர்களின் பட்டியலில் கமல் உள்ளார். அவர் கோவையில் போட்டியிட்டபோது அவர் அளித்த பிரமாண பத்திரத்தில் அசையும் சொத்துகள் 45 கோடி ரூபாய் உள்ளது என்றார். வீடு, கடை, விவசாய நிலம் என அசையா சொத்துகள் 131 கோடி. சென்னையில் வாடகைக்கு விடப்பட்டிருக்கும் 2 கட்டடங்கள் மதிப்பு 19.5 கோடி. லண்டனிலும் சொத்து உண்டு என்றார். மாநிலத்தில் பணக்கார வேட்பாளரான கமல் தேர்தலில், தோற்றுச் செல்ல காசாக மாறினார்.
மக்கிப் போன மநீம
வானதி ஸ்ரீனிவாசன் வாங்கிய வாக்குகள் 53,209. கமலுக்கு விழுந்தவை 51,481. வித்தியாசம் 1,728. சுமார் 2 ஆயிரம் பேர் வாக்குகளை அவரால் கூடுதலாகப் பெற முடியவில்லை. 'டார்ச் லைட்' வெளிச்சத்தின் பவர் அவ்வளவுதான்.
கடந்த முறை தனிச் சின்னத்தில் நின்று ஏதோ 50 சீட்டுகளை வென்றுவிட்ட தோரணையில் இந்த முறை 'உதயசூரியன்' சின்னத்தில் நிற்பது வேண்டாம் என்றே போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் கையில் பிடித்துக் கொண்டிருந்த டார்ச் லைட் அவரையே கரை சேர்க்கவிடாமல் கவிழ்த்தது. 'களத்துக்கு வாங்க' எனப் போன முறை வீடியோ போட்டு இளைஞர்களை அழைத்தவர், இப்போது களமே வேண்டாம் என்கிறார்.
அவர் கட்சி தொடங்கிய போது உடன் இருந்த பலர் இன்றைக்கு காணவில்லை. டாக்டர் மகேந்திரன் திமுகவுக்குப் போய்விட்டார். சினேகன் கட்சியில் இருக்கிறாரா? என்ற அளவில்தான் அவரது இருப்பு உள்ளது. முருகானந்தம் என்பவர் தேர்தல் முடிந்த அடுத்த சில மாதங்களில் 'கட்சியில் ஜனநாயகம் இல்லை' என்று பறந்துவிட்டார். துணைத் தலைவர் மெளரியாவை காணோம்.
ஸ்ரீப்ரியா, கமிலா நாசர், பொன்ராஜ், பாரதி கிருஷ்ணகுமார் என யாரையும் காணவில்லை. தேர்தல் வியூக வகுப்பாளராக சுரேஷ் ஐயர் இருந்தார். அவர் வியூகம் ஒன்றுகூடக் கமலை காப்பாற்றவில்லை என்று கட்சியை விட்டு வெளியேறிய மகேந்திரன் பேசியிருந்தார். கமல் கட்சியில் அரசியல் ஆலோசகராக இருந்த பழ.கருப்பையா, இந்த முறை எடப்பாடி பழனிசாமியை ஆதரித்துப் பேசிவருகிறார்.
கமல் செய்வது காந்தி அரசியலா?
ஊழல் மலிந்துவிட்டதாகக் கூறி கட்சி தொடங்கிய கமல்ஹாசனுக்குத் தேர்தல் வியூக வகுப்பாளராக முதலில் அமர்த்தப்பட்டவர் பிரசாந்த் கிஷோர். பின் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்த கமல், மறைமுகமாக தன் வீட்டிலேயே தனியான ஒரு வியூக கம்பெனி தொடங்கியதாகவும் அது இறுதியில்தான் தனக்கே தெரியும் என்று உடன் பயணித்த டாக்டர் மகேந்திரனே குறிப்பிட்டார்.
சமூகநீதி, இந்தி எதிர்ப்பு, திராவிடம் எனப் பேசியவர் அதற்கு முற்றிலும் எதிரான காந்தியைத் தனது கொள்கைத் தலைவராக முன்வைத்து 'மறவோம்' நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். காந்தி இந்தியை ஆதரித்தவர். அவர், தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தியவர். ஆடம்பர வாழ்க்கைக்கு எதிரானவர். தற்சார்பு பொருளாதாரம் பேசியவர். நகரமயமாக்கலை எதிர்த்து கிராம வாழ்வை ஊக்குவித்தவர்.
டெல்லியைத் தலைநகரமாக வைத்து காங்கிரஸ் இயங்கிய காலத்தில், பீகாரில் உள்ள குக்கிராமத்திற்குப் போய் ஆசிரமம் ஆரம்பித்தவர். அகமதாபாத் அருகே சபர்மதி ஆசிரமத்தைத் தொடங்கியவர். கமல்ஹாசன் 'ஆழ்வார்பேட்டை ஆண்டவர்' என அவரது ரசிகர்களால் போற்றப்படுகிறார். காந்தி தனி மனித வழிபாட்டைத் துளியும் விரும்பாதவர். தன்னை வழிபடுவதைக் கூடாது என கண்டித்தவர்.
அவர் நடத்தியது தண்டி யாத்திரை. கமல்ஹாசன் 'பாரத் ஜோடோ யாத்ரா'வில் கோட் சூட் போட்டு உட்கார்ந்து காந்தி என் குருநாதர் என்கிறார். இதுதான் அவர் சொன்ன 'நேர்மையின் ஆட்சி; புது மாற்றத்தின் ஆட்சி' எனப் புரிந்துகொள்வதா?
திமுகவை எதிர்த்த கட்சி தொடங்கிய கமல் இன்று தேமுதிகவைவிடக் கீழே சென்றுள்ளார். அக்கட்சிக்கு ஒரு ராஜ்ய சபா, 10 தொகுதிகளை வழங்கியுள்ளது திமுக. இவர் புதியதாக இணைந்த பெட்டிக்காக இவர் கழன்றுகொண்டுள்ளார்.
கட்சியின் கொள்கையைக் கேட்டபோது, 'சொல்ல மாட்டேன்; சொன்னால் காப்பி அடித்துவிடுவார்கள்" என நூதன விளக்கம் தந்தவர். இப்போதும் அதே பாணி விளக்கம் அளித்துள்ளார். 180 தொகுதிகளில் களம் கண்ட கட்சி, இன்று கண்ணுக்கே தெரியாமல் திமுகவில் கரைந்துவிட்டது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
2021இல் "என் உயிர் உள்ளவரை அரசியலில் இருப்பேன்; அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும்" என்றார். அடுத்த தேர்தலிலேயே அவர் கட்சி களத்தில் காணமுடியாமல் மறைந்துவிட்டது.
எழுதியவர்: கடற்கரய்
-
திமுக வேட்பாளர் நிறுவனத்தில் ஐ.டி ரெய்டு.. பரபரக்கும் கரூர்! -
ராகுல் காந்தி தமிழகத்திற்கு வர மறுத்துவிட்டாரா? பிரச்சாரம் தாமதமாவது ஏன்? - கிரிஷ் சோடங்கர் விளக்கம் -
தவெக மீதான தாக்குதல்கள்: விஜய் ‘இமேஜை' பாதித்துள்ளதா? களம் சொல்வது என்ன? -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
“வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை அவதூறாகப் பேசி மிரட்டி வருகின்றனர்”- விஜய் பரபரப்பு குற்றச்சாட்டு -
5 பவுன் தங்கம்.. ஒரு லட்சம் ரொக்கம்! பரிசு மழை அறிவித்த ஓபிஎஸ்.. போடி தொகுதி திமுகவினர் உற்சாகம் -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எப்படி வழங்கப்படும்? இப்போதே திட்டத்தை கையில் எடுக்கும் திமுக? கசிந்த தகவல்! -
கையில் கறுப்பு-சிவப்பு கயிறு.. பாக்கெட்டில் ஸ்டாலின் படம்! தென்மாவட்டங்களில் அடித்து தூக்கும் ஓபிஎஸ் -
மீண்டும் டிஆர்பி ராஜா அமைச்சர்..? கோரஸாக வந்த குரல்.. பிரச்சாரத்திலேயே உறுதி கொடுத்த உதயநிதி! -
"சாக்கடைக்கு சமமாக வந்து விழுகிற எடப்பாடியின் வார்த்தைகளுக்கு பாடம் புகட்டுவோம்”.. கொதித்த ஸ்டாலின்! -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா?












Click it and Unblock the Notifications