யூடியூபர் இர்ஃபான் விவகாரத்தில் தமிழக அரசு அடுத்து எடுக்க போகும் நடவடிக்கை என்ன? வெளியான தகவல்
சென்னை: பிரபல யூடியூபர் இர்ஃபான் சட்ட விதிகளை மீறி, பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை அறிவித்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து மத்திய அரசிடம் வழிகாட்டுதல்களை கோரியுள்ளது தமிழ்நாடு. மத்திய அரசின் வழிகாட்டுதல் படி இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல யூடியூபர் இர்ஃபானுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. அவரது மனைவி கர்ப்பமாக இருந்ததால், கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிய விரும்பிய இர்ஃபான், அதற்காக துபாய் சென்று அங்குள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்து தெரிந்து கொண்டிருக்கிறார்..

இந்நிலையில், கடந்த மே 19-ம் தேதி அன்று தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை அறிவித்து தனது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை இர்ஃபான் வெளியிட்டிருந்தார். அதனை ஒரு விழாவாக நடத்தி வீடியோவை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ வெளியான அன்றே பெரும் சர்ச்சையாக மாறியது. ஏனெனில் இந்தியாவில் கருவில் இருக்கும் பாலினத்தை அறிவதும், அறிவிப்பதும் தடை செய்யப்பட்டிருக்கிறது.
இப்படியான சூழலில் இர்ஃபான் தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை வெளிப்படையாக அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. யூடியூபர் இர்ஃபான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிட்டு அவரது வீடியோவையும் வைரலாக்கினர்.
ஒரு கட்டத்தில் இந்த விவகாரம் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு வந்தது. இர்ஃபான் செய்தது சட்டவிரோதம் என்று அறிவித்த அதிகாரிகள், அவருக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பினர். மேலும் வீடியோவை யூடியூப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று யூடியூப் நிறுவனத்திற்கு தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனிடையே தானாகவே
யூடியூப் சேனலில் இருந்து அந்த வீடியோவை இர்ஃபான் நீக்கினார்.
மேலும் கடந்த மே 21-ம் தேதி மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் இளங்கோ மகேஷ்வரன், பாலினத் தேர்வை தடை செய்தல் சட்ட விதிகளை மீறியதற்காக இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரித்தார். அப்போது நேரில் ஆஜரான இர்ஃபான், "நான் செய்தது தவறு. என்னை மன்னித்துவிடுங்கள்" என்று மன்னிப்புக் கடிதம் வழங்கினார். மன்னிப்புக் கடிதம் திருப்திகரமாக இருந்ததால், அந்தக் கடிதத் அதிகாரிகளால் ஏற்றுக் கொண்டார்கள்.
இது தொடர்பாக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் இளங்கோ மகேஷ்வரன் இதுபற்றி கூறும் போது, இந்தியாவில் இந்த விவகாரம் நடக்கவில்லை. துபாயில் நடந்துள்ளது. இது முற்றிலும் புதிதாக இருப்பதால், என்ன செய்யலாம் என்று வழிக்காட்டுதல்கள் வழங்கக் கோரி மத்திய அரசிடம் கேட்டிருக்கிறோம். மேலும் இந்தியாவில் இருந்து யாராவது கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை அறிந்துகொள்ள பரிசோதனை செய்ய வந்தால், பரிசோதனை செய்யக்கூடாது என்று மற்ற நாடுகளுக்கும் அறிவுறுத்துமாறும் நாங்கள் கோரிக்கை வைத்திருக்கிறோம்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications