தமிழ்நாட்டைச் சுற்றிச் சுற்றி 8 போட்ட முதல் பிரதமர் இவர்தான்! பிளான் என்ன தெரியுமா?
சென்னை: வேறு எந்த பிரதமரையும் விடத் தேர்தல் பிரச்சாரத்திற்காகத் தமிழ்நாட்டுக்கு 8 முறை வருகை தந்துள்ளார் பிரதமர் மோடி. இதுவரை வேறு எந்த பிரதமர்களும் இத்தனை முறை தமிழகம் வந்ததில்லை.
நாட்டின் மிகப் பெரிய ஜனநாயக திருவிழா என்று சொல்லக் கூடிய மக்களவைக்கான முதற்கட்ட தேர்தல் நாடு முழுவதும் நாளை நடைபெற உள்ளது.

அரசியல் கட்சிகளின் பரப்புரை என்பது இந்த முறை மிகக் கடுமையாக இருந்துள்ளது. குறிப்பாகத் தமிழ்நாடு இதுவரை பார்க்காத ஒரு அதிசயத்தைக் கண்டுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்திற்காக மட்டும் பிரதமர் மோடி இதுவரை 8 முறை தமிழ்நாட்டுக்கு வருகை தந்துள்ளார்.
இந்த 2024 ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் 1 ஆம் தேதி திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காகப் பிரதமர் மோடி தமிழ்நாடு வந்திருந்தார். இந்தப் பல்கலைக் கழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாகப் பட்டமளிப்பு விழா நடைபெறவே இல்லை.

இதனால் 2 லட்சத்து 81 ஆயிரம் மாணவர்கள் பட்டம் பெறாமலே இருந்து வந்தனர். மேலும் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார்.
அதனைத் தொடர்ந்து இதே ஜனவரி மாதம் 19 ஆம் தேதி பிரதமர் தமிழ்நாட்டிற்கு வந்தார். தமிழ்நாட்டு அரசு விளையாட்டுத்துறை சார்பாக நடைபெற்ற கேலோ இந்தியா விளையாட்டு நிகழ்ச்சிகளின் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக வருகை தந்தார்.
பிரதமர் மோடியை மிகக் கடுமையாக விமர்சித்து வந்த திமுக அரசு சார்பாக நடைபெற்ற விழாவில் அவர் கலந்துகொள்வதற்காக அவர் வந்திருந்தார். அதுவே மிகப் பெரிய அரசியல் ட்விஸ்ட் ஆகப் பார்க்கப்பட்டது.
அதன் பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி 2 நாள் பயணமாக மோடி தமிழ்நாட்டுக்கு வந்தார். அவர் திருப்பூரில் நடைபெற்ற 'என் மண் என் மக்கள்' யாத்திரையின் நிறைவு விழாவில் பங்கேற்றார்.
இதே வேகத்தோடு மீண்டும் உடனடியாக பிப்ரவரி 28 ஆம் தேதி பிரதமர் மோடி தூத்துக்குடிக்கு வந்தார். அங்கே ரூ.17,300 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது மத்திய அரசு கொண்டு வரும் பல நல்ல திட்டங்களை திமுக அரசு தடுப்பதாக அவர் குற்றஞ்சாட்டிப் பேசினார்.

பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக மார்ச் மாதம் 16 ஆம் தேதி கோவை வந்தார். அங்கே நடைபெற இருந்த 'ரோடு ஷோ'வுக்கு தமிழகக் காவல்துறை அனுமதி மறுத்திருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் சில மாறுதல்களுடன் அனுமதி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி, கோவையில் நடைபெற்ற ரோடு ஷோவில் கலந்துகொண்டார்.
இந்த மாதம் 15 ஆம் தேதி பிரதமர் மோடி நெல்லைக்கு வந்தார். அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர்பட்டியில் பரப்புரையில் அவர் ஈடுபட்டார். இதற்காக அவர் திருவனந்தபுரத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்தார்.
இந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி மாலை மீண்டும் சென்னை வந்தார் மோடி. அப்போது அவர் சென்னை தி நகரில் நடைபெற்ற பிரம்மாண்ட ரோடு ஷோவில் கலந்து கொண்டார். இதற்கு முன்னதாக வேலூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பாஜக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்குகளைச் சேகரித்தார்.
சென்னை பாண்டி பஜாரில் நடைபெற்ற வாகன பேரணியில் அவர் தமிழர்களின் பாரம்பரிய உடையான பட்டு வேட்டி பட்டுச் சட்டை அணிந்து வந்து மக்களைச் சந்தித்தார். அப்போது அவர் வாகனத்தில் நின்றவாறே கையில் தாமரை சின்னத்தைக் காட்டி வாக்குச் சேகரித்தார்.
இத்துடன் அவர் தமிழ்நாட்டுக்கு 7முறையாக வருகை தந்திருந்தார். சென்னை மழை வெள்ளத்தில் மூழ்கித் தத்தளித்த போது, கண்டு கொள்ளாத பிரதமர் இப்போது ரோடு ஷோ நடத்திவருகிறார் என்று திமுகவினர் அவரை விமர்சித்திருந்தனர்.
அதற்குப் பதிலடி தரும் வகையில் மோடி, அவரது 'எக்ஸ்' தளத்தில், " "சென்னை என் மனதை வென்றது. இந்த ஆற்றல் மிக்க நகரத்தில் இன்றைய ரோடு ஷோ என் நினைவில் என்றும் நிலைத்திருக்கும்.
மக்கள் சேவையில் கடினமாக உழைக்கவும், நமது தேசத்தை மேலும் வளர்ச்சியடையச் செய்யவும் மக்களின் ஆசிகள் எனக்கு வலிமையைத் தருகின்றன.
சென்னையில் காணப்படும் இந்த உற்சாகம் தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் பெரிய அளவில் ஆதரவளிக்கத் தயாராக உள்ளது என்பதைக் காட்டுகிறது.
பேரிடர்களின் போது நம்மைச் சிறப்பாக்கத் தயார்படுத்திக் கொள்வது போன்ற முக்கிய பிரச்சினைகளில் சென்னை எதிர்கொள்ளும் இடர்பாடுகளைக் களைய நாங்கள் முன்னுரிமை அளிப்போம்" என்று பதிவிட்டிருந்தார்.
அடுத்து நாள் 10 ஆம் தேதி கோவை விமான நிலையம் சென்றடைந்த மோடி, மேட்டுப்பாளையத்திற்கு 3 ஹெலிகாப்டர்களில் சென்று இறங்கினார். அங்கே நடைபெற்ற பாஜக பிரச்சார கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.
தேனியிலுள்ள லட்சுமிபுரம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், இவரது வருகையை விமர்சித்துப் பேசினார்.
'அவர் ஏதோ ஷோ காட்ட வருகிறார் என்று நான் சொல்லவில்லை. பிரதமர் மோடியே ரோடு ஷோ காட்டுகிறேன் என்றுதான் சொல்லி இருக்கிறார்' என்று கிண்டலாக விமர்சித்திருந்தார்.
இந்த மக்களவைத் தேர்தலை ஒட்டி மட்டும் பிரதமர் மோடி 8ஆவது முறையாகத் தமிழ்நாட்டுக்கு வருகை தந்தார்.
இது குறித்து மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன், "இதற்கு முன்பாக பாஜக தமிழ்நாட்டில் இந்த அளவுக்குத் தேர்தல் களத்தில் வேகம் காட்டியது கிடையாது. நான் பார்த்தவரை இதுவே முதல்முறை.
வரலாற்றிலேயே இதுவரை எந்தப் பிரதமரும் இத்தனை முறை தேர்தல் பிரச்சாரத்திற்காகத் தமிழ்நாட்டுக்கு வந்ததில்லை. கிட்டத்தட்ட 8 முறை வந்துள்ளார் மோடி. ஆக இதுவே முதன்முறை.
திமுகவுக்குக் காங்கிரஸ் அமைச்சரவையில் 13 அமைச்சர்கள் இருந்தனர். அப்போது கூட பிரதமர் மன்மோகன் சிங் இத்தனை முறை தமிழகம் வந்ததில்லை.
இந்தியா சுதந்திரம் பெற்றது முதல் வேறு எந்த பிரதமரும் இத்தனை தடவை யாருமே வந்ததில்லை. ஆனால், அதற்கு எல்லாம் மக்கள் என்ன மாதிரியான பதிலைக் கொடுக்கப் போகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால், தேர்தல் விதிகளின் படி நான் சொல்லாமல் தவிர்க்கிறேன்" என்கிறார்.
ஆக, 2026 சட்டமன்றத் தேர்தல் களம் கட்டாயம் வேறு மாதிரி இருக்கப் போகிறது. அதற்கான அட்சரம்தான் பிரதமர் மோடியின் வருகை. தமிழ்நாடு சட்டமன்றத்தை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்பதற்காக இப்போது பாஜக வியூகம் வகுத்துச் செயல்படத் தொடங்கி உள்ளது. அதற்கான முதற்கட்டம்தான் பிரதமரின் ரோடு ஷோக்கள்!












Click it and Unblock the Notifications