சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்.. இப்படி ஒரு காரணமா?
சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளத்தில் மீன்கள் செத்து மிதந்த காரணத்தால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம்..
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த குளம் கோயிலின் மேற்கு வாசல் பகுதியில் பிரம்மாண்டமாக அமைந்திருக்கிறது. இந்த கோயில் குளத்தை சித்திரை குளம் என்று அழைப்பார்கள். இந்த குளம் தான் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் அடையாளங்களில் ஒன்று. மயிலாப்பூர் பகுதி மக்ககள் விருப்பமான இடமும் கூட..

இந்நிலையில் இன்று கபாலீஸ்வரர் கோயில் தெப்பக்குளத்தில் உள்ள ஆயிரக் கணக்கான மீன்கள் இறந்து மிதந்தன. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கோயில் நிர்வாகத்தினர் மீன்வளத்துறை, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் இந்து சமய அறநிலையத் துறைகளுக்கு உடனடியாக தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாநகராட்சி பணியாளர்கள் இறந்த மீன்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். கோயில் குளத்தில் உள்ள மீன்களை அகற்றிய நிலையில், மீன்கள் நோய் வாய்ப்பட்டுள்ளதா, குளத்தில் இரசாயனம் கலக்கப்பட்டுள்ளதா? குளத்தில் உள்ள நீரில் ஏதாவது நச்சுத்தன்மை உள்ளதா அல்லது கோயில் குளத்தில் உள்ள மீன்களுக்கு பக்தர்கள் அளித்த உணவால் மீன்கள் இறந்தனவா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில், மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள் .
இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "இன்று காலை 7 மணியளவில், கோயில் நிர்வாகம் சார்பில், தேனாம்பேட்டை மண்டல அலுவலகத்திற்கு மீன்கள் இறந்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனால் 25 பணியாளர்களுக்கு மேல் மயிலாப்பூர் குளத்தில் இறந்த மீன்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டோம்..
இறந்த மீன்களால் துர்நாற்றம் வீசும் என்பதுடன், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்பதால் உடனடியாக அப்பகுதியில் குளோரின் மற்றும் பீளிச்சீங் பவுடர் உடனடியாக தெளிக்கப்பட்டன. இப்போதைக்கு பக்தர்கள் யாரும் குளத்தில் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளோம். இந்த இடத்தில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வார்கள் என்றார்.
தை மாதம் தெப்ப உற்சவம் நடைபெறவுள்ள நிலையில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் தெப்பக் குளத்தில் மீன்கள் இறந்துள்ள சம்பவம் பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்த சம்பவம் குறித்து மலேசியாவில் இருந்த வந்த தம்பதி கூறுகையில்,சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு வந்தது மகிழ்ச்சியாக உள்ளது . ஆனால் கோயில் குளத்தில் மீன்கள் செத்துக்கிடப்பதால் ரொம்ப துர்நாற்றமாக உள்ளது. இதனை சுத்தம் செய்து கோயில் நிர்வகித்தால் இன்னும் நிறைய பக்தர்கள் வருவார்கள்..
கபாலீஸ்வரர் கோயில் குளத்தில் விளக்கு போடுவதால், அந்த எண்ணெய் எல்லாம் குளத்தில் போய் கரைந்து அதனால் மீன்கள் இறந்து போய் இருக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே கோயில் நிர்வாகம் விளக்கு ஏற்றுவதற்கு என்று தனியாக ஒரு இடத்தை ஏற்பாடு செய்ய வேண்டும். குளத்தில் விளக்கு ஏற்ற அனுமதிக்கக்கூடாது. ஏனெனில் எண்ணெய் குளத்தில் கலப்பது நல்லது அல்ல.. வெளிநாட்டவர்கள் அதிகம் பேர் வந்து செல்லும் இந்த கோயிலை சிறப்பாக பராமரிக்க வேண்டும்." என்றார்கள்.












Click it and Unblock the Notifications