"மீண்டும் மஞ்சப்பை.!" தமிழ்நாடு அரசு செஞ்ச காரியம்.. கவலையில் சமூக ஆர்வலர்கள்! என்னாச்சு தெரியுமா
சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.. அதன்படி தொடங்கப்பட்டுள்ள மீண்டும் மஞ்சப்பை திட்டம் குறித்து சமூக ஆர்வலர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
பருவநிலை மாற்றத்திற்கு மிகப் பெரிய எதிராக இருப்பது பிளாஸ்டிக் தான். ஏனென்றால் பிளாஸ்டிக் பல நூறு ஆண்டுகள் ஆனாலும் மக்காது. உலகில் மக்கள் வசிக்காத தீவுகளில் கூட பிளாஸ்டிக் புகுந்துவிட்டன.
அதாவது கடலில் போடப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் இப்படி ஆளே இல்லாத தீவுகளிலும் சென்று சேர்கிறது. இதனால், மனிதர்களுக்கு மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு விலங்குகளுக்கும் மோசமான பாதிப்பு ஏற்படுகிறது.

பிளாஸ்டிக் பயன்பாடு
பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க உலகெங்கும் பல்வேறு நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாடு ஏற்கனவே ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டன. இது தவிர வேறு பல திட்டங்களும் கூடக் கொண்டு வரப்பட்டன. அதில் முக்கியமானது மீண்டும் மஞ்சப்பை. இத்திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்து மஞ்சப்பை போன்ற துணிப்பைகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் வேறு பல திட்டங்களும் கூட முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மீண்டும் மஞ்சப்பை
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் இந்த "மீண்டும் மஞ்சப்பை" திட்டத்தின் ஒரு பகுதியாக, மாவட்டத்தின் கிராமப்புறங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் ஒரு பகுதியாகக் கடந்த 2022 மே மாதம் பிளாஸ்டிக்கை வாங்கும் திட்டம் இதற்காக ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை, பெரம்பலூர் ஆகிய இடங்களில் சிறப்பு அலகுகள் அமைக்கப்பட்டன. இதில் ஒவ்வொரு யூனிட்டிலும் டஸ்ட் ரிமூவர், வெயிட்டிங் மற்றும் த்ரெடிங் மிஷின்கள் இருந்தன. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை அகற்றுவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

என்ன திட்டம்
திடக்கழிவு மேலாண்மை மூலம் சேகரிக்கப்படும் கழிவுகளில் இருந்து பிளாஸ்டிக் கவர்கள் பிரிக்கப்பட்டு, அவை இந்த யூனிட்டுகளுக்கு கொண்டு வரப்படுகிறது. துப்புரவுப் பணியாளர்களிடம் இருந்து ஒரு கிலோ பிளாஸ்டிக் 5 ரூபாய்க்கு வாங்கப்படுகிறது. அதை இந்த யூனிட்களில் பிராசஸ் செய்கிறார்கள். மேலும், நேரடியாகப் பொதுமக்களும் கூட பிளாஸ்டிக்கை கொண்டு வரலாம். அவர்களிடம் இருந்தும் கிலோ 5 ரூபாய் கொடுத்து பிளாஸ்டிக் வாங்கப்படுகிறது. இங்கு கலெக்ட் செய்யப்படும் பிளாஸ்டிக்கை மட்டும் தனியாகப் பிரித்து அவற்றை அரைத்துவிடுகிறார்கள்.

எதற்குப் பயன்படும்
இப்படி அரைக்கப்படும் பிளாஸ்டிக், புதிய சாலைகள் அமைக்கப் பயன்படுத்தப்படுகிறது. இதுவரை பல கிராமங்களில் இந்த பிளாஸ்டிக் மூலம் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், துப்புரவு ஊழியர்களுக்கும் இது பெரியளவில் பயன் தருகிறது. இருந்த போதிலும் கிராமப்புறங்களில் இத்திட்டம் பற்றிய விழிப்புணர்வு போதுமானதாக இல்லை. என்ன தான் மிகச் சிறப்பான திட்டமாக இருந்தாலும் கூட, இதற்கு போதிய விழிப்புணர்வு இல்லையென்றால் பெரியளவில் பயன் தராது. எனவே, இந்த பிளாஸ்டிக் வாங்கும் திட்டம் குறித்து மாவட்ட அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.. இல்லையென்றால் இதற்கு பயனே இருக்காது எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கோரிக்கை
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், "இந்தத் திட்டம் குறித்து கிராமங்களில் முறையாகப் பிரசாரம் செய்ய வேண்டும். இதன் மூலம் வீடுகள் மற்றும் கிராமங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு குறைய வாய்ப்புள்ளது. மேலும், இதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு துப்புரவுப் பணியாளர்களுக்கு ஊதியம் கொடுக்க பயன்படுதலாம். இதுபோன்ற மறுசுழற்சி ஒரு நல்ல திட்டம் தான் என்றாலும் கூட, பிளாஸ்டிக் உற்பத்தியையும் நாம் தடை செய்ய வேண்டும். அவை குறைந்த விலையில் எளிதாகக் கிடைப்பதே முக்கிய பிரச்சினை..

பயன் தரும்
பெரு நிறுவனங்கள் தங்கள் உருவாக்கும் கழிவுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும். மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் தான் இங்கு முக்கிய பிரச்சினைக்குக் காரணம். இதுபோன்ற ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களை ஒட்டுமொத்தமாக உற்பத்தி நிலையிலேயே தடை செய்ய வேண்டும். மேலும், குப்பைகளை ஒரே இடத்தில் சேமிக்காமல், ஊராட்சி அதிகாரிகள் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். இப்படிச் செய்தால் குறிப்பிட்ட பகுதிகளில் மோசமான பாதிப்புகள் ஏற்பாடும்" என்றனர்.












Click it and Unblock the Notifications