"இன்னும் ஓரிரு வாரங்களில்.." நீட் விலக்கு குறித்து வந்து விழுந்த கேள்வி.. மா.சு சொன்ன முக்கிய தகவல்
சென்னை: அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த நிலையில், பல்வேறு விஷயங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார். குறிப்பாக நீட் விலக்கு குறித்து சில முக்கிய தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார்.
சென்னையில் அமைந்துள்ள கிண்டி கிங் மருத்துவமனை வளாகத்தில் 4.9 ஏக்கர் பரப்பளவில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இதனை முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார்
அப்போது அங்கிருந்த அதிகாரிகள் கட்டுமானம் குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் விளக்கினர். இதற்கிடையே அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

அமைச்சர் மா. சுப்பிரமணியன்
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், "திமுக ஆட்சி அமைந்தவுடன் கிங் இன்ஸ்டியூட் வளாகத்தில் பன்னோக்கு மருத்துவமனை கட்டப்படும் என்று முதல்வர் அறிவித்தார். அத்துடன் கட்டுமான பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார். இன்று இரண்டாவது முறையாக 4.9 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு வரும் இந்த பன்னோக்கு மருத்துவமனை கட்டுமான பணிகளை அவர் ஆய்வு செய்தார்.

கட்டுமான பணிகள்
கட்டுமான பணிகளை விரைவில் முடிக்க உத்தரவிட்டுள்ளோம். வரும் செப். மாதம் வரை கட்டுமான பணிகள் திட்டமிடப்பட்டிருந்தது.. இருப்பினும், முதல்வரே தொடர்ந்து கட்டுமான பணிகளை ஆய்வு செய்து வருவதால்.. கட்டுமான பணிகளை விரைந்து முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். விரைவில் இதைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளோம். மாற்றுத்திறனாளிகள் சாய்தளபாதை, தூய்மை பணியாளர்களுக்கு இடம் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது..

வடிகால் பணிகள்
தலைநகர் சென்னையில் இப்போது திமுக ஆட்சி அமைந்ததும் 209 கி.மீ நீளத்திற்கு மழை நீர் வடிகால் பணிகள் நடத்தப்பட்டது. அதில் 161 கிமீ தூரத்திற்கு பணிகள் மழைக் காலம் தொடங்கும் முன்பே முடிந்துவிட்டது.. இதன் காரணமாக நகரில் பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கவில்லை. மீதுள்ள 48 கி.மீ தூரத்திற்கு இப்போது பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. அதன்படி சைதாப்பேட்டை வண்டிகாரன் தெரு, மசூதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வரும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.

முதல்வர் ஆய்வு
மழைக்காலத்தில் பாதிக்கப்பட்ட சாலைகளையும் சீர் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதற்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. சாலை சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சிக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அடுத்த 4 மாதங்களில் சாலைகளைச் சீரமைக்கும் பணிகள் முழுவதும் நிறைவடையும். இன்று முதல்வர் ஆய்வின் போது கழிவுநீர் குடிநீரில் கலப்பதாகவும், தெரு நாய்களின் தொல்லை குறித்தும் புகார்கள் வந்தன. இது குறித்து நடவடிக்கை எடுக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்

அதிகாரிகளுக்குப் பாராட்டு
ஒவ்வொரு மழைக்காலத்திலும் சிறிய மழை பெய்தாலே நகரில் எந்தளவுக்கு நீர் தேங்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.. ஆனால், இந்த முறை அரசு எடுத்து தீவிர நடவடிக்கைகளால் எந்த இடத்திலும் பெரியளவில் மழை நீர் தேங்கவில்லை.. வெள்ள பாதிப்புகளில் இருந்து சென்னை காக்க அரசுக்கு அதிகாரிகள் அனைவரும் உறுதுணையாக இருந்தனர். அப்படி உறுதுணையாக இருந்த அலுவலர்கள் அனைவருக்கும் வரும் 31ஆம் தேதி சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் தலைமையில் பாராட்டு விழா நடக்கிறது" என்றார்.

நீட் விலக்கு
நீட் விலக்கு தொடர்பாகத் தமிழ்நாடு சட்டசபை இயற்றி அனுப்பிய தீர்மானம் குறித்த ஆயுஷ் அமைச்சகம் சில விளக்கங்களைக் கேட்டிருந்தது. அது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் "நீட் விளக்கு மசோதா குறித்து ஆயுஸ் அமைச்சகம் விளக்கம் கேட்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் ஓரிரு வாரத்திற்குள் விளக்கம் அனுப்பி வைக்கப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications