ஒரு சதி நடந்தது.. செந்தில் பாலாஜி செய்த தியாகம் என்ன தெரியுமா? ரகசியம் உடைத்த ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "செந்தில் பாலாஜியின் தியாகத்தை நான் வாழ்த்தியதைச் சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவரை வைத்து கட்சிக்கு எதிரான சதிச் செயல்களைச் செய்ய ஒரு கூட்டம் திட்டமிட்டது. அதற்கு விலையாக 15 மாத சிறையை அவர் ஏற்றதுதான் தியாகம்." எனக் கூறியுள்ளார் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து, கடந்த 26 ஆம் தேதி சென்னை புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார் செந்தில் பாலாஜி. அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி திமுக மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

mk stalin udhayanidhi stalin dmk

தியாகம் பெரிது: தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜிக்கு 471 நாட்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது. எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது.

கைது செய்து சிறையிலேயே வைத்துவிடுவதால் சகோதரர் செந்தில் பாலாஜியின் உறுதியைக் குலைக்க நினைத்தார்கள். முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன். உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது!" என்று தெரிவித்திருந்தார்.

தியாகம் என்ற வார்த்தைக்கே மரியாதை இல்லாம போச்சு: அதனை விமர்சித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "தியாகம் என்ற சொல்லுக்கே மரியாதை இல்லாமல் போய்விட்டது. ஊழல் செய்து அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்றவர் சிறையில் இருந்து வெளியே வரும்போது, அதனை தியாகம் என முதல்வரே சொல்வது அதற்கு உண்டான மரியாதையை கெடுப்பது போலாகிறது.

நாடு சுதந்திரம் பெறுவதற்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்து உயிர் நீத்தவருக்கு தான் தியாகம் என்ற சொல் பொருந்தும். அப்படிப்பட்ட சொல்லை செந்தில் பாலாஜிக்கு பயன்படுத்துவது வெட்கக்கேடானது" என்று காட்டமாக விமர்சித்தார் எடப்பாடி பழனிசாமி. பாஜகவினரும் ஸ்டாலினின் இந்த சொற்பிரயோகத்தை கடுமையாக விமர்சித்து இருந்தனர்.

அமைச்சரவை மாற்றம்: இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், கோவி செழியன், சேலம் ராஜேந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இணைக்கப்பட்டுள்ளனர். 4 பேரும் அமைச்சர்களாக இன்று பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு இலாகாக்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தான், "தியாகம்" என குறிப்பிட்டது எதை என விளக்கி உள்ளார் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின்.

செந்தில் பாலாஜி செய்த தியாகம்: முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், "செந்தில் பாலாஜி அவர்களுக்கு மீண்டும் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரது தியாகத்தை நான் வாழ்த்தியதைச் சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவரை வைத்து கழகத்துக்கு எதிரான சதிச் செயல்களைச் செய்ய ஒரு கூட்டம் திட்டமிட்டது. அதற்கு விலையாக 15 மாத சிறையை ஏற்றதுதான் தியாகம். தன்னால் இயக்கத்துக்குக் களங்கம் வரக்கூடாது என்று நினைப்பவர்களால்தான் இந்த இயக்கம் இயங்குகிறது.

இளைஞரணிக் காலம்தொட்டு என்னோடு களப்பணியாற்றியவர்களான திரு. சேலம் ராஜேந்திரன் அவர்களும் திரு. ஆவடி நாசர் அவர்களும், மாணவப் பருவம் முதலே திராவிடக் கொள்கையில் ஊறி அடிமட்டத் தொண்டராகக் கழகத்துக்கு உழைத்த தம்பி கோவி செழியன் அவர்களும் அமைச்சர் பொறுப்பேற்கிறார்கள். புதிய அமைச்சர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல்வர் ஸ்டாலின்: உங்களது கடந்த கால உழைப்பையும், நிகழ்காலத் திறனையும் மனதில் வைத்து இந்தப் பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைத்துள்ளேன். தங்களுக்கு வழங்கப்பட்ட துறையை எந்த விமர்சனங்களுக்கும் ஆளாகாமல் கவனித்து, அத்துறையின் மூலமாக மாநிலத்தை வளப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். குறிப்பிட்ட சில அமைச்சர்களுக்கு அவர்கள் வகிக்கும் துறையில் மாறுதல்கள் செய்து தரப்பட்டுள்ளன. புதிய துறையைக் கவனத்துடன் கவனித்துப் பணியாற்றுமாறு அவர்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.

முன்பே சொன்னது போல, அரசு என்பது கூட்டுப் பொறுப்பு ஆகும். அமைச்சர்களின் கூட்டுச்சேர்க்கை தான் முதலமைச்சராகிய நான். அமைச்சர்கள் அனைவர் மீதும் நான் எந்தளவு நம்பிக்கை வைத்துள்ளேனோ, அதை விட அதிகமான நம்பிக்கையை நாட்டு மக்கள் வைத்துள்ளார்கள். மிகுந்த நம்பிக்கையோடு நமக்கு வாக்களித்துள்ள மக்களின் நம்பிக்கையைக் காக்கும் வகையில் நாம் அனைவரும் செயல்பட வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+