தாம்பரம், வண்டலூர் பகுதியில் புறம்போக்கு நிலத்தில் வசிக்கிறீர்களா.. பட்டா வாங்க என்ன செய்ய வேண்டும்?
சென்னை: சென்னையின் புறநகர் பகுதிகள் உள்பட தமிழகம் முழுவதும் நிலங்களில் வசிக்கும் பல ஆயிரம் குடும்பங்களுக்கும் பட்டா வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் தாம்பரம், வண்டலூர் வட்டத்தில் புறம்போக்கு நிலங்களில் வசிப்போரிடம் பட்டா பெற்றுத் தருவதாக கூறி சிலர் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. 1 பட்டாவுக்கு ரூ.5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்ததுள்ளது. புறம்போக்கு நிலத்தில் வசிப்போர் பட்டா வாங்க என்ன செய்ய வேண்டும்.
சென்னை அருகே உள்ள 532 கிராமங்களில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் 29,187 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்படும் என்று அண்மையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதேபோல் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் 57,084 குடும்பங்களுக்கும் பட்டா வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டி விதிகள், நடைமுறைகள் குறித்த அரசாணையும் அண்மையில் வெளியிடப்பட்டது.

அதன்படி தரிசு நிலம், கல்லான்குத்து, பாறை, கரடு, கிராம நத்தம், அரசு நஞ்சை - புஞ்சை, அரசு அனாதீனம், பொதுகல் வகைபாட்டு நிலங்களில் வசிப்போர் பட்டா பெறலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல் வண்டிப்பாதை, பாதை, பாட்டை, களம், மயானம், தோப்பு வகைப்பாட்டில் உள்ள நிலங்களில் வசிப்போர், வரன்முறை அடிப்படையில் பட்டா பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதே சமயம் நீர்நிலை, மேய்க்கால், மந்தவெளி உள்ளிட்ட ஆட்சேபகரமான நிலங்களில் வசிப்போருக்கு எந்த காலத்திலும் பட்டா வழங்கப்படாது என அரசு அறிவித்துள்ளது. பட்டா வழங்கப்படும் என்று அரசு வெளியிட்ட அறிவிப்பினை பயன்படுத்தி வண்டலூர், தாம்பரம் பகுதிகளில் ஒருசில இடைத்தரகர்கள் ஆளும் கட்சி பிரமுகர்களுக்கு பணம் தர வேண்டும் என்று கூறி 1 பட்டாவுக்கு ரூ.5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை வசூல் வேட்டை செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்த விவகாரம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து வருவாய்த்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், யார், யாருக்கு பட்டா வழங்கப்படும் என அரசு தெளிவாக வரையறை செய்து அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. தான் வசிக்கும் பகுதி எந்த நிலத்தில் இருக்கிறது என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதேநேரம் அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலரை அணுகியும் உங்கள் நில விவரங்கள் ஆட்சேபனையற்ற வகையில் வருகிறதா எனப்தை தெரிந்து கொள்ளலாம். மேலும், பட்டா வழங்குவது ஏற்கெனவே கணக்கெடுக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்தும் கணக்கெடுப்பு செய்யப்பட்டு வருகிறது.
அரசு தெரிவித்த விதிகளுக்கு உட்பட்டிருந்தால் மட்டுமே பட்டா வழங்கப்படும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, இதுபோன்ற இடைத்தரகர்களை நம்பி பொதுமக்கள் ஏமாறக்கூடாது. பட்டா விவகாரத்தில் ஏதேனும் முறைகேடுகள் நடைபெறுவதாக தெரிந்தால், உங்கள் ஏரியா வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், ஆட்சியர் ஆகியோரிடம் புகார் அளிக்கலாம் என்று கூறினார்.
இதனிடையே பட்டா யாருக்கு கிடைக்கும், யாருக்கு கிடைக்காது என்பது குறித்து மக்கள் அறியும் வகையில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், தாம்பரம் வண்டலூர் பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் இதுபற்றி அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications