“மாணவர்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்காதீங்க”- அமைச்சர் கீர்த்தனா செயலுக்கு அன்பில் மகேஷ் கண்டனம்
சென்னை: அமைச்சர் கீர்த்தனா செயலுக்கு அன்பில் மகேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். "மாணவச் செல்வங்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்காதீர்கள்... கடைசி பெஞ்ச் என்று சுட்டிக்காட்டி பேசுபவர்கள் எல்லாம் பள்ளிகளுக்குள் செல்லாதீர்கள்" என அவர் கூறியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கலில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, வகுப்பறைக்குச் சென்ற அமைச்சர் கீர்த்தனா அங்கிருந்த மாணவிகளிடம் ஆங்கிலத்தில் சில கேள்விகளைக் கேட்டுள்ளார். அப்போது அமைச்சரின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் மாணவிகள் சிலர் திணறியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அமைச்சர் கீர்த்தனா ஆசிரியர்களிடம் ஆங்கிலம் கற்றுத் தருமாறு அறிவுறுத்தியதோடு, "முதல் பெஞ்ச் மாணவியே இப்படி இருக்கும்போது லாஸ்ட் பெஞ்ச் மாணவிகளை நினைத்துப்பாருங்கள்" எனக் கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, கடும் விமர்சனங்கள் எழுந்தன. ஆங்கிலம் சரளமாக பேச முடியாமல் தடுமாறும் மாணவியின் முகத்தை படம் பிடித்து, அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வது ஒரு அமைச்சருக்கு அழகா என விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர் கீர்த்தனாவின் செயல்பாட்டைக் கடுமையாக விமர்சித்துப் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தான் நினைப்பதுதான் சரி என பிடிவாதம் பிடிப்பது ஆய்வின் பணி அல்ல! அமைச்சரின் பணியும் அதுவல்ல! பள்ளிகளுக்குச் செல்லும் போது மாணவர்களையும் ஆசிரியப் பெருமக்களையும் ஊக்கப்படுத்துவதே முதன்மையான கடமையாக இருக்க வேண்டும்.
அதை விடுத்து 'Last Bench' என்று சுட்டிக்காட்டி பேசுபவர்கள் எல்லாம் பள்ளிகளுக்குள் செல்லாதீர்கள். மாணவச் செல்வங்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்காதீர்கள். தப்போ சரியோ தைரியமாக பதில் சொன்ன அன்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் அன்பும் வாழ்த்துகளும்" எனத் தெரிவித்துள்ளார்.














Click it and Unblock the Notifications