உங்களை கொ*று கூட வெற்றியை தேடுவான்.. நீயா நானாவில் இளவரசு சொன்ன விஷயம்.. கரூர் சம்பவத்தை தோண்டும் ரசிகர்கள்
சென்னை: பாரதிராஜா மறைந்த பிறகு அவரை நினைவுகூரும் வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பாரதிராஜா நினைவு நீயா நானா' நிகழ்ச்சி சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. அந்த நிகழ்ச்சியில் பலரும் பாரதிராஜாவைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்திருந்தாலும், நடிகர் இளவரசு பேசிய சில நிமிடங்கள் மட்டும் இப்போது தனியாக வெட்டி எடுத்து இணையத்தில் வைரலாகி வருகின்றன.
காரணம், அவர் பேசியது ஒரு சினிமா பற்றிய கருத்து மட்டும் இல்லை. அரசியல், இளைஞர்கள், விசுவாசம், கொள்கை என்று பல அடுக்குகள் இருந்ததால் அந்த பேச்சு தற்போது புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
நீயா நானா நிகழ்ச்சி
நிகழ்ச்சியில், "இன்றைய தலைமுறை கட்டாயம் பார்க்க வேண்டிய பாரதிராஜா படங்கள் எவை?" என்று கேட்கப்பட்டது. பலரும் பல படங்களை சொன்னார்கள். ஆனால் இளவரசு மட்டும் தயக்கமே இல்லாமல் 'என்னுயிர் தோழன்' மற்றும் 'நிழல்கள்' என்ற இரண்டு படங்களை தேர்வு செய்தார்.

குருட்டு விசுவாசம்
'என்னுயிர் தோழன்' படம் குறித்து பேசும்போது இளவரசு சொன்ன வார்த்தைகள்தான் இப்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
அவர் பேசும்போது, "எந்தவிதமான தத்துவமும் இல்லாமல்... அடிப்படை இல்லாமல்... கருத்தியல் இல்லாமல் இருக்கும் அரசியல் நீண்ட காலம் வெற்றி பெறாது. குருட்டுத்தனமான விசுவாசம் வேலைக்கு ஆகாது. "உங்களைக் கொன்று கூட நாளை அவன் வெற்றி பெறலாம்" ஆனால் அது சமூகத்துக்கு நல்லது ஆகாது. இந்த விஷயத்தை இவ்வளவு தெளிவாக சொன்ன படம் தான் 'என்னுயிர் தோழன்'. அது எல்லா காலத்துக்கும் பொருந்தும் படம்." என்று கூறினார்.
இந்த பேச்சு முடிந்த சில மணி நேரங்களிலேயே அதன் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவ ஆரம்பித்தது.
நிழல்கள் படம் பற்றி தகவல்
அதோடு நின்றுவிடாமல், 'நிழல்கள்' படத்தின் கதையைப் பற்றியும் இளவரசு பேசினார். அந்த படத்தின் முதல் திரைக்கதையை மணிவண்ணன் மிகவும் தீவிரமான அரசியல் பின்னணியில் எழுதியிருந்தாராம். இளைஞர்கள், ஆயுதப் போராட்டம், அரசியல் தீவிரம் போன்ற விஷயங்கள் அதிகமாக இருந்ததாம். பின்னர் திரைக்கதையில் மாற்றங்கள் செய்யப்பட்டதால் காதல் உள்ளிட்ட விஷயங்களும் சேர்க்கப்பட்டதாக அவர் கூறினார்.
இளவரசு யாருடைய பெயரையும் சொல்லவில்லை. எந்த அரசியல் கட்சியையும் குறிப்பிடவில்லை. எந்த தலைவரையும் விமர்சிக்கவும் இல்லை. ஆனால் சமூக வலைதளங்களில் அந்த பேச்சுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு அரசியல் அர்த்தம் கொடுத்து பதிவிட ஆரம்பித்துள்ளனர்.
குறிப்பாக சில நெட்டிசன்கள், இந்த பேச்சை தற்போதைய தமிழக அரசியல் சூழலோடு இணைத்து விவாதித்து வருகின்றனர். சிலர் அதை முதல்வர் விஜய் தலைமையிலான அரசியலோடு தொடர்புபடுத்தி கருத்து பதிவிட, இன்னொரு தரப்பு அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
கரூர் சம்பவத்தையும் இணைக்கும் பதிவுகள்
அதுமட்டுமல்ல, சமீபத்தில் கரூரில் நடந்த துயரச் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தையும் சிலர் இந்த பேச்சுடன் இணைத்து பேச ஆரம்பித்துள்ளனர்.
"ஒரு கட்சி, ஒரு தலைவர், ஒரு கூட்டம் என்ற பெயரில் சிந்திக்காமல் கூட்டமாக ஓடினால் அதன் விளைவு எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை இன்றைய இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும்" என்று சிலர் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும், "அரசியலில் எமோஷனல் மட்டும் போதாது; பொறுப்பும், திட்டமிடலும், கொள்கையும் முக்கியம். இல்லையென்றால் அதன் விலையை பொதுமக்கள்தான் கொடுக்க வேண்டி வரும்" என்றும் சமூக வலைதளங்களில் கருத்துகள் வெளியாகி வருகின்றன.

விவாதம் தொடர்கிறது
ஒரு பழைய படத்தைப் பற்றி இளவரசு சொன்ன சில வரிகள், இன்று மீண்டும் அரசியல் விவாதமாக மாறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாரதிராஜா எடுத்த படங்கள் வெறும் பொழுதுபோக்குக்காக இல்லை; சமூகத்திடம் கேள்வி கேட்கும் படங்கள் என்பதற்கே இந்த விவாதம் இன்னொரு உதாரணம் என்று ஒரு தரப்பு கூறுகிறது.
அதே நேரத்தில், இளவரசு பேசிய கருத்துகளை குறிப்பிட்ட அரசியல் கட்சி அல்லது தலைவருடன் நேரடியாக கம்பர் பண்ணுவது அவரது பேச்சின் நோக்கமா என்பது குறித்து எந்த உறுதியான ஆதாரமும் இல்லை. அவர் பேசியது பொதுவான அரசியல் சிந்தனை பற்றிய கருத்தாகவே இருந்தது. ஆனால் சமூக வலைதளங்களில் அந்த வார்த்தைகள் பல்வேறு அரசியல் கோணங்களில் பகிரப்பட்டு, புதிய விவாதத்தை உருவாக்கி வருகின்றன.













Click it and Unblock the Notifications