இதை செஞ்சா 1 ட்ரில்லியன் டாலர் உறுதி! டாப் கியரில் தமிழ்நாடு!
சென்னை: உலக முதலீட்டாளர் மாநாட்டைத் தமிழ்நாடு அரசு சிறப்பாக நடத்திக் காட்டி இருக்கிறது.
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030க்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என முதல்வராகப் பதவியேற்கும் போதே உறுதிமொழி எடுத்திருந்தார் மு.க.ஸ்டாலின்.

அப்படி நமது மாநிலத்தின் பொருளாதாரம் 8% ஆக இப்போது உள்ளது. அதை 10% அளவுக்கு உயர்த்தினால் நிச்சயம் அந்த இலக்கை எட்டி விடலாம் என்று சொல்கிறார்கள்.
அப்படியல்ல உண்மையில் 18% இருக்கவேண்டும் பியூஷ் கோயல் கூறி இருக்கிறார். ஆனால், 18% உயர்வு என்பது எளிதான காரியமில்லை.
தமிழ்நாடு அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் ஏற்கெனவே நிதி பகிர்வு தொடர்பாக ஒரு மோதல் போக்கு நிலவுகிறது. இயற்கை பேரிடர் காலத்தில் கூட அதிகப்படியான நிதியை வழங்காமல் மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று முதல்வர் ஸ்டாலின் உட்படப் பல அமைச்சர்கள் கருத்தை முன்வைத்து வருகிறார்கள்.
மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாமலே தமிழக அரசு இயற்கைப் பேரிடரையும் சேர்த்துச் சமாளிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதற்காகக் கூடுதல் நிதியையும் தமிழக அரசு திரட்டியாக வேண்டும். 2030க்குள் 1 ட்ரிலியன் டாலர் அளவுக்குப் பொருளாதாரத்தை உயர்த்த உழைத்திடவும் வேண்டும்.

இதனிடையே இந்த நிதி பகிர்வு தொடர்பான சர்ச்சை குறித்து ஒன்றிய அரசின் பொருளாதார தலைமை ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம் ஒரு எச்சரிக்கை மணியை அடித்துள்ளார்.
"தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்று முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம் கேட்டுக் கொண்டுள்ளார்.
2026இல் தொகுதி சீரமைப்பு நடக்கும் போது தென் மாநிலங்களின் அரசியல் அதிகாரம் மேலும் குறையும். அதிக நிதியை ஒன்றிய அரசுக்குக் கொடுத்து விட்டு அரசியல் அதிகாரத்தை இழக்கும் போது தென் மாநிலங்களில் இப்போது நிலவும் அதிருப்தி அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. இதைச் சரி செய்ய வேண்டும்" என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இவரது கருத்து மூலம் திமுக முன்வைத்து வரும் கருத்துகளின் உண்மை உள்ளது என்பதை உணர முடிகிறது. பாஜக அரசின் ஆலோசகரே தமிழக அரசின் குற்றச்சாட்டில் உள்ள உண்மையை ஏற்றுக்கொண்டுள்ளார். ஆக, இத்தனை இடர்பாடுகளுக்கு இடையில் 1 ட்ரிலியன் பொருளாதார கனவைத் தமிழ்நாட்டு எட்டிப்பிடிக்க முடியுமா? அதற்கான வழிமுறைகள் என்ன?

சொல்கிறார் ஃபிக்கி இணைத் தலைவர் பூபேஷ் நாகராஜ், "இந்திய அரசு தனது பொருளாதாரத்தை 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதை 20230க்குள் செய்யவேண்டும் என்பது இலக்கு. அப்படி என்றால் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 18% முதல் 20% வரை உயர்த்த வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே 1 ட்ரில்லியன் அளவு பொருளாதாரத்தை எட்ட முடியும்.
அதற்காகத்தான் இதைப்போன்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டைத் தமிழ்நாடு அரசு நடத்துகிறது. அதன்மூலம் நமது பொருளாதாரத்தை 2 மடங்கு அளவுக்கு உயர்த்த முடியும்.
தென் தமிழகத்தை நோக்கிப் பல தொழிற் நிறுவனங்களை நாம் நகர்த்த வேண்டும். அதை ஒரு முக்கிய தேவையாக நான் நினைக்கிறேன்" என்றார்
அவரிடம்2015 மற்றும் 2019இல் இதே போலவே உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றுள்ளது. அதன்மூலம் ஏதாவது தமிழ்நாட்டின் பொருளாதாரம் வளர்ந்துள்ளதா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
"இந்த இரண்டு மாநாடுகள் மூலமாக முதலீடுகள் தமிழ்நாட்டிற்குள் வந்துள்ளது. அதன்பிறகு 4 ஆண்டுகள் கழித்து தற்போது இந்த மாநாடு நடைபெறுகிறது.
இப்படியான மாநாடுகளை முன்வைத்து நமது மாநிலத்தில் குவிந்துள்ள செல்வங்கள் என்ன? நம் மாநிலத்தின் தொழில் தொடங்குவதற்கான சூழலின் தனித்தன்மைகள் என்ன? திறமைகள் என்ன? இப்படி பலவற்றை நாம் வெளிப் படுத்தும் போது அதன் மூலம் முதலீட்டாளர்கள் ஈர்க்கப்படுவர். அதுதான் யதார்த்தம்.
குறிப்பாக நம் மாநிலத்தில் மூன்று மிகப்பெரிய துறைமுகங்கள் உள்ளன. அது மிகப் பெரிய சாதகமான அம்சம். அதை நாம் உலகுக்குப் புரியவைக்க வேண்டும்.

இந்த முதலீட்டாளர் மாநாட்டில் நமக்கு மிகப் பெரிய முதலீட்டு நிறுவனமாகக் கிடைத்துள்ளது VinFast. இதுவரை நம் மாநிலத்திற்கு வந்து தொழில் தொடங்குகிறார்கள் என்றால், அது சென்னைக்கு அருகில்தான் தொடங்குவார்கள்.
ஆனால், முதன்முறையாக 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்காக முதலீடு தூத்துக்குடி மாவட்ட பகுதியில் செய்யப்பட்ட உள்ளது. இதனால், சென்னை அல்லாத மிகப் பெரிய வேலைவாய்ப்பைத் தூத்துக்குடி ஒட்டிய பகுதிகளில் வாழும் மக்கள் பெறுவர். இது மிகமிக முக்கியமான வளர்ச்சியாக அமையும்.
இந்த நிறுவனம் அங்கே செயல்படத் தொடங்கிவிட்டால், தென் தமிழ்நாட்டின் மீது பல நிறுவனங்களின் கவனம் குவியும். அந்த நம்பிக்கையை ஏற்படுத்த இப்போதைய முதலீடு மிகப் பெரிய மூலதனம்" என்கிறார்












Click it and Unblock the Notifications