10 ஆண்டுகளில் தலைகீழாக மாறிய வரி வருவாய்.. ஆனாலும் அடுத்த 2 வருடத்தில்.. மாஸ் காட்டிய பிடிஆர்
கடந்த 10 ஆண்டுகளில் தலைகீழாக வரி வருவாய் மாறியதாக தமிழக பட்ஜெட் உரையில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்
சென்னை: 2006 முதல் 2011 வரை மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில், சராசரி 8 சதவீதமாக இருந்த மாநிலத்தின் சொந்த வரி வருவாய், அடுத்த 10 ஆண்டுகளில் வீழ்ச்சி கண்டு, 2021ம் ஆண்டு வெறும் 5.58 சதவீதமாக குறைந்தது என தமிழக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
2023-2024ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை சட்டப்பேரவையில் மாநில நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று வாசித்தார். அவர் வாசிக்க தொடங்கும் போது அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான அமளியில் ஈடுபட்டன.
ஆனால் அவர்களை சபாநாயகர் அப்பாவு சமாதானம் செய்து அமர வைத்தார். தொடர்ந்து சிறிது நேரம் கூச்சல் குழப்பங்கள் நிலவிய நிலையில், அதன்பின்னர் குறைந்தது. அப்போது பட்ஜெட்டை வாசித்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறும் போது, நிதி வருவாய் குறித்து குறிப்பிட்டார்.

குறைத்துள்ளோம்
அப்போது அவர் கூறியதாவது: "தேசிய அளவில் ஒப்பிட்டு பார்க்கும் போது நம் மாநிலத்தில் கடந்த ஆண்டு அதிக பொருளாதார வளர்ச்சி எய்து உள்ளதோடு, வருவாய் மற்றும் நிதி பற்றாக்குறையை ஒன்றிய அரசைவிட கணிசமாக குறைத்துள்ளோம்.இது நம் முதலமைச்சர் அவர்களின் தலைமை பண்புக்கும், திறன்மிக்க மேலாண்மைக்கும் சான்றாகும்.

5000 கோடி குறைவு
கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிக செலவுள்ள பல திட்டங்களை செயல்படுத்தி வரும் போதிலும் முன் எப்போதும் இல்லாத அளவில், பல கடினமான சீர் திருத்தங்களை மேற்கொண்டுள்ளோம். நாங்கள் பதவி ஏற்கும் போது, சுமார் 62000 கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறையை நடப்பாண்டில் திருத்த மதிப்பீடுகளில் சுமார் 30000 கோடி அளவிற்கு குறைத்துள்ளோம். இது கோவிட் பெருந்தொற்றுக்கு முந்தைய 19-20ம் ஆண்டுகளை ஒப்பிட்டாலும் ஏறத்தாழ 5000 கோடி குறைவாகும் என்பது குறிப்பித்தக்கது.

படிப்படியாக குறையும்
வருவாய் பற்றாக்குறையை அறவே அகற்ற வேண்டும் என்ற நிதி பொறுப்புரிமை சட்டம் 2003 இலக்கை எட்ட அரசின் சமூக நலத்திட்டங்களுக்கும், அரசின் முன்னுரிமை திட்டங்களுக்கும் வருவாய் பற்றாக்குறை வரும் ஆண்டுகளில் படிப்படியாக குறைக்கப்படும். இந்த அரசு பதவியேற்ற போது சந்தித்த நிதி நெருக்கடிக்கு முக்கிய காரணம், அதற்கு முந்தைய ஆண்டுகளில் வரி வருவாயில் ஏற்பட்ட வீழ்ச்சியே ஆகும்.

சொந்த வரி வருவாய்
2006 முதல் 2011 வரை மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில், சராசரி 8 சதவீதமாக இருந்த மாநிலத்தின் சொந்த வரி வருவாய், அடுத்த 10 ஆண்டுகளில் வீழ்ச்சி கண்டு, 2021ம் ஆண்டு வெறும் 5.58 சதவீதமாக குறைந்தது. மகாராஷ்டிரா கர்நாடகா போன்ற அதிக தொழில்மயமான மாநிலங்களில் ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் இந்த விகிதம் குறைவாகவே உள்ளது.

உயர்ந்தது
கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த அரசு எடுத்த முயற்சிகளின் பலனாக தற்போது அரசின் வரி வருவாய் 6.11 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனை மேலும் உயர்த்தி நலத்திட்டங்களுக்கான வருவாய் ஆதாரங்களை உயர்த்திட முனைப்போடு செயல்படுவோம்" இவ்வாறு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.












Click it and Unblock the Notifications