சீமானின் காவலாளியிடம் இருந்தது என்ன ரக துப்பாக்கி? லைசன்ஸ் இருக்கா? காவல்துறை வெளியிட்ட தகவல்!
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் காவலாளி அமல்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து துப்பாக்கி கைப்பற்றப்பட்ட நிலையில், அவர் கைகளில் இருந்தது என்ன ரக துப்பாக்கி என்பது குறித்து தெரிய வந்துள்ளது. தங்க நிறத்தில் இருந்தது 0.32 கேலிபர் ரக துப்பாக்கி என்றும், அந்த துப்பாக்கியுடன் 20 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பான விசாரணைக்காக சீமானுக்கு 2வது முறையாக சம்மன் அளிக்க காவல்துறையினர் விரைந்தனர். இதன்பின் சீமான் வீட்டுக் கதவில் சம்மன் ஒட்டப்பட்ட நிலையில், சில நிமிடங்களிலேயே கிழிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரிக்க காவல்துறையினர் சீமான் வீட்டிற்குள் நுழைந்த போது, அங்கிருந்த சீமானின் காவலாளி அமல்ராஜ் துப்பாக்கி இருக்கு.. ஓரமா போ என்று மிரட்டினார்.

இதனால் சீமான் வீட்டில் போலீசார் மற்றும் காவலாளி இடையே மோதல் ஏற்பட்டது. இதன்பின் காவலாளி அமல்ராஜை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த கை துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சீமான் மனைவி கயல்விழி காவல்துறையினரிடம் மன்னிப்பு கோரினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே சீமானின் காவலாளியின் கைகளில் துப்பாக்கி வந்தது எப்படி என்ற கேள்விகள் எழுந்தன. அப்போது சீமானின் காவலாளியாக பணியாற்றி வரும் அமல்ராஜ் முன்னாள் ராணுவ வீரர் என்ற தகவல் வெளியாகியது. இருந்தாலும் அவரின் துப்பாக்கி உரிமம் குறித்து விசாரிக்கப்படும் என்று பார்க்கப்படுகிறது. தங்க நிறத்தில் சீமான் காவலாளி வைத்திருந்தது என்ன வகையான துப்பாக்கி என்ற கேள்வியும் எழுந்தது.
இந்த நிலையில் காவலாளி அமல்ராஜிடம் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கி தொடர்பாக போலீசார் தகவல் வெளியிட்டுள்ளனர். அதில், தாம்பரம் பகுதியில் வசித்து வரும் சீமானின் காவலாளி அமல்ராஜ் 2010ஆம் ஆண்டு முதல் துப்பாக்கி வைத்து கொள்வதற்கான உரிமம் வைத்துள்ளார். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது 0.32 காலிபர் ரக துப்பாக்கியாகும். இந்த வகையான துப்பாக்கி கொல்கத்தாவில் தயாரிக்கப்பட்டது.
அதேபோல் அமல்ராஜிடம் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கியோடு சேர்த்து 20 தோட்டாக்கள் இருந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த அமல்ராஜ், நாம் தமிழர் கட்சியில் இணைந்து சீமான் வீட்டில் கடந்த 2 ஆண்டுகளாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். தனிப்பட்ட பாதுகாப்புக்காக பெறப்பட்ட துப்பாக்கியை, சட்டவிரோதமாக தொழில் ரீதியாக பயன்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த சம்பவம் காரணமாக சீமானின் வீட்டிற்கு ஏராளமான நிர்வாகிகள் வரத் தொடங்கியுள்ளனர். மேலும், சீமான் வீட்டை சுற்றி ஏராளமான காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் சீமான் வீடு அமைந்துள்ள பகுதியே பரபரப்பாக காட்சி அளிக்கிறது.












Click it and Unblock the Notifications