விஜய்க்கு சொன்ன அட்வைஸ் ; கேப்டனை விஜய் இறுதிவரை சந்திக்காதது ஏன்? : கொட்டி தீர்த்த பிரேமலதா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் சந்திப்பின்போது பேசிய விசயங்கள் என்ன? அவரது கட்சியுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளதா? என்பது பற்றி எல்லாம் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மனம் திறந்து பேசியுள்ளார்.

நடிகர் விஜயகாந்த் பிறந்தநாளை தேமுதிக தொண்டர்கள் மிக விமர்சையாக கொண்டாடி முடித்துள்ளனர். அவரது உருவச்சிலையைக் கட்சித் தலைமை அலுவலகத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நிறுவி இருக்கிறார். அங்கே தினம் நூற்றுக்கணக்கான பேர் வந்து பார்த்துவிட்டுச் செல்கின்றனர். அவர் மறைந்து இத்தனை காலம் ஆன பிறகு அவரை மக்கள் மறக்கவே இல்லை என்பத்தைதான் இந்த நிகழ்ச்சிகள் நிரூபிக்கின்றன.

vijay premalatha vijayakanth

அவர் உயிருடன் இருந்தபோது கடுமையாக விமர்சித்தவர்கள் கூட அவரை இப்போது நினைத்து மனம் வருந்துகின்றனர். அதைப்போலத்தான் நடிகர் விஜய், தனது படத்தில் விஜயகாந்த் தோற்றத்தை ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தி இருப்பதற்கு அனுமதி கேட்டு பிரேமலதாவைச் சந்தித்தார். விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த காலத்தில் விஜய் அவரை ஒருமுறைகூட நேரில் சென்று நலம் விசாரிக்கவில்லை. ஒரு காலத்தில் விஜய் வளர்ச்சியில் முக்கிய பங்காக இருந்தவர் விஜயகாந்த். அந்த உணர்வு கொஞ்சமும் அவருக்கு இல்லை என்று ஆதங்கப்பட்ட தேமுதிக தொண்டர்கள் விஜயகாந்த் இறுதி அஞ்சலி நிகழ்வுக்கு வந்த விஜய்யிடம் நாகரிகமற்ற முறையில் நடந்து கொண்டனர். அந்தக் காட்சி அப்போது மிகப்பெரிய சர்ச்சையானது.

இந்தக் கசப்புகளை எல்லாம் மறந்து விஜய் இப்போது பிரேமலதா வீட்டுக்குச் சென்று தனது படத்தில் விஜயகாந்த்தைப் பயன்படுத்த அனுமதி கேட்டுப் பெற்றுள்ளார். இந்தச் சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்பது குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளித்துள்ளார். அதில் விஜய் சந்திப்பின் போது பேசப்பட்ட விசயங்களை அவர் வெளிப்படுத்தி உள்ளார்.

விஜய் சந்திப்பு பற்றி பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், “யாருக்கும் அறிவுரை சொல்ல வேண்டியது இல்லை. அப்படித்தான் விஜய்க்கும் நான் அறிவுரை சொல்லித்தான் அவருக்கு அரசியல் தெரிந்துகொள்ள வேண்டியது இல்லை. அவருக்கே எல்லாமே தெரியும். அரசியலுக்கு வந்தால் என்னென்ன எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்பதை தெரிந்து கொண்டுதான் துணிந்து அவர் இறங்கி இருக்கிறார். நம்பர் ஒன் ஹீரோவாக இருந்த அவர் அதை விட்டுவிட்டு அரசியலுக்கு வருகிறார் என்றால், அது சாதாரண விசயம் கிடையாது.

நானும் அதை உணர்ந்திருப்பதால், என் வீட்டுக்கு வந்த விஜய்யிடம் ஒரே ஒரு விசயத்தை மட்டும்தான் அன்றைக்கு நான் சொன்னேன். ’நீ சினிமாவில் இந்த உச்சத்தைத் தொடுவதற்கு எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார். அதை விட்டுவிட்டு அரசியலுக்கு இப்போது வருகிறாய். அங்கேயும் சவால்கள், எதிர்ப்புகள் எல்லாம் வரும். அதை நீ கவனமாகப் பார்த்து நடந்துகொள்ள கற்றுக் கொள்ளவேண்டும்’ என்று மட்டும்தான் சொன்னேன். அதைக் கேட்டுவிட்டு, 'கட்டாயம் அம்மா. நான் அதைச் செய்வேன்’ என்று சொன்னார். அவர் எனது மகன்களிடம் நிறைய நேரம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது என் இளைய மகன் 'உங்களைத்தான் சினிமாவில் நான் பின்பற்றுகிறேன்’ என்று சொன்னார். அதற்கு என் மூத்த மகனைப் பார்த்து, 'அரசியலில் நீதான் எனக்கு சீனியர்’ என்று சொன்னார் விஜய்.

விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த காலத்தில் விஜய் நேரில் வந்து அவரைப் பார்க்கவில்லை என்ற வருத்தம் தொண்டர்களுக்கு இருந்தது. எங்கள் குடும்பத்தினருக்கும் அந்த மனக் கசப்பு இருந்தது உண்மைதான். அதை யாரும் மறுக்கவே முடியாது. ஆனால், விஜய் திட்டமிட்டு விஜயகாந்த்தைப் பார்க்காமல் தவிர்த்து இருக்கமாட்டார் என்றே நம்புகிறேன். அவர் சூழ்நிலை அப்படி இருந்திருக்கலாம். ஏன் அவர் வரவில்லை என்று நாங்கள் கேட்கவில்லை. மறைந்த பிறகுதான் வந்தார். அப்போது ஏன் வந்தார் என்றும் நாங்கள் கேட்கவில்லை” என்று பிரேமலதா பேசி இருக்கிறார். விஜய்யுடன் வருங்காலத்தில் அரசியல்ரீதியாக இணைந்து பணியாற்ற வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்வி அவரிடம் முன்வைக்கப்பட்டது. அதற்கும் அவர் பதிலளித்திருக்கிறார்.

தொடர்ந்து பேசிய பிரேமலதா, “அதை இப்போதே சொல்ல முடியாது. அவர் முதலில் அரசியல் கட்சி தொடங்கி களத்திற்கு வரட்டும். நாங்கள் தேமுதிகவை தொடங்கி 20 ஆண்டுகளை வரும் செப்டம்பர் மாதத்துடன் நிறைவு செய்ய இருக்கிறோம். எனவே விஜய் முதலில் தனது கொள்கையை அறிவிக்கட்டும். மக்கள் அவரை எப்படி ஆதரிக்கிறார்கள் என்று பார்ப்போம். அவரின் தொண்டர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்றும் பார்ப்போம். அரசியல்ரீதியாக இணைந்து செயல்பட இன்னும் காலம் இருக்கிறது. அவர் 2026 தான் எங்கள் இலக்கு என்று சொல்லி இருக்கிறார். அதுவரை இளைஞர்களுக்கு நல உதவிகளைச் செய்ய தொடங்கி இருக்கிறார்.

அவரது கட்சியில் கொள்கையில் விஜயகாந்த்தின் சாயல் இருப்பதாகச் சொல்கிறார்கள். அவர் விஜயகாந்த்தை அண்ணன் என்று தான் சொல்கிறார். ஆகவே அவர் அண்ணனின் பாணியை ஏற்றுச் செயல்படுவது ஒன்றும் தவறில்லை. அவரது மாநாடு மிகப்பெரிய அளவு நடத்துவார் எனத் தெரிகிறது. அதில் லட்சக் கணக்கான இளைஞர்கள் கலந்து கொள்வார்கள் எனக் கட்டாயம் எதிர்பார்க்கிறேன்.

விஜயகாந்த் முதன்முறையாக அதிமுகவுடன் கூட்டணி சென்றபோது கூட்டணியே வேண்டாம் என மறுத்த முதல் நபர் நான்தான். அவரும் ஆரம்பத்தில் கூட்டணி வைக்கவே கூடாது என்ற மனநிலையில்தான் இருந்தார். அடுத்தடுத்து தேர்தல்கள் வரும்போது ஒரு கட்சியாக தொடர்ந்து இயங்க வெற்றி தேவைப்படுகிறது. வெறுமனே வாக்கு சதவீதத்தை உயர்த்துவதினாலோ, ஓட்டுகளைப் பிரிப்பதாலோ ஒன்றும் லாபம் இல்லை என்பதை அறிந்த கட்சியினர் கூட்டணிக்கு வற்புறுத்தினர்.

ஆகவே கூட்டணிக்குப் போனார். அதன்பின்னர் கட்சி உடைந்தது. அவருக்கு துரோகம் இழைக்கப்பட்டது. விஜயகாந்த்திற்குச் சரிவு ஏற்பட்டது. அவை அனைத்தும் மக்களுக்குத் தெரியும். ஒருவேளை அவர் கூட்டணி வைக்காமலிருந்திருந்தால் 10 ஆண்டுகள் கழித்து அவருக்கு நல்ல முன்னேற்றம் கிடைத்திருக்கும். அதை நான் மனப்பூர்வமாக நம்புகிறேன். விஜயகாந்த் இறந்து 200 நாட்கள் ஆகிவிட்டன. அப்படி இருந்தும் மக்கள் அவரைக் கொண்டாடுகிறார்களே?” என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+