கிளைமாக்ஸ் இன்று?.. ஓபிஎஸ்ஸுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி முக்கிய முடிவு? பரபரக்கும் அதிமுக
சென்னை: "கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக" அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸுக்கு எதிராக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி முக்கிய முடிவை எடுக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் தினந்தோறும் பரபரப்புகளும் திருப்புமுனைகளும் நடைபெற்று வருகின்றன. அண்மையில் சசிகலாவுக்கு ஆதரவுக் குரல் தமிழகம் எங்கும் ஒலித்து வருகிறது.
இதனால் உற்சாகமான சசிகலா, இந்த ஆதரவு குரலை மேலும் வலுப்படுத்த தென் மாவட்டங்களில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சுற்றுப்பயணத்தை தொடங்கினார். இந்த நிலையில் திருச்செந்தூரில் முருகனை தரிசித்துவிட்டு திரும்பிய சசிகலாவுக்கு ஒருவரிடம் இருந்து முக்கிய போன்கால் வந்தது.

சசிகலா உற்சாகம்
இதனால் உற்சாகமடைந்த சசிகலா அவரின் போன் காலை எடுத்து பேசியுள்ளார். அவர் சசிகலாவை சந்திக்க நேரம் வேண்டும் என கேட்டிருந்தார். சசிகலாவும் உடனடியாக வந்து சந்திக்குமாறு இடத்தையும் நேரத்தையும் கொடுத்தார். அவர் வேறு யாருமில்லை. ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸின் சகோதரர் ஓ ராஜாதான்.

ஓ ராஜா
சசிகலாவை ஓபிஎஸ் சகோதரர் ஓ ராஜா தனது ஆதரவாளர்களுடன் போய் சந்தித்து போட்டோ எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படங்களை பார்த்த எடப்பாடி தரப்பு ஏற்கெனவே தேனி ஓபிஎஸ் பண்ணை வீட்டிலிருந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தால் கோபத்தில் இருந்து நிலையில் இந்த விவகாரம் எடப்பாடி பழனிச்சாமியை மேலும் கோபப்படுத்தியது.

எடப்பாடிபழனிச்சாமி
இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி தன்னிடம் எதுவும் கேட்க மாட்டார் என ஓபிஎஸ் நினைத்திருந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ்ஸுக்கு போன் போட்டு ஓ ராஜா கட்சி கட்டுப்பாட்டை மீறிவிட்டார், அவரை நீக்கலாம் என கேட்டுள்ளார். இதனால் அதிர்ந்த ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி கூறியதற்கு ஒப்புக் கொண்டாராம்.

ஓ ராஜா நீக்கம்
பின்னர் தான் இருவரும் சேர்ந்து தேனி மாவட்ட ஆவின் தலைவர் ஓ ராஜா , தேனி மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகேசன், தேனி மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் வைகை கருப்புஜி, கூடலூர் நகர புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர் சேதுபதி ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள் என்ற அறிக்கையை வெளியிட்டனர்.

3 நாட்கள் ஆலோசனை
மேலும் கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்கிறோம் என அந்த அறிக்கையில் ஓ பன்னீர் செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் கையெழுத்திட்டனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமி ஓரளவு நிம்மதியடைந்தாலும் கடந்த 3 தினங்களாக சேலத்தில் தமது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வந்துள்ளார்.

சென்னை வந்த எடப்பாடி பழனிச்சாமி
இந்த நிலையில் சேலத்திலிருந்து சென்னைக்கு எடப்பாடி பழனிச்சாமி வந்துள்ளதாகவும் இன்று முக்கிய முடிவை அவர் எடுக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்களிடம் பேசுகையில் தேனி மாவட்ட இலக்கிய அணி செயலாளராக இருந்த முருகேசன், அதாவது நேற்றைய தினம் கட்சியை விட்டு தூக்கப்பட்ட அவர் , ஓபிஎஸ்ஸை நேரில் சந்தித்து சசிகலாவை சந்தித்ததற்கான விளக்கத்தை அளித்து தங்களை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ளுமாறு கேட்டனராம்.
Recommended Video

எடப்பாடி பழனிச்சாமியின் முக்கிய அறிவிப்பு?
இது எடப்பாடி பழனிச்சாமியின் காதுகளுக்கு வந்துள்ளது. ஒரு கட்சியிலிருந்து நீக்கப்பட்டவருடன் தொண்டர்கள் எந்த வித தொடர்பும் வைத்துக் கொள்ள கூடாது என கூறி அதில் கையெழுத்திட்ட கட்சி ஒருங்கிணைப்பாளரே கட்சியின் கட்டுப்பாட்டை மீறியது எடப்பாடி பழனிச்சாமியை மேலும் கோபத்தில் ஆழ்த்திவிட்டதாகவும் இன்று சென்னை வந்துள்ள அவர் ஓபிஎஸ்ஸுக்கு எதிராக கடுமையான அறிவிப்பை கூற வாய்ப்புள்ளதாகவும் அல்லது மறைமுகமாக ஓபிஎஸ்ஸுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் காட்டமான அறிக்கையையோ பேட்டியையோ அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications