தேர்தல் பத்திரங்களுக்கு தடை.. அடுத்து என்ன நடக்கும்! ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் பரபர தகவல்
சென்னை: தேர்தல் பத்திரத்தைச் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், இது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளிக்கும் முறையைக் கடந்த 2018ஆம் ஆண்டில் கொண்டு வந்தது. இருப்பினும், இந்த முறையில் பெறும் நன்கொடை குறித்த தகவல்களைப் பொதுவெளியில் அறிவிக்கத் தேவையில்லை எனக் கூறப்பட்டு இருந்தது.

இதனால் பலரும் இந்த தேர்தல் பத்திரங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் சுப்ரீம் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஒருமித்த தீர்ப்பு வழங்கி உள்ளது.
நீதிபதி ஹரிபரந்தாமன்: அதில் தேர்தல் பத்திரம் திட்டம் முறையே செல்லாது என்றும் இந்த முறையில் பெறப்பட்ட நன்கொடைகள் குறித்த தகவல்களைப் பகிர வேண்டும் எனக் கூறப்பட்டு உள்ளது. இதற்கிடையே இது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "இது மிகத் தாமதமான, அதே நேரத்தில் சரியான தீர்ப்பு என்பதே எனது கருத்து.. இத்தனை ஆண்டுகளில் பல கோடி ரூபாய் பாஜகவுக்கு நன்கொடையாகச் சென்று இருக்கிறது.
யாருக்கும் தெரியாது: அந்த பணத்தை யார் கொடுத்தார்கள் என யாருக்கும் தெரியாது. அதுபோல சட்டத்தை வைத்திருந்தார்கள். தேர்தல் நிதி கொடுக்கும் வரம்பை எடுத்துவிட்டார்கள். வெளிநாட்டு நிறுவனங்கள் முதல் உள்நாட்டு நிறுவனங்கள் வரை யார் வேண்டுமானாலும் எவ்வளவு நன்கொடை வேண்டுமானாலும் தரலாம் என்ற நிலையை உருவாக்கி விட்டார்கள்.
அதேநேரம் மக்களுக்கும் நன்கொடை குறித்த தகவல்களைத் தெரிவிக்கத் தேவையில்லை என்று கூறிவிட்டார்கள். இதுவே தேர்தல் பத்திரங்களில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதை எதிர்த்தே வழக்கு தொடரப்பட்டது. பல ஆண்டுகளாக இதை விசாரிக்காமல் இருந்த உச்ச நீதிமன்றம் இதை ரத்து செய்துள்ளது வரவேற்கத்தக்கது. குறைந்தபட்சம் யார் நன்கொடை தருகிறார்கள் என்பதையாவது மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
காப்ரேட் நிறுவனங்கள்: ஒரு காப்ரேட் பல ஆயிரம் கோடி ரூபாயைக் குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு நிதி கொடுக்கிறது என்றால் அதைப் பொதுமக்களிடம் தெரிவிக்க வேண்டும். அதைத் தெரிவிக்கும் முறை தேர்தல் பத்திரங்களில் இல்லாமல் இருந்தது. இதைத் தான் பலரும் கடுமையாக எதிர்த்தனர். எப்போதும் காப்ரேட் நிறுவனங்கள் ஆளும் தரப்பிற்குத் தான் அதிக நன்கொடை தருவார்கள். அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி. அதில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதே கோரிக்கை.
ஒவ்வொரு முறையும் தேர்தல் நடக்கும் போது இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வரும். ஆனால் விசாரிக்க மாட்டார்கள். இந்த முறை விசாரணைக்கு வந்துள்ளது வரவேற்கத்தக்கது.
அடுத்து என்ன நடக்கும்: வரும் காலத்தில் இந்த விவகாரத்தில் என்ன நடக்கும் என்பதை உறுதியாகச் சொல்லவில்லை. நிதி கொடுக்க வேண்டாம் என யாரும் சொல்லவில்லை.. அதில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதைக் கோரிக்கையாக இருந்தது. அதேபோல முன்பு ஒரு நிறுவனம் அதிகபட்சம் குறிப்பிட்ட தொகையைத் தான் நன்கொடையாக வழங்க முடியும் என்ற சீலிங் இருந்தது. இப்போது அதையும் எடுத்துவிட்டார்கள். வெளிநாட்டு நிறுவனங்களும் எவ்வளவு வேண்டுமானாலும் நன்கொடை தரலாம்.
வெளிநாடுகளில் இருந்து என்ஜிஓ அமைப்புகள் நிதி பெறக் கட்டுப்பாடுகளை விதித்து நிலையில், மறுபுறம் அரசியல் கட்சிகள் வெளிநாட்டு நன்கொடை வாங்கக் கட்டுப்பாடு இல்லை. அதை வெளியே சொல்லவும் தேவையில்லை என்று கூறியிருக்கிறார்கள். அதைத்தான் இப்போது சுப்ரீம் கோர்ட் தவறு எனக் கூறியிருக்கிறது. இந்த அரசு வரும் காலத்தில் இதே சட்டத்தை மாற்றி வேறு ஒரு வழியில் கொண்டு வரவும் வாய்ப்பு இருக்கு. ஆனால், அதை நாம் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications