ஈரோடு கிழக்கில் காங்கிரசுக்கு மநீம ஆதரவு? எகிறும் எதிர்பார்ப்பில் கமல் ட்விஸ்ட்! என்ன நடக்கும்?
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27 ல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் மீண்டும் அந்த தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் கமல்ஹாசன் பங்கேற்ற நிலையில் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அவர் ஆதரவளிக்க வாய்ப்புள்ளதாக தகவல் பரவும் நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் முடிவு மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருக்கும் விஷயம் என்னவென்றால் அது ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் தான். கடந்த 2021 சட்டசபை தேர்தலில் இந்த தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில் தான் கடந்த 4ம் தேதி துரதிர்ஷ்டவசமாக திருமகன் ஈவெரா மரணமடைந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு பிப்ரவரி 27 ல் இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் வரும் 31ம் தேதி துவங்கி நடைபெற உள்ளது.

மல்லுக்கட்டும் காங்கிரஸ்-அதிமுக
இந்நிலையில் தான் திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு இந்த தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாறாக அதிமுக கூட்டணியில் கடந்த முறை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் தற்போது அதிமுக களமிறங்க உள்ளதாக தமிழ்மாநில காங்கிரஸின் தலைவர் ஜிகே வாசன் அறிவிப்பு செய்துள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில் அங்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் அல்லது அவரது குடும்பத்தை சேர்ந்த ஒருவர் களமிறங்கலாம் என கூறப்படும் நிலையில் அதிமுக சார்பில் வேட்பாளர் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் தனித்தனியே செயல்பட்டு வருவதால் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா? இல்லையா? என்ற கேள்வி உள்ளது.

பாஜக, அமமுக, நாம் தமிழர்
இது ஒருபுறம் இருக்க இந்த இடைத்தேர்தலில் பாஜக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது. பாஜகவின் செயற்குழு கூட்டம் இன்று கடலூரில் நடக்கும் நிலையில் இதுபற்றி விவாதித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. அதேபோல் டிடிவி தினகரனின் அமமுமக, சீமானின் நாம் தமிழர் கட்சிகளும் வேட்பாளர்களை களமிறக்கலாம் என கூறப்படுகிறது. இன்னும் சில நாட்களில் இதுதொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம்.

காங்கிரசுடன் நெருக்கம் காட்டும் கமல்
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாடு என்ன? என்பது பற்றிய கேள்வி எழுந்துள்ளது. கடந்த 2021 தேர்தலில் மக்கள் நீதி மய்யம் இந்த தொகுதியில் 4வது இடத்தை பிடித்தது. அக்கட்சியின் வேட்பாளர் ராஜ்குமார், 10,005 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இந்நிலையில் தான் மீண்டும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை நிறுத்தி ஆளும் கட்சியின் மீதான அதிருப்தி அலை, அதிமுகவின் உள்கட்சி பூசலை சாதகமாக பயன்படுத்தி ஓட்டுக்களை அறுவடை செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போதைய சூழலில் மக்கள் நீதி மய்யம் காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமாக செல்கிறது. கடந்த டிசம்பர் 24ல் டெல்லியில் நடந்த ராகுல் காந்தியின் பாரத் ஜேடோ யாத்திரையில் கமல்ஹாசன் தனது கட்சி நிர்வாகிகளுடன் பங்கேற்றதும், அதன் பிறகு ராகுல் காந்தியுடன் கலந்துரையாடியதும் தான் இதற்கு சாட்சியாகும்.

மக்கள் நீதி மய்யம் நிலைப்பாடு?
கமல்ஹாசனின் இந்த நடைமுறை என்பது வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வழியாக திமுக கூட்டணியில் இணைய மக்கள் நீதி மய்யம் முயற்சி செய்வதாக அரசியல் நோக்கர்கள் கூறி வரும் நிலையில் தான் இது எந்த அளவுக்கு உண்மை என்பது இந்த இடைத்தேர்தல் மூலம் தெரியவரும் என அவர்கள் கூறுகின்றனர். இதற்கிடையே ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஜனவரி 23ல் ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை கட்சி தலைமை அலுவலகத்தில் நடநக்கும் கூட்டத்தில் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், சார்பு அணிகளின் மாநில செயலாளர்கள், கோவை மண்டல அமைப்புச் செயலாளர், ஈரோடு மாவட்ட செயலாளர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தின் முடிவில் தான் மக்கள் நீதி மய்யம் தனித்து களம் இறங்குமா? இல்லாவிட்டால் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு வழங்குமா? இல்லாவிட்டால் தேர்லை புறக்கணிக்குமா? என்பது தெளிவாக தெரியவரும். இதனால் ஜனவரி 23ம் தேதி வரை நாம் காத்திருக்க வேண்டியது அவசியமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications