Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கே.என்.நேரு மீதான வழக்கில் இனி என்ன நடக்கும்.. நீதிபதிகள் நேற்று குறிப்பிட்ட முக்கியமான வார்த்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நகராட்சி நிர்வாகத்துறையில் 2516 பணியிடங்களை நிரப்பியதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை ஆதாரங்கள் அளித்திருந்தது. அந்த அடிப்படையில் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று கே.என்.நேரு மீதான வழக்கில் நீதிபதிகள் முக்கியமான சில வார்த்தைகளை குறிப்பிட்டு இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த வழக்கில் இனி என்ன நடக்கும். அமலாக்கத்துறை எப்போது அதிரடியை ஆரம்பிக்கும் என்பதை பார்ப்போம்.

நகராட்சி நிர்வாகத்துறையில் 2516 பணியிடங்களை நிரப்பியதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாகவும் ஊழல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில், அ.தி.மு.க. ராஜ்யசபா எம்.பி. சி.வி. சண்முகம், மருது சேனை என்ற அமைப்பின் தலைவர் ஆதிநாராயணன் ஆகியோர் தனித்தனியாக வழக்குகளை தாக்கல் செய்தனர்.

What will happen next in the case against K N Nehru The important words mentioned by the judges

வழக்கு

அவர்கள் தாக்கல் செய்த மனுவில் அமலாக்கத்துறையின் மனுவை குறிப்பிட்டிருந்தனர். அதில் "தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் உதவி பொறியாளர், ஜூனியர் பொறியாளர் உள்ளிட்ட 2 ஆயிரத்து 516 பணியிடங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட நியமனத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்து மத்திய அமலாக்கத்துறை ஆதாரங்களுடன் தமிழ்நாடு டி.ஜி.பி.க்கு கடிதம் அனுப்பியும் இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை.


கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் வீடு

வங்கி மோசடி தொடர்பாக பதிவான வழக்கில் நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது இந்த ஆதாரங்களையெல்லாம் கைப்பற்றி உள்ளார்கள். ஆகவே அமலாக்கத்துறை கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு உள்துறை செயலாளர், டி.ஜி.பி., லஞ்சஒழிப்பு போலீஸ் இயக்குனர் ஆகியோருக்கு உத்தரவிடவேண்டும்" என்று கூறியிருந்தனர்.

நீதிபதிகள் விசாரணை

இந்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி ஜே.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் விசாரித்தனர். அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், மூத்த வக்கீல்கள் என்.ஆர்.இளங்கோ, விக்ரம் சவுத்ரி, அமலாக்கத்துறை சார்பில் சிறப்பு குற்றவியல் வக்கீல் என்.ரமேஷ், மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல் ராகவாச்சாரி, எம்.தமிழ் செல்வன், நிரஞ்சன் எஸ்.குமார் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள்.

தமிழக அரசின் வாதங்கள்

அமலாக்கத்துறை வழங்கிய ஆதாரங்களின் அடிப்படையில் மாநில போலீசார் ஏற்கனவே ஒரு 'ஆரம்பக்கட்ட விசாரணையை' நடத்தி வருகிறோம். எனவே, உடனடியாகப் புதிய வழக்குப்பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பது போன்ற ஒரு நிலைப்பாட்டை அரசு எடுத்தது. மத்திய அமலாக்கத்துறை வழங்கிய தகவல்கள் மற்றும் ஆவணங்கள் மீது மாநில போலீசார் நடவடிக்கை எடுக்க கால அவகாசம் தேவை.

அவசரப்பட்டு நடவடிக்கை எடுக்க முடியாது

லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த விவகாரத்தை முறையாகக் கையாண்டு வருகிறார்கள் மனுதாரர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை, ஆதாரங்கள் இன்றி அமைச்சர்கள் மீது புகார் கூறப்படுகிறது. 2,516 பணியிடங்கள் ஏற்கனவே நிரப்பப்பட்டு அவர்கள் பணியில் சேர்ந்துவிட்டதால், இந்த விவகாரத்தில் அவசரப்பட்டு எடுக்கப்படும் நடவடிக்கைகள் நிர்வாக ரீதியான சிக்கல்களை உருவாக்கும் என்று தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இருப்பினும், சென்னை உயர் நீதிமன்றம் இந்த வாதங்களை முழுமையாக ஏற்கவில்லை.


டிஜிபியிடம் ஒப்படைப்பு

மனுதாரர்கள் (அ.தி.மு.க. எம்.பி. சி.வி. சண்முகம் மற்றும் மருது சேனை தலைவர் ஆதிநாராயணன்) தரப்பில் முன்வைக்கப்பட்ட முக்கிய வாதங்கள் விவரம்:

"தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,516 பணியிடங்களை (உதவி என்ஜினீயர், ஜூனியர் என்ஜினீயர் உட்பட) நிரப்பியதில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருக்கிறது. வங்கி மோசடி வழக்கு தொடர்பாக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தியபோது, இந்தப் பணி நியமன ஊழல் தொடர்பான வலுவான ஆதாரங்களை மத்திய அமலாக்கத்துறை கைப்பற்றியிருக்கிறது. இந்த ஆதாரங்களை அமலாக்கத்துறை தமிழ்நாடு டி.ஜி.பி.யிடம் ஒப்படைத்து பல மாதங்கள் (சுமார் 8 மாதங்கள்) ஆகியும், மாநில போலீசார் இதுவரை எப்.ஐ.ஆர் (பதிவு செய்து முறையான நடவடிக்கை எடுக்கவில்லை).

வாட்ஸ் அப்பில் தகவல்

இந்த ஊழலில் அமைச்சரின் சகோதரர்கள் மற்றும் தேர்வு நடத்தும் உயர் அதிகாரிகளுக்குத் தொடர்பு உள்ளது. இவர்களைக் காப்பாற்றுவதற்காகவே மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையைத் தாமதப்படுத்துகின்றனர். ஒரு பணியிடத்திற்கு 25 லட்சம் முதல் 35 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெறப்பட்டுள்ளது. இதற்காக 10 ரூபாய் நோட்டை அடையாளமாக வைத்து ஹவாலா முறையில் பணப் பரிமாற்றம் நடந்திருக்கிறது. முறையான தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்பே, தேர்வாக வேண்டியவர்களின் விவரங்கள் வாட்ஸ்அப் மூலம் அதிகாரிகளுக்குப் பகிரப்பட்டிருக்கிறது" என்று வாதிடப்பட்டது.

அமலாக்கத்துறை வாதங்கள் மற்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது என்ன

நகராட்சி நிர்வாகத்துறையின் 2,516 பணியிடங்களை நிரப்பியதில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளதை அமலாக்கத்துறை உறுதிப்படுத்தி உள்ளது. இந்த ஊழல் தொடர்பான மிக முக்கியமான ஆவணங்களை அமலாக்கத்துறை ஒரு சீல் வைக்கப்பட்ட உறையில் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறது. தகுதியான நபர்களைத் தேர்வு செய்வதற்கு முன்பே, தேர்வாக வேண்டிய விண்ணப்பதாரர்களின் பட்டியல் அதிகாரிகளுக்கு வாட்ஸ்அப் மூலம் பகிரப்பட்டதற்கான டிஜிட்டல் ஆதாரங்களை அமலாக்கத்துறை வழங்கி உள்ளது.

அமலாக்கத்துறை வாதம்

அமலாக்கத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிட்ட போது, ஒவ்வொரு பணியிடத்திற்கும் 25 லட்சம் முதல் 35 லட்சம் ரூபாய் வரை லஞ்சமாகப் பெறப்பட்டுள்ளது. இந்த பணப் பரிமாற்றத்தின் போது 10 ரூபாய் நோட்டை அடையாளமாகப் பயன்படுத்தியதும், ஹவாலா முறையில் பணம் கைமாறியதும் விசாரணையில் கண்டறியப்பட்டதாக குற்றம்சாட்டியது.

முறைகேட்டில் தொடர்பு

அமைச்சரின் சகோதரர்கள் மற்றும் தேர்வு நடத்தும் அதிகாரிகளுக்கு இந்த முறைகேட்டில் நேரடித் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களை அமலாக்கத்துறை சுட்டிக்காட்டியது. இந்த ஆதாரங்கள் அனைத்தையும் கடந்த ஆண்டு அக்டோபரிலேயே மாநிலப் போலீசாரிடம் ஒப்படைத்தும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் அமலாக்கத்துறை பதிவு செய்தது.

மிகப்பெரிய முறைகேடு

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டிருந்தார்கள். இந்தநிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நேற்று பிறப்பித்தனர். தீர்ப்பில் நீதிபதிகள் கூறுகையில், "ஆதிநாராயணன் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம். இந்த வழக்கில் சில ஆவணங்களை அமலாக்கத்துறை சீல் வைத்த உறையில் தாக்கல் செய்தது. அதில் உள்ள தகவல்களைப் பார்க்கும் போது, நகராட்சி நிர்வாகத்துறை பணி நியமனத்தில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பது தெரியவருகிறது.

10 ரூபாய் நோட்டு

அமலாக்கத்துறை ஆவணத்தில் அமைச்சரின் சகோதரர்கள், தேர்வு நடத்தும் அதிகாரிகள் பெயர்கள் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன. பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கு முன்பே, தேர்வான விண்ணப்பதாரர்களின் விவரம் வாட்ஸ்அப்பில் பகிரப்பட்டுள்ளது. 10 ரூபாய் கரன்சி நோட்டை அடையாளமாக வைத்து ஒரு பணியிடத்துக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை லஞ்ச பணம் கைமாறியிருக்கிறது. ஹவாலா பண பரிவர்த்தனையும் நடந்துள்ளது.

ஆதாரங்கள் போதுமானவை

இந்த ஆதாரங்கள் எல்லாம், நகராட்சி துறை பணி நியமனத்தில் ஊழல் நடந்திருப்பதை உறுதி செய்ய போதுமானவையாக இருக்கின்றன. அமலாக்கத்துறை தந்துள்ள இந்த ஆதாரங்களின் அடிப்படையில் மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல், ஆரம்பக்கட்ட விசாரணை என்ற பெயரில் சாதாரணமாக ஒரு விசாரணையையே போலீசாரே நடத்தி உள்ளனர். இந்த செயல், தமிழ்நாடு போலீசார் மீது மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

சமுதாயத்தில் மிகப்பெரியவர்கள்

கடந்த ஆண்டு அக்டோபர் 27-ந் தேதி இந்த ஆதாரங்களை எல்லாம் அமலாக்கத்துறை கொடுத்தும், கிட்டத்தட்ட 8 மாதங்களாக தமிழ்நாடு போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள நபர்கள் சமுதாயத்தில் மிகப்பெரியவர்கள். அவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக போலீசார் நேர்மையான முறையில் விசாரணையை மேற்கொள்ளவில்லை என மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. உதவி என்ஜினீயர்கள் உள்ளிட்ட 2 ஆயிரத்து 516 பணியிடங்கள் நிரப்பப்பட்டுவிட்டன. தேர்வு செய்யப்பட்டவர்கள் பணியில் சேர்ந்து 6 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது.

விரிவான விசாரணை

இந்த பணி நியமனம் தொடர்பான குற்றச்சாட்டு குறித்து விரிவான புலனாய்வு விசாரணை நடத்தப்பட வேண்டும். இதில் காலதாமதம் ஏற்பட்டால், ஆதாரங்கள் எல்லாம் அழிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது எனவே, அமலாக்கத்துறை அளித்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விரிவான விசாரணை நடத்த வேண்டும். அந்த விசாரணையின் அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

எப்படி கண்டுபிடித்தது அமலாக்கத்துறை

வங்கி மோசடி வழக்கு தொடர்பாக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தியபோது தான் நகராட்சி நிர்வாக ஊழல் தொடர்பான ஆதாரங்களை கைப்பற்றி உள்ளதாக அமலாக்கத்துறை வாதத்தில் கூறியிருந்தது. 10 ரூபாய் நோட்டை அடையாளம் வைத்து நடந்ததாக கூறியிருக்கிறது. எதையோ தேடப்போன அமலாக்கத்துறைக்கு நகராட்சி ஊழல் விவகாரம் தெரியவந்திருப்பது தெரியவந்துள்ளது.

இனி என்ன நடக்கும்

தமிழக அரசு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, நகராட்சி ஊழல் விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கையை போலீசார் பதிவு செய்ய வேண்டும். அதில் கேஎன்நேரு மற்றும் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்தாக வேண்டும். அப்படி ஓரிருநாளில் வழக்கை பதிவு செய்தே ஆக வேண்டும்.. அப்படி பதிவு செய்த அடுத்த நாளே அல்லது அதே நாளில் கூட அமலாக்கத்துறை கே.என்.நேரு மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்ய முடியும்.

கே.என்.நேருவுக்கு நெருக்கடி

எனவே இனி கே.என்.நேருவுக்கு நெருக்கடி அதிகரிக்கும் என்றே தெரிகிறது. கே.என்.நேருவும் குற்றம் தன் மீது இல்லை என்பதை வலுவாக நிரூபிக்க வேண்டும் அல்லது செந்தில் பாலாஜி போல் உடல்நிலையை காரணம் காட்டித்தான் ஜாமீன் பெறக்கூடிய நிலை உருவாகும்..

மேல்முறையீடு

எனினும் தற்போதைய நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய ஒரு வாய்ப்பு இருக்கிறது. அதில் மேல்முறையீடு செய்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை வாங்கினால், தேர்தல் வரை தள்ளிப்போகலாம். அதேநேரம் நிச்சயம் ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு சவாலானதாகவே பார்க்கப்படுகிறது. தேர்தல் நேரத்தில் நெருக்கடியாகும் அபாயமும் உள்ளதால் அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+