"விடாதீங்க.. கவனமா இருங்க".. முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு.. அதிரடியில் குதித்த காவல்துறை..!
முக்கிய உத்தரவை முதல்வர் ஸ்டாலின் காவல்துறைக்கு பிறப்பித்துள்ளார்
சென்னை: மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளைய தினம் நடைபெற உள்ள நிலையில், மிக முக்கியமான உத்தரவு ஒன்றினை காவல்துறைக்கு, முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
நாளை தேர்தல் நடக்க உள்ள நிலையில், மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் இருக்கின்றன..
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடிக்க அனைத்து ஏற்பாடுகளையும் மாநில காவல்துறையும் மேற்கொண்டுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்
போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் அனைத்து மாவட்டங்களிலும் தேவையான அளவுக்கு போலீசார் பாதுகாப்புக்காக தயார் நிலையில் உள்ளனர். அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் கமிஷனர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன என்றும், எக்காரணத்தை கொண்டும் தேர்தல் நாள் அன்று அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விடக்கூடாது என்று டிஜிபி சைலேந்திரபாபு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.. எனவே, வாக்குப்பதிவு நடைபெறும் 19-ந்தேதியன்று தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

நிர்ப்பந்தம்
இதனிடையே, தேர்தலை சுமூக நடத்தி முடிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தமும், அவசியமும் மாநில அரசுக்கு ஏற்பட்டுள்ளது.. காரணம், திமுக அரசு மீது எதிர்க்கட்சிகள் கடந்த 2 மாத காலமாகவே குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.. நகர்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து எதிர்க்கட்சியான ஆளும் திமுக பல்வேறு தேர்தல் விதிமீறல்களில் ஈடுபடுவதாக அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே புகார் அளித்திருந்தனர்.

மாஜிக்கள்
அதேபோல, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், சிவி சண்முகம், பெஞ்சமின் ஆகியோர் கடந்த 12-ம் தேதி கவர்னர் மாளிகையில் இதற்காகவே ஆளுநரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.. அப்போது பேசிய மாஜிக்கள், மின்னணு வாக்குப்பதிவு முறையில் தேர்தல் நடத்துவதால், சீல் உடைக்கும்போது காணொலியில் பதிவு செய்ய வேண்டும் என்கிற விதி உள்ளது. ஆனால், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 22 அதிமுக வேட்பாளர்களின் மனுக்களை திரும்பப் பெற வைத்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் அதிமுக வேட்பாளர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள்...

கொலை மிரட்டல்
ஒருபக்கம் தேர்தல் ஆணையம் கண்டும் காணாமல் உள்ளது, மறுபக்கம் காவல் துறையினர் அதிமுகவினரை மிரட்டுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.. கோயம்புத்தூர், சேலம், ஈரோடு ஆகிய மாநகராட்சிகளில் குற்றவாளிகள் முகாமிட்டுள்ளனர். அவர்கள் அதிமுகவினரை மிரட்டுகிறார்கள்... கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது... திமுகவிற்கு தேர்தல் ஏஜென்டாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது" என்று அதிமுக தரப்பில் கூறப்பட்டது.

இந்து மக்கள் கட்சி
அதேபோல இந்த முறை தனித்து களமிறங்கும் பாஜக தரப்பிலும் இதே குற்றச்சாட்டு திமுக அரசு மீது உள்ளது.. இந்த முறை, நேர்மையாக தேர்தல் நடத்தப்பட்டால், பாஜக நகர்ப்புறங்களில் பிரதான இடங்களில் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.. இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத்தும், தேர்தல் ஆணையம் திமுக ஆணையமாக செயல்படுகிறது, முறைகேடுகளை படம் பிடித்து கொண்டு ஆதாரமாக காட்டினால்கூட நடவடிக்கை எடுப்பதில்லை என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.

தேர்தல் ஆணையம்
ஆக மொத்தம் தமிழகம் முழுவதும் திமுகவினர் அராஜகம் செய்து வருவதாகவும், திமுகவினரின் இந்த செயலுக்கு தேர்தல் ஆணையம், அதிகாரிகள் துணை போகிறார்கள் என்றும் ஒரு முக்கியமான குற்றச்சாட்டு அரசியல் களத்தில் அழுத்தமாக படிந்துள்ளது.. ஏற்கனவே மேற்கு வங்கத்தை போல் தமிழக சட்டப்பேரவையும் முடக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி பேசிவரும் நிலையில், எதிர்க்கட்சிகளின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு கொஞ்சமும் இடம் தந்துவிடக்கூடாது என்ற அவசியம் திமுக மேலிடத்துக்கு ஏற்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின்
இதை களையத்தான் முதல்வர் ஸ்டாலின் அதிரடியாக டிஜிபிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளாராம்.. சைலேந்திர பாபு உள்ளிட்ட காவல்துறை, உளவுத்துறை உயர் அதிகாரிகளை உடனடியாக அழைத்து, தேர்தல் நாளன்று எந்த ஒரு சிறிய அசம்பாவித சம்பவங்களும் நடந்துவிடக்கூடாது.. சின்ன விஷயம் என்றாலும் அதை எதிர்க்கட்சிகள் பெரிதாக்கிவிடுவார்கள்.. அதற்கு நாம் இடம் தந்துவிடக்கூடாது.. பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மிக கவனமுடன், விழிப்புடன் செய்ய வேண்டும் என்றாராம்..

தயார் நிலை
இதையடுத்தே, பல்வேறு முன்னேற்பாடுகளையும் தமிழக காவல்துறை கையாண்டு வருகிறது.. தமிழகம் முழுவதும் வெளியாட்கள் வார்டுகளை விட்டு வெளியேற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது... எல்லாவற்றிற்கும் மேலாக, பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்கு வசதியாக அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் கொடி அணிவகுப்பும் நடத்தப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications