Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேதார விவரம் கணக்கெடுப்பு எப்போது? முதலமைச்சர் சொன்ன பதில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேதார விவரம் கணக்கெடுப்பு எப்போது என்பது பற்றி முதலமைச்சர் ஸ்டாலின் இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியிருக்கிறார்.

முதல்வர் பிரஸ்மீட் முழுமையாக பின் வருமாறு;

''வரலாறு காணாத வகையில், பெருமழையானது நேற்றைய தினம் கொட்டி தீர்த்திருக்கிறது. பெருநகர சென்னை மாநகராட்சியின் மழை அளவீடுகளின்படி, மீனம்பாக்கத்தில் 43 செ.மீ. பெருங்குடி 44 செ.மீ பதிவாகி இருக்கிறது. இதை வைத்தே நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம். நான் அதிகம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

When is the damage survey in flood affected areas?

அப்போது, அதாவது 2015-ஆம் ஆண்டில் பல இடங்களில் தண்ணீர் தேக்கம் ஏற்பட்டது. இந்த அரசு பொறுப்பேற்ற பின்பு 2021 ஆம் ஆண்டு நவம்பரில் பெருமழை ஏற்பட்டது. அதை மனதில் வைத்துக்கொண்டு தான் அப்போது தேங்கி இருந்த மழைநீரை கணக்கில் எடுத்து, அந்த அடிப்படையில்தான், சென்னை மாநகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஒட்டுமொத்த மழைநீர் வடிகால் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக நாங்கள் திட்டமிட்டோம். பல்வேறு முயற்சிகளை இந்த அரசு எடுத்தது. இதற்கென பல்வேறு வல்லுநர்களைக் கொண்ட குழு ஒன்றை ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திரு.திருப்புகழ் அவர்களுடைய தலைமையில் அமைத்தோம்.

அந்த குழு ஆய்வு நடத்தி, அவர்கள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில், சுமார் 4000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வெள்ளநீர் வடிகால் மேம்பாட்டு பணிகள் மேற்கொண்டோம். இந்தப் பணிகள் செய்த காரணத்தினால், தற்போது ஏற்பட்டிருக்கக்கூடிய இந்த வரலாறு காணாத வெள்ளத்தை நாம் சந்தித்தபோதும், அதனுடைய தாக்கம் கடந்த காலங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது பெருமளவு குறைந்திருக்கிறது. அதை நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.

உதாரணமாக, 2015-ஆம் ஆண்டு கடந்த ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை யாரும் மறந்திருக்கமாட்டீர்கள். அதை ஒப்பிடும்போது, அன்று நுங்கம்பாக்கத்தில் 29.4 சென்டிமீட்டர் மழையும், மீனம்பாக்கத்தில் 34.5 சென்டிமீட்டர் மழையும் 24 மணி நேர காலஅளவில் பதிவானது. இதனை ஒப்பிடும்போது, தற்போது வீசியிருக்கக்கூடிய மிக்ஜாம் புயலால் ஏற்பட்டிருக்கக்கூடிய மழை என்பது மிக மிக மிக அதிகம் என்பதை நீங்கள் உணர்வீர்கள். பெருங்குடியில் மட்டும் 44 சென்டிமீட்டர் மழையும், மீனம்பாக்கத்தில் 43 சென்டிமீட்டர் மழையும் 36 மணி நேரத்தில் பதிவாகியுள்ளது. இது மிக மிக அதிக அளவாகும்.

மிக்ஜாம் புயலானது விரைவாக கடந்து செல்லாமல், நின்று மழை பெய்த காரணத்தினால், இரண்டு நாட்கள் சென்னையில் பெருமழை ஏற்பட்டது. அதனால்தான் சென்னையில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் அனைவரும் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

இத்தகைய ஒரு மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும், இந்த அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாகவும், உடனடி நிவாரணப் பணிகள் மூலமாகவும் உயிரிழப்புகளும், மற்ற பிரச்சனைகளும் பெருமளவு குறைக்கப்பட்டிருக்கிறது. சொல்லப் போனால் 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 199 பேர் இறந்திருக்கிறார்கள். ஆனால், இன்று அதைவிட அதிகமான மழை பெய்திருக்கக்கூடிய நேரத்தில் 7 பேர் மட்டுமே இறந்திருக்கிறார்கள். இதுவும் ஏற்பட்டிருக்கக்கூடாது. ஆனால் தவிர்க்கமுடியாத காரணத்தினால் ஏற்பட்டிருக்கிறது. அதற்காக நான் வருத்தப்படுகிறேன். அதில் குறிப்பாக, செங்கல்பட்டில், சுவர் இடிந்து அங்கே சிலர் இறந்திருக்கிறார்கள். அடுத்து, குருநானக் கல்லூரி அருகே நடந்த விபத்து. அதுவும் உங்களுக்கு தெரியும். அதனுடைய முழு விபரம் வரவில்லை. வந்த பிறகு நாங்கள் சொல்கிறோம்.

தற்போது 9 மாவட்டங்களில், 61,666 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 11 இலட்சம் உணவு பொட்டலங்கள் இதுவரைக்கும் வழங்கியிருக்கிறோம். அவர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. காலையிலிருந்து 1 லட்சம் பால் பாக்கெட் விநியோகம் செய்யப்பட்டிருக்கிறது. தேவையான அத்தியாவசியமான பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது.

மழைநீர் வடிகால் பணிகளை நல்ல முறையில் செய்தாலும், மழைநீர் இறுதியாக கடலில் வடியக்கூடிய அடையாறு மற்றும் கூவம் நதிகளின் முகத்துவாரங்களில் புயலின் காரணமாக அலைகளின் அளவு அதிகமாக இருந்த காரணத்தினால், இந்த நதிகளில் வெள்ள நீர் மிக மெதுவாகவே வடிந்து வருகிறது. இருந்தாலும், அரசு மேற்கொண்ட பல்வேறு வெள்ள நிவாரணப் பணிகளால் இச்சூழ்நிலையிலிருந்து பெருமழையின் தாக்கம் குறைக்கப்பட்டிருக்கிறது, வெள்ளநீரும் விரைவாக வடிந்து வந்து கொண்டிருக்கிறது.

அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி குறிப்பிட நான் விரும்புகின்றேன். 2015-ஆம் ஆண்டில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திட்டமிடப்படாமல், அடையாறு வரும்பொழுது, 1 இலட்சம் கன அடி அளவிற்கு பெருமளவு நீர் திடீரென திறந்து விடப்பட்டது. வெள்ளம் ஏற்பட்டதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அது ஒரு செயற்கை வெள்ளம். இது இயற்கையாக ஏற்பட்டிருக்கக்கூடிய வெள்ளம். அதையும், இதையும் புரிந்துகொள்ளவேண்டும்.

இந்த அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாக, கடந்த நான்கு நாட்களில் செம்பரம்பாக்கத்தில் இருந்த நீர் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு திறந்து விடப்பட்ட காரணத்தினால், இத்தகைய பெருமழையின் போது ஓரளவிற்கு சமாளித்திருக்கிறோம். இத்தகைய பெருமழையின் போதும் அதிகபட்சமாக விநாடிக்கு 8000 கன அடி அளவிற்கு மட்டுமே நீர் திறந்து விடப்பட்டது.

இவ்வாறு நாம் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளுக்கு பின்னரும், வரலாறு காணாத அளவில் பெய்த பெருமழையால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களை நேரிலும் ஊடகங்கள் வாயிலாகவும் நாம் பார்க்கிறோம். இத்தகைய பெரும் இயற்கைச் சீற்றங்களால் மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாக நேரிட்டாலும், ஓர் அரசின் உண்மையான கடமை என்பது, இந்த இன்னல்களின் தாக்கத்தைக் குறைப்பதோடு, இந்த இன்னல்களில் இருந்து மக்கள் உடனடியாக வெளிவர தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதே ஆகும். இந்த வகையில், நேற்று மழை நிற்பதற்கு முன்பாகவே, தமிழகத்தில் உள்ள மற்ற மாநகராட்சி பகுதிகளில் இருந்து தூய்மைப் பணியாளர்கள் உட்பட பல்வேறு பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு சென்னை வந்தடைந்துள்ளனர்.

நீங்களே இவர்கள் வெளியில் நிற்பதை பார்த்திருப்பீர்கள். இவர்கள் அனைவரும் சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சி பணியாளர்களோடு இணைந்து ஏற்கனவே பணியாற்றி கொண்டிருக்கிறார்கள். இன்னும் சில பேர் வருகை தந்து பணியாற்ற இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலையை விரைவில் திரும்பச் செய்வதற்கான அனைத்து பணிகளையும், முனைப்போடு மேற்கொண்டு வருகிறார்கள்.

இப்பணிகளை ஒருங்கிணைத்து உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர் பெருமக்கள் அனைவரும் மேற்கொண்டு வரும் இந்த முயற்சிகளின் விளைவாக, சென்னை மாநகராட்சி மற்றும் அதன் சுற்றியுள்ள இடங்களில், பல பகுதிகளில் இயல்பு நிலை திரும்ப தொடங்கியுள்ளது. 14 அமைச்சர்கள் களத்தில் இருந்து பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். பல இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் இதற்காக நியமிக்கப்பட்டு அவர்களும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

4000 கோடி ரூபாயில் பணிகள் செய்தும், சென்னை மிதக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் இதை ஒரு பெரிய குற்றமாக சொல்லிக்கொண்டிருக்கிறார். நான் சொல்கின்ற ஒரே பதில் என்னவென்றால், இதை நான் அரசியலாக்க விரும்பவில்லை. இருந்தாலும், அவர் தொடர்ந்து இதை சொல்லிக் கொண்டிருக்கின்ற காரணத்தினால், நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, 4000 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நடைபெற்ற காரணத்தினால்தான், இவ்வளவு பெரிய வரலாறு காணாத 47 வருடமாக பார்க்காத மழையிலிருந்து இன்றைக்கு சென்னை தப்பி இருக்கிறது. திட்டமிட்டு செலவு செய்து அந்தப் பணிகளை எல்லாம் நிறைவேற்றிய காரணத்தினால்தான் அது சாத்தியமானது. அதை புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் காலத்தில் எதுவும் செய்யவில்லை. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டு காலத்தில் இதை செய்து முடித்திருக்கிறோம் என்பதை நான் உங்களிடத்தில் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

கேள்வி : வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்திருக்கிறது. மத்திய அரசிடம் ஏதாவது உதவி கோரப்படுமா....

மாண்புமிகு முதலமைச்சரின் பதில் : வரலாறு காணாத மழையின் காரணமாக வெள்ள சேதம் ஏற்பட்டிருக்கிறது. குடியிருப்புகள் எல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறது. சாலைகள் எல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இப்படி பல்வேறு பணிகள் இருக்கிறது. அதனால் ஒன்றிய அரசிடம் 5000 கோடி ரூபாய் உடனடியாக ஒதுக்கவேண்டும் என்று கடிதம் இன்றைக்கு எழுதப் போகிறோம். இது குறித்து இன்றைக்கு நாடாளுமன்றத்தில், திமுக உறுப்பினர்களும் பேச இருக்கிறார்கள்.

கேள்வி : இன்னும் சில இடங்களில் மின் இணைப்பு கொடுக்காப்படாமல் இருப்பது குறித்து....

மாண்புமிகு முதலமைச்சரின் பதில்: இதுவரை மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதில் 75 சதவீத இடங்களில் மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இன்னும் 25 சதவீதம் மீதம் இருக்கிறது. அதுவும் ஏன் என்றால், வெள்ளம் சூழ்ந்திருக்கின்ற காரணத்தினால், சில இடங்களில் மின்சாரக் கம்பங்கள் விழுந்திருக்கிறது. அதற்காகதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்பு கொடுக்காமல் இருக்கிறோம். அதையும் இன்று அல்லது நாளைக்குள் அதுவும் சரிசெய்யப்பட்டுவிடும்.

கேள்வி: நிறைய இடங்களில் மாநகராட்சி ஊழியர்களே போய் சேர முடியவில்லை. அதற்கு என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது?

முதலமைச்சரின் பதில் : சுருக்கமாக சொல்ல வேண்டுமென்று சொன்னால், கடந்த கால ஆட்சியில் 2015-ஆம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்டு எவ்வாறு பாதிப்பு ஏற்பட்டது என்பது உங்களுக்குத் தெரியும். அப்போது நிவாரணப் பணிகள் எல்லாம் 4 நாட்கள் கழித்துதான் நடந்தது. ஆனால் இன்றைக்கு இந்த ஆட்சியில், நேற்றே இந்தப் பணிகள் எல்லாம் தொடங்கப்பட்டுவிட்டது. இன்றைக்கு full strength-ல் தொடங்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு, அதிகமாக, இன்னும் ஒரு வாரத்திற்குள் எல்லாவற்றையும் rectify செய்யவேண்டும் என்ற காரணத்தினால், ஒவ்வொரு பகுதிகளிலும் அமைச்சர்கள், அதிகாரிகளை நியமித்து அந்தப் பணிகளை எல்லாம் கணக்கெடுத்து, உடனடியாக செய்யப் போகிறோம்.

கேள்வி: பாதிக்கப்பட்டப் பகுதிகளில் முழுமையான கணக்கெடுப்பு பணிகள் தொடங்கப்பட்டுவிட்டதா?

முதலமைச்சரின் பதில் : ஓரளவு தொடங்கிவிட்டோம். அது பற்றி பிரச்சனையில்லை.

கேள்வி: நிவாரணப் உதவிகள் குறித்து...

முதலமைச்சரின் பதில்: ஒன்றிய அரசிடம் நிதியை கேட்டிருக்கிறோம். என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம். பார்த்துவிட்டு, நம்முடைய நிதி ஆதாரத்தைப் பொறுத்து, என்ன செய்யமுடியுமோ அதை செய்வோம்.

கேள்வி : மருத்துவ முகாம்கள் குறித்து.....

முதலமைச்சரின் பதில்: மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் கூடுதல் இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.

கேள்வி: சென்னை மாநகராட்சியிலில் மிகுந்த சவாலாக இருக்கும் இடங்கள் குறித்து...

முதலமைச்சரின் பதில் : இந்த மழையே பெரிய சவால்தான். அதனால் எல்லா இடத்திற்கும் சென்றுவிட்டோம்.

கேள்வி : கடைசியாக, மக்களிடத்தில் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

முதலமைச்சரின் பதில் : மக்கள் நல்ல ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார்கள். நாங்கள் முன்கூட்டியே சொல்லி, எச்சரிக்கை விடுத்திருக்கிறோம். இதைத் தொடர்ந்து, இன்னும் நான்கைந்து நாட்கள் பொறுத்திருந்தால், நிச்சயமாக முழு நிவாரணங்களும் பொதுமக்களுக்கு கிடைக்கக்கூடிய வகையில் அரசு செய்து தரும்.

கேள்வி : பால் கிடைக்கவில்லை என்பது பற்றி....

முதலமைச்சரின் பதில் : இன்று காலை முதல் கொடுக்க ஆரம்பித்துவிட்டோம்.''

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+