ஜாலி ஜாலி.. ஒரே டிக்கெட்டில், ஒரே நேரத்தில்.. அரசு பஸ் + மெட்ரோ ரயில்.. அரசு சர்ப்ரைஸ்: மக்கள் குஷி
சென்னை: ஒரே பயணச்சீட்டில் மாநகர பேருந்துகள், சென்னை மெட்ரோ ரயில், புறநகர் ரயில்கள் அனைத்திலும் பயணிக்கும் வசதி குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
சென்னையை பொறுத்தவரை, மெட்ரோ ரயிலுக்கான தேவை நாளுக்கு நாள் பெருகி கொண்டே வருகிறது.. மெட்ரோவில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் ஒருநாளைக்கு கிட்டத்தட்ட 4 லட்சம் வரை உள்ளது..இந்த எண்ணிக்கை இனி இன்னும் அதிகமாகும் என்றும் நம்பப்படுகிறது..

மெட்ரோ சேவை: அதேசமயம், சென்னையின் அனைத்து பகுதிகளையும் டவுன் பஸ்கள் போலவே, மெட்ரோ ரயில் வழித்தடத்தையும் இணைத்தாக வேண்டியுள்ளது... இதற்கான மெட்ரோவின் 2ம்கட்ட விரிவாக்க பணிகளும் துரிதமாக நடந்து கொண்டிருக்கின்றன.. இதனிடையே, பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு தமிழக அரசும் புதுபுது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது..
இதனிடையே, சென்னையில் போக்குவரத்து மற்றும் அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளை, கடந்த 2010-ம் ஆண்டு முதல் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (கும்டா) மேற்கொண்டு வருகிறது.. இதில் ஒன்றுதான், ஒரே பயணச்சீட்டில் மாநகர பேருந்துகள், சென்னை மெட்ரோ ரயில், புறநகர் ரயில்கள் அனைத்திலும் பயணிக்கும் வசதி குறித்த திட்டமாகும்.
புது யோசனை: இந்த யோசனையை தமிழக அரசு மிகத்தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. இதற்காக 2022-ம் ஆண்டு நடைபெற்ற கூட்டத்திலும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமத்தின் தலைவர் முதல்வர் உரையாற்றியிருந்தார்.
அப்போது முதல்வர், "நாம் புதிய தொழில்நுட்பங்களை எந்த அளவிற்கு பயன்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும்.. உலகத் தரம் வாய்ந்த போக்குவரத்து முறை நமது தலைநகரில் அமைய வேண்டும். பொதுப் போக்குவரத்து எந்த அளவிற்கு சிறப்பாக கட்டமைக்கப்படுகிறதோ அந்த அளவிற்கு சாலைகளில் தனியார் வாகனங்களின் எண்ணிக்கையும், போக்குவரத்து நெரிசலும் குறையும், சுற்றுச்சூழல் மாசுபடுவதும் அதே அளவுக்குக் குறையும்.
தமிழக அரசு: அதனால், பொது முக்கியத்துவம் வாய்ந்த இந்த அமைப்பானது பணிகளை ஒருங்கிணைத்து, திட்டமிட்டு குறிப்பிட்ட கால வரம்பிற்குள் அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில், உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் ஒப்புதல் அளித்தவுடனேயே, ஒரே பயணச்சீட்டில் மெட்ரோ ரயில், மாநகர பேருந்தில் பயணிக்கும் திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் உறுதிபட தெரிவித்திருக்கிறது.
கும்டா நம்பிக்கை: இதை நடைமுறைப்படுத்துவதற்கான பூர்வாங்கப் பணிகள் முடிவடைந்த நிலையில், திட்டம் குறித்த விவரங்கள் மற்றும் அமல்படுத்தப்படும் தேதி போன்ற விவரங்களை வழங்குமாறு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது... போக்குவரத்து ஆர்வலர் க.அன்பழகன் எழுப்பிய கேள்விக்கு, கும்டா தற்போது பதில் அளித்துள்ளது.
அந்த பதிலில், "ஒருங்கிணைந்த க்யூஆர் பயணச்சீட்டு மற்றும் பயண திட்டமிடலுக்கான செயலியை அறிமுகப்படுத்தும் வகையில், கடந்த வருடம் நவம்பர் 18-ம்தேதி வீட்டு வசதித் துறை சார்பில் கொள்கை அளவிலான ஒப்புதல் அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து திட்டத்துக்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு, தமிழக உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்திடம் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஒப்புதலுக்கு பிறகு, ஒப்பந்தப்புள்ளி கோரப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்ப்பு : அந்தவகையில், ஒரே பயணச்சீட்டில் மெட்ரோ ரயில், மாநகர பேருந்துகள் உள்ளிட்டவற்றில் பயணிக்கும் திட்டம் மிகுந்த எதிர்பார்ப்பினை தமிழக மக்களுக்கு ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications