"எடு வண்டிய".. அறிவாலயம் கிளம்பும் அன்புமணி?.. லட்டுபோல "வோட் பேங்க்".. பாமக பிளஸ்கள்.. பரபர யூகம்
திமுகவுடன் பாமக கூட்டணி வைக்க வாய்ப்பு குறைவு எனகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்
சென்னை: பாஜகவையும் அன்புமணி விமர்சிக்கிறார், அதிமுகவையும் அன்புமணி விமர்சிக்கிறார்.. திமுக கூட்டணி பற்றியும் எதுவும் கருத்து சொல்லவில்லை.. அப்படியானால் பாமக யாருடன்தான் கூட்டணி வைக்க போகிறது? என்கிற மிகப்பெரிய சஸ்பென்ஸ் அரசியல் களத்தில் நிலவுகிறது.
கடந்த சில தினங்களாகவே, திமுக கூட்டணியில் பாமகவின் பெயரும் அடிபட்டு வருகிறது.. பாமகவை பொறுத்தவரை, திமுகவுடன் கூட்டணி வைக்க நிறைய ஆர்வம் காட்டுவதாகவே தெரிகிறது...
அதேபோல, திமுகவும் இதுவரை பாமகவுடன் கூட்டணி வேண்டாம் என்று சொல்லவில்லை.. 4 சதவீதம் வாக்கு வங்கியை ஸ்ட்ராங்காகவே பாமக இப்போதும் வைத்துள்ளது.. வேல்முருகன் உட்பட பலர் துணையாக இருந்தாலும், பாமகவை தங்கள் பக்கம் வைத்துக்கொள்ளவே திமுகவும் விரும்பும் என்றே தெரிகிறது..

டைரக்ட் அட்டாக்
ஆனாலும், கூட்டணி தொடர்பாக இரு தரப்பிலுமே யாரும் வாய் திறக்கவில்லை.. 2026ல் பாமக தலைமையிலான ஆட்சி அமைப்போம், அதற்கான வியூகத்தை 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது செயல்படுத்துவோம் என்று பாமக தலைவர் அன்புமணி சொல்லி வருகிறார் என்பதால், திமுக, அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெற வாய்ப்பில்லையோ என்ற சந்தேகமும் எழுந்தபடியே உள்ளது. கடந்த 2 தினங்களாகவே, பாஜகவையும் பாமக அட்டாக் செய்து வருவதால், யாருடன்தான் திமுக கூட்டணி வைக்க போகிறது என்ற குழப்பமும் நிலவி கொண்டிருக்கிறது.

திருமா சான்ஸ்
தேர்தலுக்கு இன்னும் டைம் இருக்கிறது என்றாலும், திமுக அல்லது அதிமுகவுடன் இணைந்தே தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயம் பாமகவுக்கு உள்ளது.. இதில், திமுகவுடன் கூட்டணி வைக்க அந்த அளவுக்கு வாய்ப்பில்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. திமுகவிடம் இருந்து எந்தவித சிக்னலும் இதுவரை பாமகவுக்கு கிடைக்கவில்லை.. ஆனால், தங்கள் கூட்டணியில் விசிக இருப்பதால், திமுக தயக்கம் காட்டுவதாக தெரிகிறது.. இந்த தயக்கம் பாமகவுக்கும் இருக்கவே செய்கிறது.. கடந்த ஒரு வருடகாலமாகவே, விசிகவை, எந்த ரூபத்திலும் பாமக விமர்சிக்கவில்லை என்றாலும், திமுகவுடன் கூட்டணி வைக்காமல் போக நிறைய வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

டரியல் ப்ளான்
அதுமட்டுமல்ல, பாமக தேவையாக இருந்திருந்தால், கடந்த முறையே கூட்டணிக்குள் திமுக கொண்டு வந்திருப்பார்கள்.. ஆனால், பாமக இல்லாமலேயே தேர்தலில் வெற்றி பெற்று விட்டதால், இந்த முறை அக்கட்சியுடன் கூட்டணி வைப்பது சந்தேகம்தானாம்.. இன்னும் சொல்லப்போனால், பாமகவுடன் கூட்டணி வைத்தால், பட்டியலின, சிறுபான்மை ஓட்டுக்களை திமுக கூட்டணி இழக்க நேரிடும்.. பாமகவுக்கு எதிராக இருக்கும் பட்டியலின வாக்குகள்தான் திமுகவின் வெற்றிக்கு காரணமாக இருந்து வருகிறது என்பதாலேயே, பாமகவுக்கு கூட்டணி வாய்ப்பு இந்த முறை குறைவு என்கிறார்கள்.

பாயிண்ட் 1
ஒரு டிவி சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் அளித்த பேட்டியில், சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.. அதில், "ஆளும் அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுவதாகட்டும், அறிவுரைகளை கூறுவதில் ஆகட்டும், மதுக்கடை ஒழிப்பு போன்ற விவகாரங்கள் ஆகட்டும் அனைத்திலுமே மிக சரியான பாதையிலேயே செல்கிறது.. ஆனாலும் அவைகளை எல்லாம் அரசியல் ஆதாயமாக்க அக்கட்சியால் முடியவில்லை. இந்த முறை, பாமக தனித்து போட்டியிடும் வாய்ப்பும் குறைவுதான்..

பாயிண்ட் 2
ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிடும்போது, கூட்டணி கட்சிகள்தான் பாமகவால் பலனடைகிறதே தவிர, பாமக வேட்பாளர்கள் தோல்வியை தழுவ நேரிடுகிறது, இதற்கு காரணம், வன்னியர் ஓட்டுக்களை தவிர இடைநிலை சாதி மற்றும் சிறுபான்மையினர் வாக்குகள் பாமக வேட்பாளர்களுக்கு கிடைப்பதில்லை.. அதேபோல கூட்டணியில் நின்றாலும் கூட்டணிக்குதான் ஆதாயம்.. இடைநிலை சாதிகளின் ஓட்டுக்களையும் பாமக பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது..

பாயிண்ட் 3
எனினும் அதிமுக & பாஜகவுடனேயே இந்த முறை பாமக கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது.. டயர் நக்கி என்றெல்லாம் கடுமையாக பாமக விமர்சித்ததே.. அப்படி இருந்தும் கடந்த முறை அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்கவில்லையா? ஆளுநரிடம் அதிமுக மீதான ஊழல்புகார்களை பாமக தந்ததே.. அதற்கு தந்தபிறகுதானே, அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்தது? இப்போதும்கூட, மத்திய அரசை இதுவரை வெளிப்படையாக பாமக எதிர்க்கவில்லை.. விமர்சிக்கவும் இல்லை.. எனினும், தற்போது அதிமுக, பாஜக மீது வலம்வரும் விமர்சனங்கள் எல்லாம், கூட்டணி பேர அரசியலாக இருக்கலாம்..

மக்கள் நலக்கூட்டணி
எப்படி பார்த்தாலும், கொங்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் எடப்பாடி தரப்பு அதிமுக வெற்றி பெற வேண்டுமானால் வன்னியர் ஓட்டுக்கள் தேவையாக இருக்கின்றன என்பதால், அதிமுக பாஜக கூட்டணியில் பாமக இணைய நேரிடலாம்.. ஒருவேளை வன்னியர் ஓட்டுக்களை திமுக பிரிக்க நினைத்தால், பாமகவை தனித்து போட்டியிட வைத்தாலே போதும்.. அன்று திமுக கூட்டணியை உடைத்து, மக்கள் நலக்கூட்டணி உருவாக, மறைந்த ஜெயலலிதா காரணமாக இருந்ததுபோல, பாமகவை பிரித்து இந்த முறை போட்டியிட வைத்தாலே போதும்" என்றார்.

விஸ்வரூப வளர்ச்சி
அதேபோல, அரசியல் விமர்சர் ரவீந்திரன் துரைசாமி வேறு ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். "அதிமுக கூட்டணியால் தங்களுக்கு எந்த பயனும் இல்லை என்று பாமக நினைக்கிறது.. அதேபோல தற்சமயம் பிளவுபட்ட அதிமுகவால் எந்த அரசியல் லாபமும் இல்லை என்றும் நினைப்பதால்தான், தனித்து செல்லலாம் என்று அன்புமணி முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.. சிவி சண்முகம் போன்றோர் வளர்ச்சியையும் பாமக ஏற்கவில்லை.. இதெல்லாம்தான், சமீபநாட்களாக கருத்து மோதல்களாக வெடித்து கிளம்பி உள்ளது என்றார்.

சைலண்ட் மூவ்
இதனிடையே இன்னொரு செய்தி கிளம்பி உள்ளது.. பிளவுபட்ட அதிமுக என்று அன்புமணி விமர்சித்திருப்பதை அதிமுக, குறிப்பாக எடப்பாடி தரப்பு ரசிக்கவில்லை என்கிறார்கள்.. அன்புமணி இப்படி விமர்சிக்க காரணமே, அதிமுகவுடன் தங்களுக்கு கூட்டணி இல்லை என்பதை திமுகவுக்கு பகிரங்கப்படுத்தவே என்றும், அதைவைத்து மறைமுகமாக தங்கள் கூட்டணி பேச்சை திமுகவிடம் தொடங்கி உளளார்கள் என்றும் சலசலக்கப்பட்டு வருகிறது.. ஆக, அன்புமணியின் ஒரே ஒரு பேட்டியால், இப்படி ஏகப்பட்ட யூகங்கள் வட்டமடிக்கும் நிலையில், பாமக நிஜமாகவே யாருடன்தான் கூட்டணி வைக்க போகிறது? என்பது சஸ்பென்ஸ்ஸாகவே நீடிக்கிறது..!!!

டபுள் டிஜிட்
ஆனால், பாமக இப்படி திடீரென அதிமுகவை எதிர்ப்பது எல்லாம் தேர்தல் சீட் கணக்கே என்கிறார்கள்.. காரணம், இந்த முறை பாஜக அதிக இடங்களை அதிமுகவிடம் கேட்டு பெற உள்ளதாக தெரிகிறது.. எப்படியும் இரட்டை இலக்க சீட்டுகளை பெற்றுக்கொள்ளக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. ஒருவேளை பாஜகவுக்கு இரட்டைஇலக்க சீட்டுகளை தந்துவிட்டால், பாமகவுக்கு எப்படியும் குறைத்தே சீட்களை அதிமுக ஒதுக்கக்கூடும் என்றே தெரிகிறது.. அதனாலேயே இப்படியெல்லாம் அதிமுகவை எதிர்த்து அன்புமணி பேசி வருவதாக சொல்கிறார்கள்.. கடந்த தேர்தலின்போது, கூட்டணியில் இருந்தும் அதிமுக தங்களுக்காக வேலை செய்யவில்லை என்ற வருத்தம் பாமகவுக்கு ஒருபக்கம் இருந்தாலும், இந்த முறை அதே அதிமுகவுடன் கூட்டணி வைத்தாக வேண்டும் என்ற கட்டாயமும் அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்












Click it and Unblock the Notifications