"அடிமடியிலே".. ஜோதிமணியை தரதரவென இழுத்து.. அதைவிடுங்க, டெல்லி பறந்த 2 பேர்.. அதிர்ந்த கதர் சீனியர்ஸ்
தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவர் யார் என்ற சிக்கல் இன்னமும் நீடித்து வருகிறது
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியில் 2 முக்கியமான விஷயங்கள் சீக்ரெட்டாக நடந்து வருகின்றன.. இதை கேள்விப்பட்டு, சீனியர் கதர்கள் எரிச்சலடைந்து வருகிறார்களாம்.
அந்தந்த மாநில தலைவர் பதவிகளை. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவரே தேர்வு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுக் குழுவில் தீர்மானம் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது.
இப்படிப்பட்ட சூழலில்தான், தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கான மாற்றம் குறித்த பேச்சும் பரபரத்து வருகிறது.. தற்போது சமீப காலமாகவே, அழகிரிக்கு எதிராக ஓரணி திரண்டுள்ளது..

ரத்தக்களறி
அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து இவர்கள் அழகிரி மீது புகார் தந்தனர்.. சத்தியமூர்த்திபவனில் நடந்த மோதல்களுக்கு அழகிரிதான் காரணம் என்றும், கட்சி அலுவலகத்துக்துக்குள் ரவுடிகளை வரவழைத்தது அழகிரிதான் என்றும், சாதி சங்கமாக கட்சியை நடத்துகிறார் என்றும், அழகிரி பதவியேற்றது முதல், கட்சியில் என்னென்ன ஊழல்கள் நடந்துள்ளது என்பதையும் ரிப்போர்ட்டாக தந்தனர்.. மேலும், அழகிரியை மாற்றிவிட்டு, புதிய தலைவரை நியமியுங்கள். இப்போதே நியமித்தால் தான் தேர்தலுக்கு இன்னும் 1 வருடம் இருக்கும் நிலையில், கட்சியை ஆரோக்கியமாக புதிய தலைவர் கொண்டு செல்ல நேரம் சரியாக இருக்கும் என்றெல்லாம் சொன்னார்கள்.

சைலண்ட் சிதம்பரம்
அமைதியாக கேட்டுக் கொண்ட கார்கே, சில தினங்களுக்கு முன்பு, மூத்த தலைவர் ப.சிதம்பரத்திடம் கருத்து கேட்டுள்ளதாக தெரிகிறது.. அதற்கு சிதம்பரம், "துடிப்பு மிக்கவர்களாக பார்த்து நியமித்தால்தான் கட்சிக்கு நல்லது" என்றாராம்.. அநேகமாக பிப்ரவரி மாதத்துக்கு பிறகு தான் காங்கிரஸ் தலைமை மாற்றம் இருக்கும் என்று தகவல்கள் கசிந்து வருகிறது... இப்படிப்பட்ட சூழலில், தமிழக காங்கிரஸ் தலைமைக்கு 2 பேர் காய் நகர்த்தி வருகிறார்களாம்.. இருவருமே பெண்கள் ஆவர்.. அதில் ஒருவர் ஜோதிமணி, இன்னொருவர் விஜயதாரணி ஆவார்.

ஆவேச ஜோதிமணி
கரூர் எம்பி ஜோதிமணியை பொறுத்தவரை எளிமையானவர்.. சுறுசுறுப்புக்கு பெயர் போனவர்.. முக்கியமாக ராகுல்காந்தியின் நம்பிக்கைக்கு உரியவர்.. காங்கிரஸ் மேலிடத்தின் நெருக்கமானவராகவும் அறியப்படுபவர். தன்னுடைய அதிரடி செயல்பாடுகளால் மக்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர்.. அதுமட்டுமல்ல, ராகுல், சோனியா காந்தி அமலாக்கத்துறையில் ஆஜரானபோது, காங்கிரஸ் கட்சியினர் மிகப்பெரிய போராட்டம் நடத்தியபோது, முதல் ஆளாக கலந்து கொண்டவர் ஜோதிமணிதான்.. பாஜக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்தும், வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் போன்றவற்றுக்கு எதிராகவும் நாடு தழுவிய போராட்டத்தின்போதும் ஜோதிமணியின் ஆவேசம் திரும்பி பார்க்கப்பட்டது.

கையை இழுத்து
காரணம், இந்த போராட்டத்தின்போது, ஜோதிமணியின் கையை பிடித்து தரதரவென இழுத்து சென்று, போலீசார் வேனில் ஏற்றினர்.. அப்போது, ஜோதிமணி, மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்பி கொண்டேயிருந்தார்.. இந்த வீடியோ அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.. அதனால்தான், அன்று முதல் இன்றுவரை, காங்கிரஸ் கட்சியின் மேல்மட்டம் வரை அசால்ட்டாக செல்வாக்கை பெற்றுள்ளார். இதனால், எரிச்சலடைந்த உள்ளூர் காங்கிரஸ் தரப்பினர், ஜோதிமணி எம்பியை காணோம் என்றெல்லாம் போஸ்டர் அடித்து ஒட்டியதாக சலசலப்புகள் எழுந்தன.

எரிச்சல்
ஆனால், ஜோதிமணி, ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொண்டதில் இருந்தே, அந்த பயணங்களில் பங்கேற்று உறுதுணையாக இருக்கிறார்.. தென் மாநிலங்களில் ராகுலின் நடைபயணத்தில் ஜோதிமணியின் பங்கு மிக முக்கியமானது என்றே சொல்லலாம்.. ஏற்கனவே ஜோதிமணி மீது பொருமலிலும், பொறாமையிலும் இருந்த சிலருக்கு இது எரிச்சலை தந்து வருவதாக தெரிகிறது. இப்படிப்பட்ட சூழலில்தான், மாநில தலைமை பதவிக்கு ஜோதிமணி முயன்று வருகிறாராம்.. தனக்கு அந்த பதவியை தரும்படி, நேரடியாகவே ராகுலிடம் கேட்டு வருகிறாராம்.

விஜயதாரணி
அதுமட்டுமல்ல, மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக, தன்னால் மட்டுமே அரசியல் செய்ய முடியும் என்றும் ராகுலிடம் நம்பிக்கை தெரிவித்துள்ளாராம். அநேகமாக ராகுல் நடைபயணம் முடிவதற்குள் தனக்கு தலைவர் பதவி வந்துவிட்டால் நல்லா இருக்கும் என்று ஜோதிமணி யோசிக்கிறாராம். ஆனால், இந்த விஷயம் கேள்விப்பட்ட சீனியர்கள் சிலர், தங்களுக்கு பதவி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, ஜோதிமணிக்கு கிடைத்துவிடக்கூடாது என்று எதிராக காய்நகர்த்த தொடங்கி உள்ளார்களாம். இந்த லிஸ்ட்டில் எம்எல்ஏ விஜயதாரணியும் சேர்ந்துள்ளதாக தெரிகிறது..

அரசல் புரசல்
சமீபத்தில் டெல்லி சென்ற அவர், கார்கேவை சந்தித்து, தலைவர் பதவி குறித்து பேசினாராம்.. "நம் கட்சியில் இருந்து வேறு கட்சிக்கு தாவி போகாமல் இருப்பவர் யார் என்பதை பார்த்து, அப்படிப்பட்ட விசுவாசிகளுக்கு தலைவர் பதவியை தர வேண்டும், அப்போதுதான், நம் கட்சி தொண்டர்களுக்கு தலைமை மீது நம்பிக்கை வரும் என்று "சுற்றிவளைத்து" சொன்னாராம்.. அதற்கு கார்கே, எல்லா விஷயத்தையும் பரிசீலித்துதான், பதவிக்கு தலைவரை நியமிப்போம் என்றாராம்.. ஆக, இரு சீனியர் பெண்களும் டெல்லி லாபி மூலம் காய் நகர்த்தினாலும், ராகுல், சோனியா என்ன சொல்ல போகிறார்கள் என்பதில்தான் அடங்கியுள்ளது க்ளைமேக்ஸ்..!!












Click it and Unblock the Notifications