"டபுள் ஹேப்பி".. 3 புள்ளிகளும் 3 திசைகளும்.. திமுகவுக்கு "வழிவிடும்" அதிமுக?.. குழம்பும் பாஜக
அதிமுகவில் உள்ள குழப்பமும், சொதப்பல்களும் திமுகவுக்கு சாதகமாகி வருகிறது
சென்னை: புலி வருது.. புலி வருது என்ற கதைபோல் ஆகிவிட்டது சசிகலா அரசியலும் என்கிறார்கள்.. இன்றைக்குகூட, வழக்கம்போல் சொன்ன அதே பதிலைதான் திருவாரூரில் உதிர்த்துள்ளார் சசிகலா..!
ஓபிஎஸ்ஸை எந்த நிலையிலும் பாஜக கைவிடாது என்றால், சசிகலாவை எந்த நிலையிலும் ஓபிஎஸ் கைவிட மாட்டார் என்றே தெரிகிறது.
எடப்பாடியின் ஆளுமை + மெஜாரிட்டி ஆதரவு + வலுவான தலைவர் இப்படி எதையுமே பாஜக விரும்பாத நிலையில், எடப்பாடி டீமின் தலையில் கொட்டி, ஒட்டுமொத்த அதிமுகவையும் தங்கள் கன்ட்ரோலில் இழுத்து பிடித்து வைத்து கொள்வதுதான் பாஜகவின் அரசியல் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.

தலை + இலை
ஒருவேளை இதற்கு எடப்பாடி டீம் ஒத்துவராத பட்சத்தில், அவரை கழட்டிவிட்டு, புது கூட்டணியை உருவாக்கி தேர்தலை சந்திக்கவும் தயாராகும்.. அதாவது, டிடிவி தினகரன் + சசிகலா + ஓபிஎஸ் இவர்களை இணைத்துக் கொண்டு, கூட்டணி தலைமையேற்று, எம்பி தேர்தலை சந்திக்கலாம்.. அதேபோல, அதிமுக விவகாரங்களில், இரட்டை இலையை முடக்கினாலும், தங்களுக்கு ஒருவகையில் அது நல்லது என்றே பாஜக நினைக்கலாம்.. அத்துடன், தேர்தல் ஆணையம் தனித்துவமாக இயங்கக்கூடிய அமைப்பு என்றாலும்கூட, தன் அதிகாரத்தை லேசாக அங்கு பயன்படுத்தவும் மேலிடம் முயலலாம். எப்படி பார்த்தாலும் அதிமுகவை பாஜகவால் முற்றிலுமாக தவிர்த்து விட முடியாது.

சொதப்பல் - A
எனினும், இடியாப்ப சிக்கலில் அதிமுக தலைவர்கள் ஆளுக்கு ஒரு பக்கம் சிக்கி உள்ளதும், அதன்மூலம் எழும் சொதப்பல்களும், பாஜகவை விட திமுகவுக்கு வலுவாகி கொண்டிருக்கிறது.. கடந்த முறை சட்டசபை தேர்தலில் அதிமுக தோற்கும் அளவுக்கு சென்றதற்கு காரணம், வலுவில்லாத கூட்டணியும், எடப்பாடி பழனிசாமியின் கூட்டணி குறித்த அளவுக்குமீறின பிடிவாதமும்தான்.. இந்த முறை எம்பி தேர்தலிலுக்குள், அதிமுக மேலும் பலவீனமாகிவிட்டது.. மெஜாரிட்டி ஆதரவு இன்றைக்கு இருந்தாலும், பாமக எடப்பாடியுடன் கூட்டணி வைக்குமா என்பதும் சந்தேகம்தான். அந்தவகையில், இதுவும் திமுகவுக்கு பிளஸ் ஆக அமைய போகிறது.

சொதப்பல் - B
இதில் ஓபிஸ்ஸை பொறுத்தவரை, பாஜக ஆதரவு இல்லாமல் அரசியல் செய்ய முடியாது.. சசிகலா தயவு இல்லாமல் அரசியல் செய்ய முடியாது.. இரட்டை இலையும், கொடியும் இல்லாமல் அரசியல் செய்ய முடியாது.. அதிமுக என்ற பலம் பொருந்திய கட்சியை தனிநபராக கட்டிக்காக்கவும் முடியாது.. திமுகவை எதிர்த்தும் அரசியல் செய்ய முடியாது.. திமுகவில் இணைந்தும் அரசியல் செய்ய முடியாது.. அதிமுகவில் மெஜாரிட்டி ஆதரவு இல்லாமலும் அரசியல் செய்ய முடியாது.. அப்படியானால் என்ன செய்ய போகிறார் என்ற கேள்வி எழுகிறது.

சொதப்பல் - C
எடப்பாடியை பொறுத்தவரை, பாஜகவை முற்றிலும் பகைத்து கொள்ள முடியாது.. வழக்கு, விசாரணைகள் என ஏகப்பட்ட நெருக்கடிகள் தலைக்குமேல் கத்திகளாக தொங்கி கொண்டிருக்கும் நிலையில், இன்றைக்கு இருக்கும் இதே ஆதரவாளர்களை எல்லா நாட்களிலும் தக்க வைத்துக் கொள்ள முடியாது.. ஒருவேளை ஓபிஎஸ் தேர்தல் ஆணையம் சென்று இரட்டை இலையை முடக்கினால், எடப்பாடியால் இலை இல்லாமல் தனி அமைப்பாக செயல்படவும் முடியாது.. அல்லது திமுக தரப்பில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு அல்லது ஆறுமுகசாமி ஆணையம் இரு விவகாரங்கள் குறித்து தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை அரசியலாக்கினால், அப்போதும் அதிமுகவின் அதிகார பொறுப்பில் நீடிக்க முடியாது.. அப்படியானால் எடப்பாடி என்ன செய்ய போகிறார் என்ற அடுத்த கேள்வி எழுகிறது.

சொதப்பல் - D
சசிகலாவை பொறுத்தவரை, டிடிவி தினகரனுடன் செல்ல முடியாது.. பாஜகவை மீறியும் அரசியல் செய்ய முடியாது.. இன்றுவரை ஓபிஎஸ்ஸுடன் தனக்கான ஆதரவு இருக்கிறதா? இல்லையா என்பதைகூட வெளிப்படையாக சொல்ல முடியாமல் இருக்கிறார்.. சசிகலாவின் வழக்கமான அரசியல் அதிரடிகள் இல்லாமல், தற்போது அவரது மென்மையான அரசியல் வியூகங்கள் எதுவுமே எடுபடவில்லை.. அவர் வெளியிட்ட ஆடியோ அரசியலும் எடுபடவில்லை.. அவரது ஆன்மீக சுற்றுப்பயண அரசியலும் எடுபடவில்லை.. அப்படியானால் சசிகலா என்ன செய்ய போகிறார் என்ற இன்னொரு கேள்வி எழுகிறது.

மீட் செய்வீர்களா?
இன்றைக்குகூட திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பாமணியில் கட்டபட்டுள்ள ஷீரடி சாய்பாபா ஆலய கும்பாபிஷேக நிகழ்ச்சியில் சசிகலா கலந்துகொண்டார். குடமுழுக்கு நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது, ஓபிஎஸ் உங்களை சந்திக்க வந்தால் அவரை சந்திப்பீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.. இதற்கு சசிகலா, "அதிமுகவில் இருந்து எல்லாரும் சந்திக்க வந்தாலும் சந்திப்பேன்" என்றார்..

பாருங்க நீங்களே
அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், இப்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் உங்களுடன் பேசினார்களா என்ற கேள்விக்கு, "பொறுத்திருந்து பாருங்கள்" என்றார்.. எடப்பாடி பழனிசாமி உங்களை சேர்க்கமாட்டேன் என்று சொல்கிறாரே என்ற கேள்விக்கு, "நீங்கள் பார்க்கத்தானே போகிறீர்கள்" என்று பதிலளித்துள்ளார். சசிகலா சொன்ன இந்த பதில்கள் எல்லாமே கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக, இந்த தமிழகம் பலமுறை கேட்ட பதில்கள்தான்..

வெயிட் & சீ
எடப்பாடி & அவரது டீமை தவிர்த்துவிட்டு, மற்றவர்களை இணைத்து கொண்டு அதிரடியை சசிகலா என்றைக்கோ மேற்கொண்டிருக்கலாம்.. அல்லது டிடிவி தினகரன் கேட்டுக் கொண்டதுபோல, அமமுகவையாவது வழிநடத்தி கொண்டு போயிருக்கலாம்.. அல்லது, சின்னம்மா என்று சொல்லி ஓபிஎஸ் அழைப்பு விடுத்ததையடுத்து, அவருக்கு ஆதரவை நேரடியாக தெரிவித்து, கட்சியையும், தொண்டர்களின் நலனையும் பார்த்திருக்கலாம்..

"பொறுத்திருந்து பாருங்கள்"
இப்படி எதுவுமே இல்லாமல், எல்லாரையும் ஒன்றிணைப்பேன் என்று வழக்கமாக சொல்லுவதையே சொல்லி கொண்டிருப்பது, தென்மண்டல தொண்டர்களிடம் சலிப்பை ஏற்படுத்த துவங்கி விட்டதாம்.. சில சமயங்களில் அதிரடிகளும் அரசியலில் தேவைப்படும் நிலையில், சசிகலா பழைய பாணிக்கு வர வேண்டும் என்கிறார்கள்.. அல்லது அவரது அரசியல் வியூகங்கள் முன்புபோல இப்போது எடுபடாமல் போய்விட்டதா? என்றும் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.. "பொறுத்திருந்து பாருங்கள்" என்று வழக்கமாக சொல்வதை விட்டுவிட்டு, சசிகலா அதிரடியை இனியாவது மேற்கொள்வாரா? தெரியவில்லை.. "பொறுத்திருந்தே பார்ப்போம்.."












Click it and Unblock the Notifications