பொங்கலுக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? எங்கே பேருந்து ஏறுவது? இதை படிங்க? மொத்த ரூட் மேப்!
சென்னை: பொங்கலுக்கு களமிறக்கப்படும் சிறப்பு பேருந்துகள் மற்றும் மற்ற பேருந்துகள் எந்த பேருந்து நிலையத்தில் இருந்து இயங்கும், எங்கிருந்து பேருந்து பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்று இங்கே விளக்கமாக அளிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளதால், வரும் ஜனவரி 9-ஆம் தேதி முதல் தமிழகத்தில் அரசுப் பேருந்து சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. பொங்கலை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

பொங்கலுக்கு முன் 12-01-24 முதல் 14-01-24 (சிறப்பு பேருந்துகள் இயக்கம்) செய்யப்படும். பொங்கல் பண்டிக்கைக்காக தமிழ்நாடு முழுவதும் 19,484 பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் இருந்து 11,006 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பொங்கல் பண்டிகைக்கு பிறகு 17,589 பேருந்துகள் இயக்கப்படும். கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு 24 மணி நேரமும் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்ட பேருந்துகள் பொங்கலுக்காக கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும். பொங்கலுக்கு பின் 16-01-24 முதல் 18-01-24 வரை (சிறப்பு பேருந்துகள் இயக்கம்) இயக்கப்படும். ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து 94450 14450, 94450 14436 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம்.
பொங்கலுக்கு பிறகு வெளியூரில் இருந்து வரும் பேருந்துகள் கிளாம்பாக்கம் வரைதான் இயக்கப்படும். கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் 5 முன்பதிவு மையங்கள் செயல்படும். மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் பொங்கலுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.
சிக்கல் வருமா?: தமிழ்நாட்டில் போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளதால், இன்று ஜனவரி 9-ஆம் தேதி முதல் தமிழகத்தில் அரசுப் பேருந்து சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. பொங்கலை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இன்று பேருந்துகள் வழக்கம் போல இயங்கினாலும் பொங்கல் நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்குவதில் சிக்கல் ஏற்படலாம்.
போராட்டம் ஏன்: சிறந்த ஊதியம் (15வது ஊதிய திருத்த ஒப்பந்தம்), காலியாக உள்ள பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்புதல், அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கும் மாநில அரசின் நிதியுதவி, ஓய்வூதியர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்குதல் உள்ளிட்ட 6 முக்கிய கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ளன. இதை முன் வைத்து தொடர் போராட்டங்களை அவர்கள் அறிவித்துள்ளனர்.
தொழிற்சங்கங்கள் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளுக்கு இடையே சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதில் அதிகாரிகள்) மீண்டும் ஒருமுறை அவகாசம் கோரினர். அவர்களின் பதிலில் நாங்கள் திருப்தி அடையவில்லை, என்று சிஐடியு தலைவர் ஏ சௌந்தரராஜன் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
பொங்கல் பாதிப்பு: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு பஸ்களில் ஏற்கனவே முன்பதிவு துவங்கி உள்ளது. பேருந்து முன் பதிவு இணையதளம் வழியாகவும், முகாம் மூலமாகவும் துவங்கி உள்ளது. பொதுவாக நீண்ட விடுமுறை வரும் போதெல்லாம் தமிழ்நாட்டில் சிறப்பு பேருந்துகள் விடப்படுவது வழக்கம். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மக்கள் அதிக அளவில் பயணம் மேற்கொள்வார்கள். சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் வேலை பார்க்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.
இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, பேருந்துகளின் தேவை அதிகரிக்கும். அதிக நெரிசலில் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். சமயங்களில் போதிய பேருந்துகள் இல்லாத காரணத்தால் மக்கள் கஷ்டப்படும் அவலமும் ஏற்படும். இந்த நிலையில்தான் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் தமிழ்நாட்டில் பண்டிகை நாட்களில் இயக்கப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications