"இனி நல்ல நாட்கள்தான்.." மாண்டஸ் கரையை கடந்தாலும் மழை தொடரும்.. எங்கு தெரியுமா? வெதர்மேன் விளக்கம்
சென்னை: மாண்டஸ் புயல் இன்று அதிகாலையில் சென்னை அடுத்த மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. இதற்கிடையே வரும் நாட்களில் எங்கெல்லாம் மழை இருக்கும் என்பது குறித்த தகவல்களைத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை ஆரம்பித்து ஒரு மாதத்திற்கு மேலான பிறகு, முதல் புயலாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாண்டஸ் புயல் உருவானது. இதுவரை போதிய வடகிழக்கு பருவமழை இல்லாத சூழலில், இந்தப் புயல் நல்ல மழையைத் தரும் என எதிர்பார்க்கப்பட்டது.
சில நாட்களுக்கு முன்பு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு மாண்டஸ் என்று பெயரிடப்பட்டது.

மாண்டஸ்
இந்தப் புயல் நேற்று முன்தினம் தீவிர புயலாக வலுப்பெற்றது. ஆனாலும், சில மணி நேரத்திலேயே இது மீண்டும் சாதாரண புயலாக வலுவிழந்தது. இந்தப் புயல் இன்று அதிகாலை மாமல்லபுரத்திற்கு அருகில் புயல் கரையைக் கடைந்தது. நேற்றிரவு புயல் கரையைக் கடக்கத் தொடங்கிய நிலையில், புயல் முழுவதுமாக கரையைக் கடக்க அதிகாலை வரை ஆனதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் புயல் இப்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

கரையைக் கடந்தது
இது வரும் காலத்தில் மேலும் வலுவிழக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் கரையைக் கடக்கும் போது கனமழை கொட்டித் தீர்த்து. புயல் கரையைக் கடக்கும் போது சென்னை உட்பட பல பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து. பலத்த சூறாவளியுடன் கனமழை பல்வேறு பகுதிகளில் பெய்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் ஈசிஆர் சாலையில் போக்குவரத்து முடக்கப்பட்டது. மேலும், அப்பகுதிகளில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது.

தமிழ்நாடு வெதர்மேன்
இப்போது புயல் முழுவதுமாக கரையைக் கடந்துள்ள நிலையில், புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் சரி செய்யப்பட்டு வருகிறது. எதிர்பார்த்தபடியே இந்தப் புயலால் பலத்த சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. மின்சார பாதிப்புகள் ஏற்பட்ட இடங்களில் விரைந்து மின்சாரத்தை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே வரும் நாட்களில் தமிழ்நாட்டில் மழை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களைத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

பெரிய சேதம் இல்லை
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "மாண்டஸ் புயல்- நல்ல மழையும் பலத்த காற்றும் வீசியுள்ளது. இது சேதத்தை ஏற்படுத்தவில்லை என்பதால் இதை நாம் மகிழ்ச்சியாக ரசிக்கலாம். நாளை முதல் மழை இருக்கும். மாணட்ஸ் புயல் பெரிய பாதிப்புகள் ஏதுமின்றி கரையைக் கடந்துள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது, நகரத்தில் காற்றின் வேகம் மணிக்கு 70-75 கிமீ வேகத்தில் பதிவாகியுள்ளது.. புயல் கரையைக் கடந்த மகாபலிபுரம், கேளம்பாக்கம் பகுதிகளில் காற்றின் வேகம் மிக அதிகமாக அதாவது மணிக்கு 90 கிமீ வேகத்துக்கும் அதிகமாகவும் இருந்துள்ளது.

நல்ல நாட்கள் வெயிட்டிங்
காஞ்சிபுரம்-பனப்பாக்கம்-வெம்பாக்கம் இடையே மேகக் கூட்டங்கள் இருக்கலாம். வெம்பாக்கத்தில் 250 மிமீ., பணப்பாக்கத்தில் 198 மிமீ., காஞ்சிபுரத்தில் 185 மிமீ. திருவள்ளூர் ஆவடியில் 170 மிமீ, சென்னை அய்னாவரத்தில் 150 மிமீ மழைப் பதிவாகியுள்ளது. இன்றைய தினம் பெங்களூரு, திருப்பத்தூர் கிருஷகிரியில் மாண்டு மழை பெய்யும். புல் எபக்ட் காரணமாகக் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை பெல்டில் நாளை முதல் 2 நாட்கள் இருக்கும். தமிழகத்தின் பல பகுதிகளிலும் மழை தொடரும். அரபிக் கடலுக்குச் சென்ற பிறகும் கூட மாண்டஸ் ஈஸ்லயர்ஸை தூண்டும். வரும் நாட்களில் நல்ல நாட்கள் நமக்குக் காத்திருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

வானிலை மையம்
முன்னதாக வரும் நாட்களில் தமிழ்நாட்டில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களைச் சென்னை வானிலை ஆய்வு மையம் பகிர்ந்து இருந்தது. அதில் இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தினம் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

தலைநகர் சென்னை
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மேலும், அடுத்த இரு நாட்கள் லட்ச தீவு பகுதிகள், கேரள - கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications