“விசில் ஊதினால் போதும்.. குழந்தைகளுக்கு சளி நின்றுவிடும்”.. தவெக செங்கோட்டையன் விநோத பிரச்சாரம்!
சென்னை: "விசில் சின்னம் தான் இந்தியாவை நாளை ஆளப் போகிறது. குழந்தைக்கு சளி பிடித்திருந்தால், விசில் ஊதினால் போதும். சளி நின்றுவிடும். முதியவர்கள் விசில் அடித்தால் இதயம் நன்றாக வேலை செய்ய ஆரம்பித்து விடும்" என தவெக வேட்பாளர் செங்கோட்டையன் பேசியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், சில மாதங்களுக்கு முன்பு விஜய் தலைமையிலான தவெகவில் இணைந்த நிலையில், அக்கட்சி சார்பில் கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில், தேர்தலில் வாக்கு சேகரிக்கச் சென்ற செங்கோட்டையன், "பேப்பர் ரோஸ்ட் சாப்பிட்டா லிவருக்கு நல்லது" என்கிற ரீதியில் விசில் சின்னத்துக்கு வாக்கு சேகரித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றன. பிரச்சாரம் முடிய இன்னும் முழுமையாக 2 வாரங்களே உள்ள நிலையில், பிரதான கட்சிகள் தீவிர களப்பணியாற்றி வருகின்றன. ஆனால், போதிய ஒருங்கிணைப்பு இல்லாததால் தவெக வேட்பாளர்கள் தன்னந்தனியாக பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.
தேர்தல் அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், இந்த முறை தவெக சார்பில் கோபி தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் கொங்கு மண்டலத்தின் பல்வேறு தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அந்தவகையில் நாமக்கல் மாவட்டத்தில் தவெக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார் செங்கோட்டையன். செங்கோட்டையன் பேசும்போது, "நம்முடைய விசில் சின்னத்திற்கு ஒரு பெருமை இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, விசில் சின்னம் தான் இந்தியாவை நாளை ஆளப் போகிறது.
சின்னக் குழந்தைகளுக்கு சளி பிடித்திருந்தால் விசில் ஊதினால் போதும். சளி நின்று போய்விடும். மூச்சுப் பயிற்சி வேண்டும் என்பார்கள். முதியவர்கள் விசில் அடித்தால் இதயம் நன்றாக வேலை செய்ய ஆரம்பித்து விடும். இயற்கையோடு நாம் வாழ்கிறோம். அதனால் தான் நமக்கு விசில் சின்னம் கிடைத்திருக்கிறது" எனப் பேசியுள்ளார் செங்கோட்டையன்.












Click it and Unblock the Notifications