அமலாக்கத்துறை என்றால் யார்? கையில் என்னென்ன அதிகாரங்கள்? அரசியல்வாதிகள் மிரள்வது ஏன்?
சென்னை: அமலாக்கத்துறை என்ற வார்த்தையை கேட்டாலே எப்பேர்பட்ட அரசியல்வாதிகளும் மிரள்வது ஏன், அப்படியென்ன அந்த அமைப்புக்கு அதிகாரம் உள்ளது என்பது பற்றியெல்லாம் விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் பொருளாதார குற்றங்களையும், அந்நியச் செலவாணி மோசடிகளையும் தடுக்கும் நோக்கில் கடந்த 1956 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது தான் அமலாக்கத்துறை. அதாவது ஆங்கிலத்தில் Enforcement Directorate என்பார்கள். இந்த அமைப்பானது மத்திய நிதி அமைச்சகத்தின் வருவாய் பிரிவின் கீழ் இயங்கக்கூடிய ஒன்றாகும்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள பொருளாதார சட்டங்களை அமல்படுத்துவதால் இந்த அமைப்பானது அமலாக்கத்துறை என அழைக்கப்படுகிறது.
அமலாக்கத்துறையின் தலைமை அலுவலகம் டெல்லியில் உள்ள நிலையில், நாடு முழுவதும் 5 இடங்களில் கிளை அலுவலகங்களை கொண்டுள்ளது.
அந்த வகையில் சென்னை, மும்பை, சண்டிகர், கொல்கத்தா மற்றும் டெல்லி என 5 இடங்களில் அமலாக்கத்துறை இயக்குநரகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் சொத்து முடக்கம் போன்ற முக்கிய முடிவுகள், உத்தரவுகள், அனைத்தும் டெல்லியிலேயே எடுக்கப்படும்.
அமலாக்கத்துறை அமல்படுத்தும் 5 பொருளாதார குற்றத் தடுப்பு சட்டங்கள் என்பது, சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டம் 2002 (Prevention of Money Laundering Act), அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டம் 1999 (Foreign Exchange Management Act), தலைமறைவு பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டம் 2018 (Fugitive Economic Offenders Act), அந்நியச் செலாவணி ஒழுங்குமுறை சட்டம் 1973 (Foreign Exchange Regulation Act) காபிபோசா சட்டம் (COFEPOSA) 1974 என்பவைகளாகும்.
பொருளாதார குற்றங்களில் தொடர்புடைய நபர்களுக்கு சம்மன் அனுப்புதல், சொத்துக்களை பறிமுதல் செய்தல் உள்ளிட்ட சட்ட விரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறைக்கு பல்வேறு அதிகாரங்கள் உள்ளன. அதேபோல் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கில் தொடர்புடையவர்களை விசாரணைக்காக கைது செய்யும் அதிகாரமும் இந்த அமைப்புக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் தான் அமைச்சர் செந்தில்பாலாஜியையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதில் குறிப்பிட வேண்டிய முக்கியத் தகவல் என்னவென்றால், இதுவரை அமலாக்கத்துறையினரால் கடந்த 67 ஆண்டுகளில் 5,906 வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன என்பது தான். இதில் எத்தனை வழக்குகளில் தீர்ப்பு வந்தது, எத்தனை வழக்குகள் விசாரணையில் இருக்கிறது, எத்தனை வழக்குகள் மூடப்பட்டது என்ற தகவல் முக்கியமானதாகும்.












Click it and Unblock the Notifications