ஆரம்பமே அசத்தல்.. முதல் டிரெண்ட்டில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.. விறுவிறு முடிவுகள்
இன்று காலை 8 மணிக்கு தமிழகம் முழுவதும் வாக்குகள் எண்ணப்பட உள்ளன
சென்னை: நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள், தமிழ்நாடு முழுவதும் 268 மையங்களில், தொடங்கி நடந்து வருகிறது. இதில் பெரும்பான்மையான இடங்களில் திமுகவே முன்னிலை வகித்து வருகின்றது. நகராட்சிகளில் 3,842 வார்டுகளில் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி 15 இடங்களிலும் மற்ற கட்சிகள் 3 இடங்களிலும் தேர்வாகி உள்ளது.
தமிழகத்தில் கடந்த 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது... சுமார் 57 ஆயிரம் வேட்பாளர்கள் போட்டியிட்ட இந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. அதாவது 60.7 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின.
இதில், மாநகராட்சி பகுதிகளில் வாக்கு சதவீதம் மிகக்குறைவாகப் பதிவானது.. பேரூராட்சிகள், நகராட்சிகளில் வாக்குப்பதிவு சற்று அதிகமாக இருந்தாலும், மாநகரப் பகுதிகளில் மந்தமாகவே காணப்பட்டது. குறிப்பாக சென்னையில் 50 சதவிகிதத்துக்கும் குறைவாகவே பதிவானது.

இன்று வாக்கு எண்ணிக்கை
மேலும் சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானது, சில இடங்களில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரை அடுத்து 5 வார்டுகளுக்குட்பட்ட 7 வாக்குப்பதிவு மையங்களில் மறுவாக்குப்பதிவுக்குத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படியே நேற்றைய தினம் மறுவாக்குப்பதிவும் நடந்து முடிந்தது. இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தற்போது தொடங்கி நடந்து வருகிறது. இதையடுத்து 268 வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மூன்றடுக்கு பாதுகாப்பு
வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்போடு வாக்குப்பதிவு மையத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில், 268 மையங்களிலும் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.. வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு உள்ளேயும், வெளியேயும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

குடிநீர் வசதி
வாக்கு எண்ணும் மையங்களில் தடையில்லா மின்சார வசதி ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.. காவல்துறை உள்ளிட்ட தேர்தல் பணியாளர்களுக்குஉணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.. அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றவும் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்கவும் தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்கு சாவடி முகவர்கள் 7 மணிக்கு வர வேண்டும் என்றும், வேட்பாளர்கள், முகவர்கள் செல்போன்களுடன் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது..

முதலில் தபால் ஓட்டுக்கள்
தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. காலை சரியாக 8 மணிக்கு பதிவான வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பித்துவிட்டன... தமிழகம் முழுவதும் 268 மையங்களில் எண்ணப்படுகிறது. சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை 200 வார்டுகள் மண்டல வாரியாக பிரிக்கப்பட்டு 15 மையங்களில் இன்று வாக்குகள் எண்ணப்பட உள்ளது.

தபால் ஓட்டுக்கள்
முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டு வருகின்றன.. அதற்கு பிறகு மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.. அதிகபட்சமாக 3 சுற்றுகள் வரை வாக்குகள் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய 2 மணி நேரத்தில், அதாவது 10 மணியளவில் முடிவு நிலவரம் தெரியவரும். பிற்பகல் 12 மணிக்கு பிறகு வெற்றி பெற்ற வேட்பாளர்களின் முழு விவரம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
Recommended Video

போட்டியின்றி தேர்வு
மாநகராட்சிகளில் 4 பேர், நகராட்சிகளில் 18 பேர், பேரூராட்சிகளில் 196 பேர் என 218 பேர் ஏற்கனவே போட்டியின்றி தேர்வாகி உள்ளனர்.. மாநகராட்சிகளில் 1,373 வார்டுகளில் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி 4 இடங்களில் தேர்வாகி உள்ளது. நகராட்சிகளில் 3,842 வார்டுகளில் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி 15 இடங்களிலும் மற்ற கட்சிகள் 3 இடங்களிலும் தேர்வாகி உள்ளது. பேரூராட்சிகளில் 7,605 வார்டுகளில் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி 107 இடங்களிலும் அதிமுக கூட்டணி 12 இடங்களிலும் மற்ற கட்சிகள் 75 இடங்களிலும் தேர்வாகி உள்ளது.












Click it and Unblock the Notifications