தீவிரவாதிகளை வீழ்த்திய மாவீரன்.. ‘அமரன்’ படத்தின் நிஜ ஹீரோ.. மேஜர் முகுந்த் வரதராஜன் வரலாறு
சென்னை: சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியான 'அமரன்' திரைப்படம் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் நிஜ வாழ்க்கையைப் பறைசாற்றும் படம் தான் 'அமரன்'. யார் இந்த மேஜர் முகுந்த்? இவரது சாதனைகள் என்ன? அவரது மறைவுக்கு இந்தியாவே கலங்கியது ஏன்? மேஜர் முகுந்த் வரதராஜன் மரணம் ஏற்பட காரணம் என்ன? பார்ப்போமா?
சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான திரைப்படம், 'அமரன்'. இந்தப் படம் தீபாவளியன்று வெளியாகி, ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருக்கிறார். 2014 ஆம் ஆண்டு நடந்த புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த படம், உண்மைச் சம்பவங்களை பறைசாற்றும் வகையில் எடுக்கப்பட்டிருக்கிறது. மேஜர் முகுந்த் மற்றும் அவரது காதல் மனைவி இந்து இருவருக்குமிடையேயான காதல் வாழ்க்கையும் உணர்வுப் பூர்வமாக விவரிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த மேஜர் முகுந்த் வரதராஜன்?: 1983 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி சென்னையில் வரதராஜன் - கீதா ஆகிய தம்பதிக்கு மகனாக பிறந்தவர் முகுந்த். தமிழர். பள்ளிப்படிப்பு மற்றும் கல்லூரி படிப்பை முடித்ததெல்லாம் சென்னையில் தான். சிறு வயதிலிருந்தே தலைமைப் பண்புகளையும், தேசப்பற்றையும் கொண்டவராகத் திகழ்ந்தார் முகுந்த். முகுந்த்தின் தாத்தாவும், 2 மாமாக்களும் ராணுவத்தில் பணியாற்றியவர்கள். அதன் காரணமாகவோ என்னவோ ராணுவத்தில் சேர்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.
கல்லூரிப் படிப்பை முடித்ததும், சென்னையில் உள்ள ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகாடமியில் சேர்ந்து, தனது ராணுவப் பயிற்சியை முடித்தார். 2006 ஆம் ஆண்டு ராணுவத்தில் ராஜ்புத் ரெஜிமெண்ட்டில் லெப்டினண்ட் ஆக நியமிக்கப்பட்ட முகுந்த், 2008 ஆம் ஆண்டு அவர் கேப்டனாக பதவி உயர்வு பெற்றார். இதையடுத்து 2009 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலியான இந்து ரெபேக்கா வர்கீஸை திருமணம் செய்துகொண்டார் முகுந்த். 2011-ம் ஆண்டு இந்த ஜோடிக்கு அர்ஷியா என்கிற பெண் குழந்தையும் பிறந்தது.
குறுகிய காலகட்டத்தில் தனித்துவமான ராணுவ வீரராக உருவெடுத்த முகுந்த்: தனது பணியிலும் சொந்த வாழ்க்கையிலும் அடுத்தடுத்த கட்டத்திற்கு சென்றுகொண்டிருந்தார் மேஜர் முகுந்த். ஜம்மு காஷ்மீரின் பதற்றமான பகுதியாக கருதப்படும் சோபியான் மாவட்டத்தில் 2012 ஆம் ஆண்டு மேஜராக நியமிக்கப்பட்டார் முகுந்த் வரதராஜன். இந்த காலகட்டத்தில் தான் ஒரு முக்கியமான ஆபரேஷனை வெற்றிகரமாக முடித்தார் மேஜர் முகுந்த்.

2013 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி காஷ்மீரின் யாஞ்ச் புகர் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை மேஜர் முகுந்த் தலைமையிலான 44 பேர் கொண்ட ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் படை சுற்றிவளைத்தது. தாக்குதலை எதிரிகள் தொடங்கினாலும் அவர்களின் துப்பாக்கியில் உள்ள குண்டுகள் முடியும் வரை புத்திசாலித் தனமாக காத்திருந்த முகுந்த், பின்னர் தன் படையுடன் சென்று அவர்களை வேட்டையாடினார்.
2014 ஏப்ரல் 25: 2014-ம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதி காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கும் தகவல் ராணுவத்தினருக்கு கிடைத்தது. பொதுமக்கள் வாழும் பகுதி என்பதால் மிகுந்த கவனத்துடன் ஆபரேஷனை நடத்தி முடிக்க அங்கு முகுந்த் வரதராஜனின் தலைமையில் 44 வீரர்களை கொண்ட ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் படை வேலையில் இறங்கியது.
இந்திய ராணுவம் தங்களை நெருங்குவதை அறிந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். அவசரப்படாமல் ஆபரேஷனை முடிக்க வேண்டும் என தீர்மானமாக இருந்த ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் படையின் மேஜர் முகுந்த் வரதராஜன், , தவழ்ந்து தவழ்ந்து எதிரிகள் பதுங்கியிருந்த குடியிருப்பை அடைந்தார். மேஜர் முகுந்த் உத்தரவு பிறப்பித்ததும் தீவிரவாதிகள் முகாம் மீது குண்டு மழை பொழியத் தொடங்கியது ஆர்.ஆர் படை.

தீவிரவாதிகளை வீழ்த்திய முகுந்த்: அப்போது கையெறி குண்டை வீசி முதல் எதிரியை வீழ்த்தினார் மேஜர். எஞ்சியுள்ள இரண்டு பேரை நோக்கி செல்லும்போது, தாடையில் குண்டு பாய்ந்து மண்ணில் சாய்ந்தார் மேஜர் முகுந்த்தின் நண்பரும், சக ராணுவ வீரருமான விக்ரம் சிங். நண்பன் தன் கண்முன் உயிரிழந்ததைக் கண்டாலும் முகுந்துக்கு அழுவதற்கு அங்கு நேரமில்லை. இதனால் கடும் கோபத்தோடு, எதிரிகளை நோக்கி முன்னேறிய முகுந்த் இரண்டாவது எதிரியையும் வீழ்த்தினார்.
ஒரே ஒரு தீவிரவாதி அங்கு மீதம் இருந்த நிலையில், அவனது துப்பாக்கி சத்தம் வரும் திசையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த மேஜர் முகுந்த், அடுத்த நொடியே அவனை நேருக்கு நேர் சென்று தலையில் குறிவைத்து சுட்டு வீழ்த்தினார். கடைசி தீவிரவாதியும் காலி. ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகளை ஒழிக்கும் ஆபரேஷனை வெற்றிகரமாக முடித்த மேஜர் முகுந்தை, வரவேற்க சக வீரர்கள் காத்திருக்க, அங்கு அவர்கள் முன்பு வந்து நின்றதும் சரிந்து விழுந்தார் மேஜர் முகுந்த்.
மேஜர் முகுந்த்தின் இறுதி நிமிடங்கள்: 'அமரன்' படத்தில் வருவது போலவேதான், முகுந்த் வரதராஜனின் இறுதி நிமிடங்கள் நிகழ்ந்திருக்கின்றன. எதிரிகள் உடனான தாக்குதலின் போதே முகுந்த்தின் உடலில் மூன்று இடங்களில் குண்டுகள் பாய்ந்துள்ளன. அவற்றைத் தாங்கிக் கொண்டு தான் எதிரிகளுடன் சண்டையிட்டு வெற்றி கண்டார் மேஜர் முகுந்த். எதிரிகளை வேட்டையாடிய முகுந்த் வெற்றிக் குறியோடு மண்ணில் விழுந்ததும் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் சக வீரர்கள். ஆனால் வழியிலேயே மேஜரின் உயிர் பிரிந்தது.

மேஜர் முகுந்த் வரதராஜனின் வீரமரணச் செய்தி கேடு ஒட்டுமொத்த இந்தியாவே கலங்கியது. முகுந்த்தின் உடல் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு, 42 குண்டுகள் முழங்க, முழு ராணுவ மரியாதையுடன் சென்னை பெசண்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
ஜெயலலிதா எழுதிய கடிதம்: அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்துவுக்கு எழுதிய கடிதத்தில், "உங்கள் வாழ்க்கையில் இது மிகவும் அதிர்ச்சிகரமான மற்றும் சோகமான காலம் என்பதை நான் அறிவேன். நீங்கள் அன்பான மற்றும் அர்ப்பணிப்புள்ள கணவரை இழந்துவிட்டீர்கள்; உங்கள் இளம் மகள், அவளுடைய அன்பான தந்தையை இழந்துவிட்டாள். அவரது பெற்றோர், அவர்களின் அன்புக்குரிய மகனை இழந்துவிட்டனர்.
மேஜர் முகுந்த் வரதராஜன் தனது தாய்நாட்டைப் பாதுகாக்கும் போது, இந்திய ராணுவத்தின் சிறந்த தியாகங்களில் மிக உயர்ந்த தியாகத்தைச் செய்தார் என்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம். மேஜர் முகுந்த் வரதராஜனின் மரணத்தால் தமிழக மக்கள் ஒரு துணிச்சலான தமிழ்நாட்டின் மகனை இழந்துள்ளனர்; இந்தியா ஒரு துணிச்சலான ராணுவ வீரரை இழந்துவிட்டது." என உருக்கமாகத் தெரிவித்திருந்தார்.
காதல் மனைவி இந்து: மேஜர் முகுந்த் வரதராஜனின் வீர மரணத்தை போற்றும் வகையில் நாட்டின் மிக உயரிய விருதான அசோக் சக்ரா விருது அவருக்கு அறிவிக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் அப்போதைய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் இருந்து அசோக் சக்ரா விருதை பெற்றுக் கொண்டார் மேஜர் முகுந்த் வரதராஜனின் காதல் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ். இந்தக் காட்சியும் அமரன் படத்தில் இடம்பெற்றுள்ளது. மேஜர் முகுந்த்தின் ராணுவ பராக்கிரம காட்சிகளோடு, இந்து ரெபேக்கா வர்கீஸ் உடனான அவரது காதல் வாழ்க்கையும், 'அமரன்' படத்தில் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications