"அம்மா"வுக்கு அடுத்த ஆன்மீக குரு யார்? பங்காரு அடிகளார் முன்கூட்டியே ஏதேனும் சொல்லியிருக்கிறாரா?
செங்கல்பட்டு: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் காலமானதை அடுத்து அடுத்த தலைவர் , ஆன்மீக குரு யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் சக்தி பீடத்தின் தலைவரான பங்காரு அடிகளார் மாரடைப்பால் காலமாகியுள்ளார். அவருக்கு லட்சுமி அம்மாள் என்ற மனைவியும் ஜிபி செந்தில் , ஜிபி அன்பழகன் என்ற மகன்களும் உள்ளனர்.

மேல்மருவத்தூரில் உள்ள கோயில் கருவறைகளில் பெண்களும் வழிபாடு நடத்தலாம் என்ற நடைமுறையை கொண்டு வந்து செயல்படுத்தியவர் பங்காரு அடிகளார். சபரிமலை கோயிலை போல் ஆதிபராசக்தி கோயிலுக்கும் பெண்கள் மாலை அணிந்து செல்லலாம்.
ஆண்டுதோறும் தைப்பூச நாட்களில் பெண்கள் செவ்வாடை அணிந்துக் கொண்டு மருவத்தூர் செல்கிறார்கள். அவர்கள் கோயில் கருவறைக்குள் சென்று சுயம்பு அம்மனுக்கு அபிஷேகம் செய்கிறார்கள். அங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு சுடச்சுட அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
மாதவிடாய் காலத்தில் கூட பெண்கள் தெய்வத்திற்கு சேவைகளை செய்யலாம். அதனால் சக்தி ஒன்றும் போய்விடாது என்ற தத்துவத்தை உலகிற்கு சொன்னவர் பங்காரு அடிகளார். ஆன்மீக புரட்சியுடன் கல்வி புரட்சியையும் செய்துள்ளார். கடந்த ஒரு ஆண்டாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். சில நாட்களாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார் பங்காரு அடிகளார்.
இந்த நிலையில் இன்று மாலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. இந்தத் தகவலால் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். பக்தர்களால் அம்மா என அழைக்கப்பட்டவர். இவர் வடதமிழகத்தில் முக்கிய ஆன்மீக குருவாக விளங்குகிறார் பங்காரு அடிகளார்.
இந்த நிலையில் இவர் ஆதிபராசக்தி தொண்டு மருத்துவ கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளையின் தலைவராக இருந்தார். தற்போது இவர் காலமான நிலையில் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது இந்த கோயிலை பங்காரு அடிகளாரை போல் அவருடைய மனைவி லட்சுமி அம்மாளும் கவனித்து வருகிறார்.
அது போல் அவருடைய மகன்கள் கல்வி பணிகளை கவனிப்பதுடன் அவ்வபோது ஆன்மீக பயணங்களிலும் இருந்து வருகிறார்கள். 1980 ஆம் ஆண்டு மேல்மருவத்தூரில் வருமான வரித் துறை ரெய்டு வந்தது. இதைத் தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு 30 ஆண்டுகளுக்கு பிறகு வந்தது. இது தொடர்பாக பங்காரு அடிகளாரின் மகன்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் மேல்மருவத்தூர், கீழ் மருவத்தூர், சோத்துப்பாக்கம் பகுதிகளில் பெரும்பாலான நீர் நிலைகளை ஆதிபராசக்தி அறக்கட்டளை நிர்வாகிகள் ஆக்கிரமித்ததாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் பங்காரு அடிகளாரை அம்மா என அழைக்கும் பக்தர்கள், அவருடைய மூத்த மகன் செந்திலை சின்னம்மா என அழைக்கிறார்கள்.
அது போல் அவருடைய இளைய மகன் அன்பழகனை மருவூர் முருகன் என அழைக்கிறார்கள். அம்மாவுக்கு அடுத்து சின்னம்மா என அழைக்கப்படும் செந்தில் குமார் அடுத்த ஆன்மீக குருவாகவும் கல்வி மற்றும் பண்பாட்டு மைய தலைவராகவும் தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆனால் இவர்களை விட லட்சுமி அம்மாளே பக்தர்களுடன் எப்போதும் தனது குடும்பத்தாரை போல் நெருங்கி பழகி வருகிறார். ஆதிபராசக்தி கோயிலில் நடக்கும் பூஜைகள், விசேஷங்கள் அவரை முன்னிறுத்தியே நடக்கின்றன. எனவே பங்காரு அடிகளாரின் இடத்திற்கு லட்சுமி அம்மாளே வருவாரா? பக்தர்களுக்கு அருளாசி தருவாரா ? பெண்களுக்கு சாதகமான நிறைய புரட்சிகளை செய்த ஆதிபராசக்தி கோயிலில் அடுத்த ஆன்மீக குருவாக பெண் நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவே சொல்லப்படுகிறது. மேலும் தனக்குதானே 2 ஆண்டுகளுக்கு முன்பே சமாதியை கட்டிக் கொண்ட பங்காரு அடிகளார், அடுத்த தலைவர் யார் என்பதையும் சொல்லியிருப்பாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications