டெல்லியின் "டேஷர்".. யார் இந்த ஸ்வேதா செராவத்? இந்திய மகளிர் கிரிக்கெட்டின் எதிர்காலம்!
யு19 டி20 உலகக்கோப்பை இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
சென்னை: மகளிருக்கான யு19 டி20 உலகக்கோப்பைட் தொடரில் இந்திய வீராங்கனை ஸ்வேதா செராவத் அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தி வருவது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. இவரது அபார ஆட்டத்தால் இந்திய அணி டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில் நியூசிலாந்து அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதுவே இந்திய ஆடவர் அணி உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தால் சமூக வலைதளங்களில் கொண்டாட்டங்கள் களைகட்டி இருக்கும்.
இருப்பினும் பிசிசிஐ நிர்வாகிகள் முதல் சீனியர் கிரிக்கெட் வீரர்கள் வரை இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர். அந்த வாழ்த்து செய்தியில் தவறாமல் ஒரு பெயர் மட்டுமே தொடர்ந்து இடம்பிடித்துள்ளது.

டெல்லி
அந்தப் பெயர் தான் ஸ்வேதா செராவத். டெல்லி கிரிக்கெட் வட்டாரத்தில் ஸ்வேதா செராவத்தின் பெயர் டெல்லி டேஷர். இதற்கு முன்பாக இளம் ஆடவர் கிரிக்கெட் வீரர்களுக்கு தான் இப்படியான பட்டப்பெயர்கள் உள்ளூர் வட்டாரத்தில் வைக்கப்பட்டிருக்கும். ஆனால் ஸ்வெதா செராவத் சிறுவயதிலேயே இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால முகமாக பார்க்கப்பட்டுள்ளார்.

யார் ஸ்வேதா செராவத்?
சிறு வயதிலேயே டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் விளையாட தொடங்க, பழைய மனிதர்களை போல் அல்லாமல் பெற்றோர் ஸ்வேதாவின் கனவுகளுக்கு உதவியாக இருந்துள்ளனர். டென்னிஸ் பந்தில் தொடங்கிய பயணம், மிக வேகமாக கிரிக்கெட் பந்துக்கு மாறியுள்ளது. எந்த அளவிற்கு வேகமென்றால், 12 வயதில் இந்திய மகளிர் அணி வீராங்களுக்கான சோதனையில் பங்குகொள்ளும் அளவிற்கு முன்னேறியுள்ளார்.

12 வயது அசாத்தியம்
அந்த தேர்வில் தலைசிறந்த 30 வீராங்கனைகளில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டவர் தான் ஸ்வேதா செராவத். அதன் பின்னர் இந்திய யு-16 மகளிர் அணிக்காக விளையாட தொடங்க, ஸ்வேதாவின் ஆட்டம் வேகமாக முன்னேற்றமடைந்துள்ளது. அதன்பின்னர் டெல்லியின் யு-19 அணிக்காக ஸ்வேதா தேர்வு செய்யப்பட்டு, 7 அல்லது 8 வரிசைகளில் பேட்டிங் செய்து வந்திருக்கிறார்.

அரைசதங்கள்
இவரது திறமையை அறிந்து பயிற்சியாளர்கள் தொடக்க வீராங்கனையாக களமிறக்க, அங்கிருந்து புதிய வரலாறு உருவானது. ஒருவேளை ஷஃபாலி வர்மாவுக்கு ஒரு வயது அதிகமாக இருந்திருந்தால், இந்திய யு-19 அணிக்கு ஸ்வேதா செராவத் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருப்பார். இந்த உலகக்கோப்பைத் தொடரில் ஸ்வேதா களமிறங்கி விளையாடிய 5 போட்டிகளில் 92*, 74*,31*, 21, 13,61* என்று 250 ரன்களுக்கும் மேல் விளாசிய வீராங்கனையாக என்ற சாதனையை படைத்திருக்கிறார்.

மகளிர் அணி
கனவுகளை விதைப்பது சாதாரணமானது.. அந்த கனவை எட்டிபிடிக்கும் பயணம் சாதாரணமானதாக இருக்காது என்று கூறுவார்கள். அப்படியான பயணத்தை தான் ஸ்வேதா செராவத் மேற்கொண்டுள்ளார். இந்திய மகளின் அணியின் பயணமே சாதாரணமாக இருந்தில்லை. ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டு 15 ஆண்டுகளுக்கு பின் மகளிர் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ முன் வந்திருக்கிறது. ஒவ்வொரு விஷயத்திற்கும் போராடி வரும் இந்திய மகளிர் அணிக்கு, யு-19 உலகக்கோப்பை மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்க சிறந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

கனவுகள்
அந்த வாய்ப்பை இந்திய மகளிர் அணி இம்முறை தவறவிடாது என்று நம்பலாம். ஏனென்றால் யு19 உலகக்கோப்பைத் தொடரில் இந்திய மகளிர் அணியின் செயல்பாடுகள் அபரிதமான வளர்ச்சியை எட்டியிருக்கிறது. இறுதிப்போட்டியில் வெற்றிபெற்றால், இந்திய மகளிர் அணியின் கனவுகள் அடுத்தடுத்து மெய்ப்படும்.












Click it and Unblock the Notifications