யார் மீது குற்றம்? எல்லை மீறியது இந்தியாவா, கனடாவா? உறவில் விரிசல் ஏன்? புட்டு புட்டு வைத்த கஸ்பர்
சென்னை: இந்தியாவுக்கும் கனடாவுக்குமான உறவில் ஏற்பட்டுள்ள விரிசலுக்கு யார் காரணம்? எங்கே பிரச்சினை இருக்கிறது என்பது தொடர்பாக சர்வதேச அரசியல் பற்றிய அதிக அனுபவம் கொண்ட ஜெகத்கஸ்பர் சில விளக்கங்களை முன்வைத்துள்ளார்.
சீக்கிய மதத்தைச் சேர்ந்த மக்களை ஒன்று திரட்டி அதன்மூலம் காலிஸ்தான் என்ற தனிநாட்டை உருவாக்கவேண்டும் என்பதற்கான ஜர்னையில் சிங் பிந்தரன்வாலாவால் அமைக்கப்பட்டது அமைப்புதான் காலிஸ்தான் இயக்கம். இது இந்தியாவில் சீக்கியர்கள் வாழும் பஞ்சாப் பகுதியையும் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தையும் இணைத்து ஒரு தனி நாடு உருவாக்க வேண்டும் எனக் கூறி போராடிவருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், காலிஸ்தான் பயங்கரவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலை செய்யப்பட்டார். அதில் இந்தியவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒரு பரபரப்பான குற்றச்சாட்டைக் கிளப்பி இருந்தார். அதனால் இந்தியா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளுக்கான உறவில் விரிசல் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து பல மாதங்களுக்குப் பின்னர், இந்தியா மீதான குற்றச்சாட்டுக்கு தங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை என்று கனடா கூறியது. கனடா நாட்டில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுக்குத் தனது அரசு வெறும் தகவலை மட்டுமே பகிர்ந்து கொண்டதாகவும் ஆதாரம் எதுவும் இல்லை என்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒப்புக்கொண்டிருந்தார். இதனால் இருநாடுகளின் சுமுகமான உறவில் ஒரு பதற்றம் ஏற்பட்டுள்ளது. சோவியத் யூனியனுக்குப் பிறகு மேற்கு உலக நாடுகளிடம் இந்தியா இந்தளவுக்கு ஒரு விரிசலை எதிர்கொண்டதில்லை என்று பலரும் கூறிவருகின்றனர்.
இதைப்போன்ற சர்வதேச அரசியல் விவகாரங்களில் அனுபவம் கொண்டவர் ஃபார்தர் ஜெகத் கஸ்பர். அவர் இதற்கு முன்பாக தனி நாடு கேட்டு இலங்கையில் செயல்பட்ட பிரபாகரன் அமைப்பின் அரசியலை மிக அருகிலிருந்து பார்த்தவர். பல நாடுகளுக்குப் பயணம் செய்து சர்வதேச அரசியல் விவகாரங்களில் ஈடுபட்டவர். ஆகவே இந்தியா மற்றும் கனடா உறவில் ஏற்பட்டுள்ள விரிசல் பற்றி அவர் சில விளக்கங்களை அளித்துள்ளார். இது தொடர்பாக ஜெகத் கஸ்பர் பேசுகையில், "இந்தியா சந்தை அளவில் மிகப்பெரிய பொருளாதார நாடு. பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நாடு.
ஆனால், முதல் உலக நாடுகளுடன் நேரடியாக மோதும் அளவுக்கு வளர்ந்துவிட்டோமா என்றால், இல்லை. இந்தியாவும் அமெரிக்காவும் நட்புறவு நாடுகள். புவிசார் தேவைக்காகவும் வர்த்தக சந்தை தேவைக்காகவும் நட்பு நாடுகளாக உள்ளன. 'ஐந்து கண் நாடுகள்' என்று சொல்வார்கள். அதில் அமெரிக்கா, கனடா, பிரிட்டன், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அடங்கும். தேசியப் பாதுகாப்பு என வரும்போது இந்த 5 நாடுகளும் ஒரே பார்வையில்தான் செயல்படும். மாற்றுக் கருத்தே இருக்காது.
இந்தியாவுடனான முறிவை பற்றி இந்தப் பட்டியலில் உள்ள 4 நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. அதை ஆதரிக்கின்றன. இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்றே கோரிக்கை விடுத்துள்ளன. கனடா மிது இந்தியா வைக்கக்கூடிய குற்றச்சாட்டு என்ன? இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய பிரிவினைவாத குழுக்கள் மிகச் சுதந்திரமாகச் செயல்படுவதற்குக் கனடா அனுமதிக்கிறது என்பதுதான். குறிப்பாகச் சொன்னால், காலிஸ்தான் அமைப்பு மீது இந்தியா குற்றஞ்சாட்டுகிறது.
தனி காலிஸ்தானை கனடா ஆதரிக்கிறதா என்றால் இல்லை. இந்தியாவின் நிலைப்பாட்டைத்தான் கனடா ஆதரிக்கிறது. அப்படி என்றால் எங்கே பிரச்சினை? கனடாவின் சட்டம் என்பது அரசியல் உரிமையை, குடியுரிமையைப் பற்றிய கருத்துச் சுதந்திரத்தை ஆதரிக்கிறது. அங்கே விடுதலை உணர்வுகள் சார்ந்த கருத்துகளைச் சுதந்தரமாகப் பேசலாம். தெரிவிக்கலாம். அதில் எந்தவித தடையும் கிடையாது. அதுதான் கனடா அரசியல் சட்டம் தரும் உரிமை.
தங்களுக்கு தனிநாடு வேண்டும் என்று கனடாவில் பேசலாம். அது கருத்துரிமை. ஆனால், தனி நாடு கேட்டு ஆயுதம் ஏந்தி போராட முற்பட்டால் சட்டப்படி அங்கே தேச குற்றம். கலிஃபோர்னியா தனியாக இருக்க வேண்டும் என்ற கருத்தைச் சொல்பவர்கள் கனடாவில் இருக்கிறார்கள். அயர்லாந்து தனிநாடாகச் செயல்பட வேண்டும் எனப் பேசுகிறவர்கள் அங்கே உள்ளார்கள்.
ஆனால், இதை எல்லாம் ஜனநாயக ரீதியாகப் பேசும்வரை ஆதரிப்பார்கள். சுதந்திரமாக நடமாட விடுவார்கள். ஒருபோதும் ஆயுதம் எடுக்கவோ, போராடவோ கனடா அனுமதிக்காது. அப்படி இருக்கும்போது இந்தியா, அந்த நாட்டின் சட்ட உரிமையை எப்படி மறுக்க முடியும்? அது அந்த நாட்டின் சுதந்தரம். குடியுரிமை சார்ந்த சுதந்தரம். அதை இந்தியா எப்படிப் பறிக்க முடியும்? இந்தியாவுக்கு எதிராகக் கனடா உளவு அமைப்புகள் இங்கே புகுந்து ஏதேனும் வன்முறை செய்துள்ளார்களா? இல்லையே?
அமெரிக்கா வர்த்தக வாயிலைத் திறந்துவிடவில்லை என்றால் இந்தியாவில் பில்லியனியர்கள் உருவாகி இருக்கவே முடியாது. கனடா மூலம் நமக்கு நிறைய வருமானம் கிடைக்கிறது. பல இந்தியர்கள் சம்பாதித்து இங்கே பணம் அனுப்புகிறார்கள். அதனால் நம் நாடு முன்னேறி இருக்கிறது. காலிஸ்தான் பற்றி இந்தியாவுக்கு வேறு நிலைப்பாடு இருக்கிறது. அதை அந்த மக்களிடம் சொல்லி வென்று எடுக்க வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு இருக்கிறது. அதைக் கனடா தடுக்கப் போவதில்லை.

அதை மீறி ஒரு அரசியல் படுகொலை கனடாவிற்குள் நடந்துள்ளது. அதற்கான ஆதாரங்களைத் திரட்டிக் கொடுத்தது அமெரிக்கா. ஆக, இந்தியாவுடனான உறவு என்பது வேறு. உலக ஒழுங்கு என்பது வேறு. இந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலையாக இருந்தாலும் சீக்கிய பிரிவினைவாத தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னூன் விவகாரமாக இருந்தாலும் அதில் இந்தியா நேரடியாக ஈடுபட்டுள்ளது என்றே கருதுகிறது கனடா.
உலக நாடுகளை தாண்டி Deep State என்று கண்ணுக்குத் தெரியாத ஒரு கூட்டமைப்பு இருக்கிறது. அதில் பல நாடுகள் இருக்கின்றன. அந்த அமைப்பு ஒரு ஜனநாயகமாகச் செயல்படுகிறதா? மதவெறி அரசியல் தலைதூக்கி இருக்கிறதா? தறிகெட்ட முதலாளித்துவம் தலைவிரித்து ஆடுகிறதா? என பல விசயங்களை இந்த டீப் ஸ்டேட் கண்காணிக்கும்.
அப்படிக் கண்காணிக்கப்பட்டு கனடாவுக்கு விடப்பட்ட எச்சரிகையைக் கொண்டுதான் கனடா வாதங்களை முன்வைக்கிறது. ஆகவே, இந்தியா தன் எல்லையை உணர்ந்து செயல்படவேண்டும். அது நம் பொருளாதார வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். மாற்றுக் கருத்துள்ள ஒரு அமைப்பை இந்தியாவில் செயல்படாமல் தடுக்கலாம். எல்லை தாண்டி சென்று தண்டிக்கும் அதிகாரம் எந்த நாட்டுக்கும் கிடையாது" என்கிறார்.












Click it and Unblock the Notifications