அவர்கிட்ட செல்லாது! அடுத்த தலைமை செயலாளர் யார்? இறையன்பு இடத்தை பிடிக்க போகும் நபர்! ஸ்டாலின் கணக்கு
சீனியாரிட்டிப்படி 12-வது இடத்தில் இருக்கும் சிவ்தாஸ்மீனாவை கொண்டுவர துடிக்கிறார்கள்.
சென்னை: தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளராக இருக்கும் இறையன்பு ஐஏஎஸ்ஸின் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில் அடுத்த தலைமை செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்காக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு கணக்குகளை போட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு தலைமை செயலாளராக இருக்கும் இறையன்பு ஜூன் மாதம் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து தமிழ்நாட்டிற்கு புதிதாக தலைமைச் செயலாளர் பதவியில் ஒருவரை நியமிக்க வேண்டுமானால், கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிலிருந்து ஒருவரைத்தான் முதல்வர் ஸ்டாலின் தேர்வு செய்ய வேண்டும்.
அந்த வகையில் கூடுதல் தலைமைச் செயலாளர் பதவியில் 1986 ஆம் வருட பேஜ் அதிகாரியாக ஹன்ஸ்ராஜ் வர்மாவும், 1987 ஆம் வருட பேஜ் அதிகாரியாக டி.வி.சோமநாதனும் இருக்கிறார்கள்.

ஹன்ஸ்ராஜ்வர்மா
இதில் ஹன்ஸ்ராஜ்வர்மா தற்போது டிக் நிறுவனத்தின் சேர்மனாகவும் நிர்வாக இயக்குநராகவும் இருக்கிறார். சோமநாதன், மத்திய அரசின் நிதித்துறையில் செலவினங்கள் பிரிவின் செயலாளராக இருக்கிறார். அதேபோல், 1988 ஆம் வருட பேஜ் அதிகாரிகளில் இறையன்புவை தவிர்த்து விட்டால், விக்ரம்கபூர், அதுல்யமிஸ்ரா, ஜித்தேந்திரநாத் ஸ்வைன் ஆகிய மூன்று அதிகாரிகள் கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் இருக்கிறார்கள். இவர்களில் ஸ்வைன் மத்திய அரசு பணியிலும், மற்ற இருவரும் மாநில அரசு பணியிலும் இருக்கின்றனர்.

கிருஷ்ணன்
அதேபோல, 1989 ஆம் வருட பேஜ்ஜில் கிருஷ்ணன், ராஜாராமன், எஸ்.கே.பிரபாகர், சந்தீப் சக்சேனா, நசிமுதின், சிவ்தாஸ் மீனா, அனிதாபிரவீன், ஆகிய 7 பேர் கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் இருக்கிறார்கள். இவர்களில் ராஜாராமன், அனிதா ப்ரவீன் ஆகிய இரு அதிகாரிகளும் மத்திய அரசு பணியில் இருக்கிறார்கள். மற்ற 5 பேரும் மாநில அரசு பணியில் இருக்கிறார்கள். அதேபோல, 1990 ஆம் வருட பேஜ்ஜில் விபுநாயர், பனீந்திர ரெட்டி, சாய்க்குமார், ஜவஹர் என 4 பேர் கூடுதல் தலைமைச் செயலாளராக இருக்கின்றனர்.

லிஸ்டில் இருப்பது யார்?
இதில் விபுநாயம் மட்டும் மத்திய அரசு பணியில் இருக்கிறார். அதேபோல 1991 ஆம் வருட பேஜ்ஜில் கோபாலகிருஷ்ணன், முருகானந்தம், ரமேஷ்சந்த்மீனா, சந்திரஹாந்த் பி காம்ளே, சுப்ரியாசாகு, ஆகிய 5 பேர் கூடுதல் தலைமைச் செயலாளர்களாக இருக்கிறார்கள். இவர்களில் கோபாலகிருஷ்ணன் மத்திய அரசு பணியில் இருக்கிறார். அதேபோல, 1992 ஆம் வருட பேஜ்ஜில் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், டாக்டர் ராஜேந்திர குமார், நீரஜ்மிட்டல், ராஜேஷ்லக்கானி, மங்கத்ராம் சர்மா, பிரதீப் யாதவ், குமார்ஜெயந்த், கோபால் ஆகிய 8 பேர் கூடுதல் தலைமைச் செயலாளர்களாக இருக்கிறார்கள். இவர்களில் டாக்டர் ராஜேந்திரகுமார் மட்டும் மத்திய அரசு பணியில் பணிபுரிகிறார்.

கூடுதல் தலைமை செயலாளர்கள்
ஆக 1986 முதல் 1992 ஆம் வருட பேஜ் வரையில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 32 பேர் கூடுதல் தலைமைச் செயலாளர்கள் அந்தஸ்தில் இருக்கிறார்கள். இவர்களில் ஒருவரை தலைமைச் செயலாளராக தேர்வு செய்யும் அதிகாரம் முதலமைச்சருக்கு இருக்கிறது. ஆனால், பொதுவாக சீனியாரிட்டி அடிப்படையில் முதல் பேஜ்ஜில் எத்தனை எத்தனை அதிகாரிகள் இருக்கிறார்களோ அவர்களில் முதல்வரின் நம்பிக்கைக்கும் ஆட்சியை திறம்பட நடத்திச் செல்லும் ஆற்றலும் மிக்க ஒருவரைத்தான் தேர்வு செய்யபடுவர். ஆனால், முதல் பேஜ்ஜில் 5 நபர்களுக்கு குறைவாக இருந்தால் அடுத்த வருட பேஜ்ஜில் முதலிடத்தில் இருக்கும் அதிகாரிகளையும் இணைத்து மொத்தமுள்ள 6 அதிகாரிகள் கொண்ட பட்டியலை தயாரித்து அதில் ஒருவரை முதல்வர் தேர்வு செய்வார்.

நடைமுறை
இதுதான் பொதுவான நடைமுறையாக இருந்து வருகிறது. ( ஆனால், 2016-ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா, முதல் 3 வருடபேஜ்ஜில் இருந்த அதிகாரிகளை தவிர்த்துவிட்டு அதற்கு அடுத்த பேஜ்ஜில் இருந்த ராமமோகனராவை தேர்வு செய்தார். இது அப்போதே பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ஜெயலலிதாதான் எதற்கும் கட்டுப்பட்டவர் இல்லையே ! அதனால், சில நாட்களுக்கு பிறகு அந்த சர்ச்சை ஓய்ந்தது ) அந்த வகையில், சீனியாரிட்டியும் தனக்கு பக்கபலமாக இருந்து திறம்பட ஆட்சி நிர்வாகத்தை நடத்துபவருமான ஒருவரை தேர்வு செய்யவே முதல்வர் ஸ்டாலின் விரும்புகிறார். அதனடிப்படையில், 1986, 1987, 1988, 1989 -களில் உள்ள கூடுதல் தலைமைச் செயலாளர்களில் மத்திய அரசு பணியில் உள்ளவர்களை கழித்து விட்டால் ( மத்திய அரசு அவர்களை மாநில பணிக்கு அனுப்ப விரும்பவில்லை ) சீனியாரிட்டி படி ஹன்ஸ்ராஜ்வர்மா, விக்ரம்கபூர், அதுல்யமிஸ்ரா, கிருஷ்ணன், பிரபாகர், சந்தீப் சக்சேனா ஆகிய 6 பேர்களிலிருந்து ஒருவரை முதல்வர் தேர்வு செய்ய வேண்டும்.

குட் புக்கில் இருக்கிறார்
அந்த வகையில், முதல்வரின் குட் புக்கில் இருப்பவரும், டெல்லியில் லாபி செய்து தமிழகத்திற்கு தேவையான நிதியை வாங்கித்தரும் ஆற்றலும் உள்ள ஹன்ஸ்ராஜ் வர்மா தான் புதிய தலைமைச் செயலாளராக தேர்வு செய்யப்படுவார் என ஐ.ஏ.எஸ். , ஐபிஎஸ் அதிகாரிகள் தரப்பில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால், அமைச்சர் உதயநிதியின் துறையான இளைஞர் நலம் விளையாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக உள்ள அதுல்யமிஸ்ரா, உதயநிதி மூலமாக காய்களை நகர்த்தி வருகிறார். அதுல்யமிஸ்ராவை டிஸ்டர்ப் செய்ய முதல்வர் ஸ்டாலின் விரும்பவில்லையாம். அதனால் சீனியாரிட்டிப்படி ஹன்ஸ்ராஜ் வர்மாவையே தேர்வு செய்யலாம் என்கிற யோசனை முதல்வருக்கு இருக்கிறது. இதனைத் தெரிந்து கொண்ட முதல்வரை சுற்றியிருக்கும் அதிகாரிகளில் சிலர், சீனியாரிட்டிப்படி 12-வது இடத்தில் இருக்கும் சிவ்தாஸ்மீனாவை கொண்டுவர துடிக்கிறார்கள்.

ஹன்ஸ்ராஜ் வர்மா
ஏனெனில், ஹன்ஸ்ராஜ் வர்மா நியமிக்கப்பட்டால், முதல்வரிடம் தாங்கள் நினைக்கும் திட்டங்களை செயல்படுத்த முடியாது என்பதாலும், தங்களின் யோசனைகள் எல்லாவற்றிற்கும் ஹன்ஸ்ராஜ் தலையாட்டமாட்டார் என்பதாலும், சிவ்தாஸ்மீனாவை கொண்டுவர துடிக்கிறார்கள். அதாவது, சிவ்தாஸ் மீனாவை ஒரு பொம்மை தலைமைச் செயலாளராக வைத்துக் கொண்டு தாங்கள் ஆட்சி பண்ணலாம் என அந்த அதிகாரிகள் துடிக்கிறார்கள். இதற்கிடையே, சிவ்தாஸ் மீனா மீது சில புகார்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. சீனியாரிட்டிப்படி மத்திய அரசு பணிகளில் உள்ளவர்களை தவிர்த்து முதல் 6 இடங்களில் தகுதியான ஒருவரை தேர்வு செய்தால் மட்டுமே சர்ச்சைகள் உருவாகாமல் இருக்கும். தலைமைச் செயலாளர் என்கிற முக்கிய பதவியில் நியமிக்கப்படுபவருக்கு எதிராக எந்த சர்ச்சைகளும் வராதபடிக்கு முதல்வரின் தேர்வு இருக்க வேண்டும் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தரப்பில் பேசப்பட்டு வருகிறது. புதிய தலைமைச் செயலாளர் நியமிப்பது தொடர்பாக எந்த ஆலோசனையையும் முதலமைச்சர் இதுவரை செய்யாததால், யார் புதிய தலைமைச் செயலாளர் என்பது முடிவாகவில்லை என்றும் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications