உடனே வந்துட்டாரே.. சல்லி சல்லியா போச்சு.. பாரிவேந்தர் இங்கிட்டு + கமல் அங்கிட்டு? பெரம்பலூரே மிரளுதே
சென்னை: வருகிற பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் வேட்பாளராக பாரிவேந்தர் எம்.பி. களமிறங்கவேண்டும் என்று ஐஜேகே பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்திய ஜனநாயக கட்சியின் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது... இந்த கூட்டத்துக்கு கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் எம்பி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில், தற்போதைய அரசியல் சூழ்நிலைகள், தேர்தல் கூட்டணி நிலைப்பாடு போன்றவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

தீர்மானங்கள்: பின்னர், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பொதுக்குழுவில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.. இந்த கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..
குறிப்பாக, "மிச்சாங் புயல் ஏற்படுத்திய வரலாறு காணாத மழை வெள்ளத்தால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பொருள்சேதமும், உயிர்சேதமும் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் நீண்டகால தேவையை உணர்ந்து உடனடியாக மத்திய, மாநில அரசுகள் அவர்களுக்கு உதவிட வேண்டும்.
பாரிவேந்தர்: வடகிழக்கு பருவமழையின் மிக அதிதீவிர மழை பொழிவினால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு, பாரிவேந்தரும், ரவி பச்சமுத்துவும், தங்கள் சொந்த செலவில் பெருமளவு நிவாரண உதவிகள் வழங்கிய தற்காக பொதுக்குழு நன்றி தெரிவிக்கிறது.
பாரிவேந்தர் எம்.பி. வருகிற பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் வேட்பாளராக களமிறங்கவேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வேட்பாளர்: கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஐஜேகே குறித்து சில தகவல்கள் வெளியாகியிருந்தது.. அதாவது, இந்த முறை பாஜகவுடன் இணைந்து, எம்பி தேர்தலில் சந்திக்க போவதாகவும், இந்த முறையும் பெரம்பலூர் தொகுதியையே ஒதுக்க பாஜக முன்வந்திருப்பதாகவும் சொல்லப்பட்டது.. அதுமட்டுமல்ல, வரும் தேர்தலில் பாரிவேந்தர் போட்டியிடாமால், தனக்கு பதிலாக, ரவி பச்சமுத்துவை களமிறக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
ஆனால், பாரிவேந்தர் இந்த முறை மீண்டும் வேட்பாளராக களமிறங்க தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது மிகுந்த கவனத்தை பெற்று வருகிறது.
ஐஜேகே: கடந்த முறை பெரம்பலூர் தொகுதியில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு எம்பியான நிலையில், இந்த முறையும் பெரம்பலூர் தொகுதியிலேயே ஐஜேகே போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகி வருகிறது. அப்படியானால், திமுக சார்பில் போட்டியிட போவது யார் ? என்று தெரியவில்லை.
மநீம தலைவர் கமலுக்கு, பெரம்பலூரை ஒதுக்க திமுக திட்டமிட்டு வருகிறதாம். காரணம், பெரம்பலூர் தொகுதியில் அமைச்சர் சிவசங்கருக்கும், ஆ.ராசாவுக்கும், பூசல்கள் வெடித்து வருவதால், இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காகவே, பெரம்பலூரை கமலுக்கு ஒதுக்கிவிடலாம் என்று திமுக மேலிடம் நினைக்கிறதாம்.
கமல்ஹாசன்: ஆனால், திமுகவின் இந்த திட்டத்தை கமல் ஏற்க மறுத்து வருகிறாராம்.. மாறாக, மய்யத்துக்கு கோவையை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறாராம்... ஆனால், கோவை தொகுதியானது, இடதுசாரிகள் வசம் இருக்கிறது. கமல், கோவையை கேட்கிறார் என்றதுமே, சிபிஎம் தலைமை திமுக மேலிடத்திடம் பேசியிருக்கிறது..!!
"சிட்டிங் தொகுதியை நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம்.. தொகுதியில் நிறைய வளர்ச்சி பணிகளை செய்து வந்துள்ளோம்.. அதனால் தொகுதியை எங்களிடமிருந்து பறித்து விடாதீர்கள்" என்று ஸ்டாலினிடம் கேட்டுக் கொண்டார்களாம். அதனால்தான், கோவை தொகுதி வேண்டும் என்று கமல் கேட்டதற்கு, திமுக மேலிடம் எந்த பதிலையும் சொல்லவில்லையாம்.
ஆக, பெரம்பலூர் யாருக்கு என்பதில் திமுகவில் சஸ்பென்ஸ் நீடித்தபடியே உள்ள நிலையில், ஐஜேகே களப்பணியில் மும்முரமாகியிருக்கிறதாம்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications