சிசிடிவியை ஆராய 10 நாள் ஆனதா? ஆயுள் தண்டனை கைதிக்கு ஜாமீன் எப்படி? விளாத்திகுளம் வழக்கில் அண்னாமலை கேள்வி
தூத்துக்குடி: தூத்துக்குடி விளாத்திகுளம் 12 ஆம் வகுப்பு மாணவி கொலை வழக்கில் ராமநாதபுரத்தை சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அங்குள்ள காற்றாலையில் உள்ள சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து அவரை கைது செய்தனர். இந்த நிலையில் சிசிடிவியை ஆராய 10 நாள் ஆனதா? என்றும், ஆயுள் தண்டனை கைதிக்கு ஜாமீன் வழங்கியது எப்படி? என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடி விளாத்திக்குளம் அருகே வேடநத்தம் பகுதியில் 12 ஆம் வகுப்பு மாணவி இயற்கை உபாதை கழிக்க அங்குள்ள காட்டுப் பகுதிக்கு சென்றார். அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது தந்தை விளாத்திகுளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வேடநத்தம் காட்டுப்பகுதியில் தேடினர். அப்போது ஒரு முட்புதரில் மாணவியின் சடலம் கிடைத்தது.

ராமநாதபுரத்தை சேர்ந்தவர் கைது
அவரது ஆடைகள் களையப்பட்டிருந்ததால் அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் 9 நாட்களாகியும் இதுவரை கொலையாளியை கண்டுபிடிக்காததால் மாணவியின் உடலை வாங்க மாட்டோம் என அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதனிடையே கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய போலீஸார் 10 தனிப்படைகளை அமைத்து தேடி வந்தனர்.
அது போல் 5 பேரின் டிஎன்ஏக்களை சோதனை செய்தனர். இந்த நிலையில் அந்த காட்டு பகுதியில் உள்ள காற்றாலையில் இருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்ததில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பவர் சந்தேகம் படும் படி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அண்ணாமலை கேள்வி
அப்போது அவர் மாணவியை கொன்றதை ஒப்புக் கொண்டார். அவரை கைது செய்த போலீஸார் அவரை தனி இடத்தில் வைத்து நடத்திய விசாரணையில் 2019ஆம் ஆண்டு அவர் மீது 3 திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. அது போல் 2020ஆம் ஆண்டு எட்டயபுரம் பகுதியில் 60 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைதான இவர் தற்போது ஜாமீனில் வெளியே வந்தது தெரியவந்தது. காவல் நிலையத்தில் கையெழுத்திடுவதற்காக வந்த போது வேடநத்தத்தில் மாணவியை கொலை செய்தது தெரியவந்தது.
இந்த நிலையில் சிசிடிவியை ஆராய 10 நாள் ஆனதா? ஆயுள் தண்டனை கைதிக்கு ஜாமீன் வழங்கியது எப்படி? என்று கேள்வி எழுப்பியுள்ளார் அண்ணாமலை. அண்ணாமலை இதுகுறித்து கூறியிருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேடநத்தம் கிராமத்தில், பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவியை பாலியல் தாக்குதல் நடத்தி, கொடூரமாகக் கொலை செய்து, பத்து நாட்கள் கடந்தும், காவல்துறை குற்றவாளியைக் கைது செய்யவில்லை.
பல கேள்விகள் எழுகின்றன
குற்றவாளியைக் கைது செய்ய வலியுறுத்தி, பொதுமக்களின் கடுமையான போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில், சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபரைக் கைது செய்திருப்பதாக, திமுக அரசின் காவல்துறை அறிவித்திருக்கிறது. ஆனால், இதில் பல கேள்விகள் எழுகின்றன.
கடந்த 2020 ஆம் ஆண்டு, தூத்துக்குடி எட்டயபுரம் அருகே, 65 வயது முதிர்ந்த பெண்மணியை, பாலியல் தாக்குதலுக்குள்ளாக்கி கொலை செய்த வழக்கில், கடந்த 2022 ஆம் ஆண்டு, சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபர் கைது செய்யப்பட்டார். வழக்கு முடிவில், கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த நிலையில், மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில், அந்த வழக்கு நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாகவும், தற்போது செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
சிசிடிவியை ஆராய பத்து நாட்களா?
ஒரு வயதான பெண்மணியை, பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கிக் கொலை செய்து ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிக்கு, உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்கும் அளவுக்கு, திமுக அரசு அந்த வழக்கை மெத்தனமாகக் கையாண்டிருக்கிறது. மறுபக்கம், பல வழக்குகள் கொண்ட ஒரு சரித்திரப் பதிவேடு குற்றவாளி, ஜாமீனில் வெளிவரும்போது, அவனைத் தொடர்ந்து கண்காணிக்காமல் தமிழகக் காவல்துறை இருந்திருக்கிறது.
மேலும், சிசிடிவி காட்சிகள் மூலம் இந்தக் குற்றவாளியைப் பிடித்ததாகக் கூறும் காவல்துறை, சிசிடிவியை ஆராய பத்து நாட்கள் எடுத்துக் கொண்டது என்பதும் கேள்விக்குரியதே. பொதுமக்களுக்கு உண்மை தெரிய வேண்டும். காவல்துறைக்குப் பொறுப்பான முதல்வர் ஸ்டாலின், இதற்கு பொதுமக்களிடம் விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். என்று கூறினார்.












Click it and Unblock the Notifications