தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு தரமான லாபம்.. வரலாற்றில் இல்லாத நிகழ்வுக்கு காரணமான ஒற்றை விஷயம்
சென்னை: இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு காரணமாக தங்கம் விலை வரலாற்றில் இல்லாத உச்சத்தை நோக்கி போய்கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் வரி விதிப்பு அமலுக்கு வந்த நாள் முதல் முதலே தங்கம் விலை ஏறியபடி உள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், டிரம்ப் பதவியேற்றது முதலே தங்கம் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது. தங்கம் விலை கடந்த 8 மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட பவுனுக்கு 20 ஆயிரம் ஏறிவிட்டது. கடந்த ஆண்டு ஜூலையில் 10 லட்சத்திற்கு தங்கத்தில் முதலீடு செய்திருந்தால், இன்று 4.42 லட்சம் லாபம் கிடைத்திருக்கும். அந்த அளவிற்கு ஏறியிருக்கிறது.இதன் பின்னணி பற்றி பார்ப்போம்.
தங்கம் விலை நேற்று ஒரே நாளில் ரூ.1,440 உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு இருந்தது. இதன்படி நேற்று ஒரு பவுன் ரூ.76,680-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று மாலையே சட்டென குறைந்து 76,280க்கு விற்பனையானது. இன்று தங்கம் விலை ஒரு கிராமிற்கு 85 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 9,620 ரூபாய் ஆகவும், ஒரு பவுன் 76,960 ஆகவும் உயர்ந்துள்ளது.. அதாவது ஒரு பவுனுக்கு 680 வரை உயர்ந்துள்ளது.

தங்கம் விலை ஆகஸ்ட் மாதம் பிறந்தது முதலே தாறுமாறாக விலை ஏறுகிறது. பின்னர் இறங்குகிறது. அப்படியாக கடந்த 6-ந்தேதி ஒரு பவுன் ரூ.75 ஆயிரத்தை மீண்டும் தாண்டியது. அதனைத் தொடர்ந்தும் விலை அதிகரித்து, கடந்த ஆகஸ்ட் 8-ந்தேதி ஒரு பவுன் ரூ.75 ஆயிரத்து 760-க்கு விற்பனையாகியது. இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்தது.
அதன் பிறகு விலை குறைந்து வந்து, கடந்த 26-ந்தேதியில் இருந்து மீண்டும் 'கிடுகிடு'வென உயரத் தொடங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் அதிரடியாக விலை உயர்ந்திருந்தது.
அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 405-க்கும், ஒரு பவுன் ரூ.75 ஆயிரத்து 240-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று காலை நிலவரப்படி, கிராமுக்கு ரூ.65-ம், பவுனுக்கு ரூ.520-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 470-க்கும், ஒரு பவுன் ரூ.75 ஆயிரத்து 760-க்கும் விற்பனை ஆனது. இதன் மூலம் கடந்த 8-ந்தேதி தொட்ட உச்சத்தை நேற்றும் தங்கம் விலை தொட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று மாலையிலும் தங்கம் விலை மாற்றம் கண்டது. மாலையில் மேலும் கிராமுக்கு ரூ.115-ம், பவுனுக்கு ரூ.920-ம் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 585-க்கும், ஒரு பவுன் ரூ.76 ஆயிரத்து 680-க்கும் விற்பனை ஆனது. ஆக நேற்று ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.180-ம், பவுனுக்கு ரூ.1,440-ம் அதிகரித்து இருந்தது. இதன் மூலம் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை நேற்று தொட்டது. இன்று அதனைவிடவும் அதிகரித்து கிட்டத்தட்ட 77 ஆயிரம் ரூபாய் என்கிற உச்சத்திற்கு சென்றுவிட்டது. கடந்த 8 மாதங்களில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.2,515-ம், பவுனுக்கு ரூ.20,160-ம் உயர்ந்திருக்கிறது.
கடந்த ஓராண்டில் ஒப்பிடும் போது தங்கம் விலை கிட்டத்தட்ட ஒரு பவுனுக்கு 26 ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது. கடந்த 2024ம் ஆண்டு ஜூலையில் ஒரு பவுன் 51 ஆயிரம் என்கிற அளவில் இருந்தது. இன்று 77 ஆயிரம் அளவிற்கு உள்ளதால், தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு மிகப்பெரிய லாபம் கிடைத்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டினை ஒப்பிடும் போது கிட்டத்தட்ட அப்படியே ஒரு மடங்கு லாபம் கிடைத்துள்ளது. அதாவது பவுனுக்கு 40 ஆயிரம் வரை லாபம் கிடைத்துள்ளது. 2020ல் ஒரு பவுன் 37 ஆயிரம் ஆக இருந்தது. இன்று 77 ஆயிரம் ஆக உயர்ந்துள்ளது. தங்கத்தை போல் லாபமான முதலீடு அண்மை காலத்தில் எதுவே இல்லை என்கிற அளவில் லாபம் கிடைத்துள்ளது.
இந்த அளவிற்கு தங்கத்தில் லாபம் கிடைக்க காரணம்.. ரஷ்யா உக்ரைன் போர், அமெரிக்காவின் பொருளாதார நடவடிக்கைகள் போன்ற சர்வதேச காரணங்கள் இருந்தாலும், இந்தியாவில் கடுமையாக உயருவதற்கு இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி மற்றும் அமெரிக்க அதிபர்பர் டிரம்ப் மேற்கொண்டு வரும் வர்த்தக போர்தான் முக்கிய காரணம் ஆகும். அமெரிக்க அதிபர் டிரம்பின் நடவடிக்கைகள் இந்திய ஏற்றுமதியை கடுமையாக பாதித்துள்ளதால், பலரும் தங்கத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள். இதுவே தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயருவதற்கு காரணமாக உள்ளது.












Click it and Unblock the Notifications