தமிழக ரயில்வே திட்டங்கள் தாமதம் ஆவது ஏன்? கனிமொழி கேள்வி.. பட்டியலிட்டு ரயில்வே அமைச்சர் விளக்கம்
சென்னை: தமிழகத்தில் ரயில்வே திட்டங்கள் தாமதமாவது ஏன்?" என்று தூத்துக்குடி தொகுதி எம்பியான கனிமொழி கேள்வி எழுப்பினார். அதற்கு லோக்சபாவில் நேற்று ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துப்பூர்வமாக விரிவான பதில் அளித்தார். அதன்படி
தமிழகத்தில் முக்கியமான ரயில்வே உட்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது. இதற்கு முழுமையாகவோ அல்லது பகுதி அளவோ காரணமாக இருப்பது ரயில்வே திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்துவது தான் காரணம் என்றார்.

தமிழ்நாட்டில் உள்கட்டமைப்பு வளர்ச்சி மேம்படுத்தப்பட வேண்டும் எனில் அதற்கு தற்போது உள்ள ரயில் கட்டமைப்புகள் போர்க்கால அடிப்படையில் மேம்படுத்தப்பட வேண்டும். இப்போது தென்மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் எண்ணிக்கை அப்படியே இருமடங்காக மாறினால் தான் ஓரளவு சமாளிக்க முடியும் என்கிற அளவில் உள்ளது. ஏனெனில் சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு செல்ல ரயில்களில் டிக்கெட் கிடைப்பதே இல்லை.. அதேபோல் பல்வேறு பகுதிகளுக்கு போதிய ரயில்கள் இல்லை..
முக்கியமாக ரயில் பாதைகளும் சில இடங்களில் இன்னமும் உருவாக்கப்படவில்லை.. உதாரணமாக பரங்கிமலை-வேளச்சேரி பறக்கும் ரயில் பாதை, மொரப்பூர், தர்மபுரி இடையே ரயில் பாதை பணிகள், மன்னார்குடி - பட்டுக்கோட்டை புதிய ரயில் பாதை, தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை புதிய ரயில் பாதை, திண்டிவனம் - திருவண்ணாமலை புதிய வழித்தடம், கூடுவாஞ்சேரி முதல் ஆவடி வரையிலான புதிய ரயில் பாதை, அத்திப்பட்டு - புத்தூர் புதிய ரயில், திண்டுக்கல்-குமுளி ரயில் பாதை, பழனி- ஈரோடு ரயில் பாதை என பல்வேறு திட்டங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
இந்நிலையில் தமிழகத்தில் ரயில்வே திட்டங்கள் தாமதம் ஆவது ஏன்?" என்று தூத்துக்குடி தொகுதி எம்பியான திமுகவைச் சேர்ந்த கனிமொழி நேற்று லோக்சபாவில் கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துபூர்வமாக பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழ்நாட்டில் முக்கியமான ரயில்வே உட்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது. ரயில்வே திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்துதல் தான் இதற்கு முழுமையாகவோ அல்லது பகுதி அளவோ காரணமாக இருக்கிறது .
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் ரயில்வே திட்டங்களுக்காக தேவைப்படும் நிலத்தின் அளவு 4 ஆயிரத்து 288 ஹெக்டேர் ஆகும். இவற்றில் 991 ஹெக்டேர் நிலம் தான் கையகப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதாவது மொத்த தேவையில் 23 சதவீத நிலம்தான் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மீதி 77 சதவீதம் அதாவது 3,297 ஹெக்டேர் நிலம் இன்னும் கையகப்படுத்த வேண்டிய நிலை உள்ளது. ரயில்வே திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துதலை விரைவுபடுத்த தமிழக அரசின் உதவி பெரிதும் தேவைப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் - திருவண்ணாமலை புதிய வழித்தடம் 71 கிலோ மீட்டர் கொண்டதாகும். இதற்காக 273 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. ஆனால் இதுவரை 33 ஹெக்டேர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது. 88 கிலோ மீட்டர் நீளம் கொண்ட அத்திப்பட்டு - புத்தூர் புதிய ரயில் தடத்துக்கு 189 ஹெக்டேர் நிலம் தேவை. இத்திட்டத்துக்காக எந்த நிலமும் இதுவரை கையகப்படுத்தப்படவில்லை.
36 கிலோ மீட்டர் நீளம் கொண்ட மொரப்பூர் - தருமபுரி புதிய ரயில் தடத்தை செயல்படுத்த 93 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. மன்னார்குடி - பட்டுக்கோட்டை புதிய ரயில் பாதை திட்டத்தை 41 கிலோ மீட்டரில் செயல்படுத்த 152 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை புதிய ரயில் பாதை 52 கிலோ மீட்டரில் செயல்படுத்திட 196 ஹெக்டேர் நிலம் ரயில்வேக்கு தேவைப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட புதிய ரயில் திட்டங்களுக்கு தேவையான நிலம் ஒரு ஹெக்டேர் கூட இன்னும் கையகப்படுத்தப்படவில்லை. மத்திய அரசு திட்டங்களை நிறைவேற்ற தயாராக இருக்கிறது. இருப்பினும் அதற்கான வெற்றி என்பது தமிழக அரசின் ஆதரவைப் பொறுத்து தான் இருக்கும். ரயில்வேயின் திட்டங்கள் மாநில எல்லைகளுக்கு அப்பால் பரவக்கூடும் என்பதால் இத்திட்டங்களின் ஆய்வு, அனுமதி, செயல்படுத்துதல் ஆகியவை மண்டல வாரியாகவே நடைபெறுகின்றன. மாநில வாரியாக கிடையாது.
காரணம், ரயில்வே திட்டங்கள் சில முக்கிய காரணிகளின் அடிப்படையில் அனுமதி அளிக்கப்படுகிறது. அதாவது சம்பந்தப்பட்ட வழித் தடத்தால் வருவாய் கிடைக்கும். எதிர்கால போக்குவரத்து, கடைசி மைல் இணைப்பு, மாற்று வழித்தடங்களை மேம்படுத்துதல், அதிக தேவை கொண்ட வழித்தடங்கள், நிறைவுற்ற பாதைகளை மேம்படுத்துதல் போன்றவற்றின் அடிப்படையில் தான் ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.
இந்த முன்னுரிமைப் பட்டியலில் மாநில அரசுகள், மத்திய அமைச்சகங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிற பொது பிரதிநிதிகள், ரயில்வேயின் சொந்த செயல்பாட்டுத் தேவை, சமூக பொருளாதார பரிசீலனைகள் ஆகியவையும் அடங்கி உள்ளன. தற்போது மாநிலத்தில் நடந்து கொண்டிருக்கும் திட்டங்களின் வேகம் மற்றும் கிடைக்கும் திட்ட நிதியின் தன்மையைப் பொறுத்தும் ரயில்வே திட்டங்கள் அனுமதிக்கப்படுகின்றன.
ஏப்ரல் 01, 2024 நிலவரப்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 2,587 கி.மீ நீளமுள்ள 22 திட்டங்கள் உள்ளன. அதாவது 10 புதிய பாதைகள், 3 கேஜ் உயர்த்தும் திட்டங்கள், 9 இரட்டைப் பாதைத் திட்டங்கள் ஆகியன ரூ.33,467 கோடி ரூபாய் செலவில் இருக்கின்றன.. தமிழகத்தில் முழுமையாகவோ, பகுதியாகவோ திட்டமிடல் மற்றும் செயல்படுத்தலின் பல்வேறு கட்டங்களில் இருக்கின்றன.
அவற்றில் 665 கி.மீ நீளம் தொடங்கப்பட்டு, மார்ச் 2024 வரை ரூ.7,154 கோடி செலவிடப்பட்டுள்ளது. குறிப்பாக சொல்வது என்றால், 872 கிலோ மீட்டர் நீளமுள்ள 10 புதிய ரயில் திட்டங்களில் இதுவரை 24 கிலோ மீட்டரில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக ரூ.1,223 கோடியை மத்திய அரசு செலவிட்டிருக்கிறது. கேஜ் மாற்றம் அல்லது கேஜ் தரம் உயர்த்தும் 3 திட்டங்கள் 748 கிலோ மீட்டர் நீளத்துக்கு திட்டமிடப்பட்டு 604 கிலோ மீட்டரில் செயல்படுத்தியுள்ளோம்.
தமிழ்நாட்டில் இரட்டைப் பாதை மற்றும் அதை விட அதிக பாதைகளாக்கும் 9 திட்டங்கள் 967 கிலோ மீட்டர் நீளத்துக்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. இவற்றில் 37 கிலோ மீட்டர் நீளத்துக்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக ரூ.3,267 கோடி ரயில்வே அமைச்சகம் செலவிட்டிருக்கிறது. முக்கியமான மணியாச்சி வழியிலான மதுரை - தூத்துக்குடி இரட்டைப் பாதைத் திட்டம் ஜூலை 2025 க்குள் முடிக்கப்பட்டு விடும். இதற்காக ரூ.2,664 கோடி இதுவரை அரசால் செலவிடப்பட்டுள்ளது. இன்று வரை, தமிழகத்தில் அமைந்துள்ள அகலப் பாதைகளில் சுமார் 96 சதவீதம் மின் மயமாக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள இருப்புப் பாதைகளில் மின் மயமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.
எந்தவொரு ரயில்வே திட்டத்தையும் நிறைவேற்றுவதற்கு மாநில அரசின் விரைவான நிலம் கையகப்படுத்தல் முக்கியம். வனத்துறை அனுமதி, மாநில அரசின் செலவு பங்கினை வைப்புத்தொகையாக வைத்தல், திட்டங்களின் முன்னுரிமை, தவிர திட்டங்களுக்கு பல்வேறு சட்டப்பூர்வ அனுமதிகளும் தேவைப்படுகிறது. அத்துடன் சம்பந்தப்பட்ட பகுதியின் புவியியல் மற்றும் நிலப்பரப்பு தன்மைகள், சட்டம் - ஒழுங்கு நிலைமை மற்றும் காலநிலை காரணமாக குறிப்பிட்ட திட்டப் பகுதியில் திட்டமிடப்பட்ட காலத்துக்குள் வேலை நடக்கும் மாதங்களின் எண்ணிக்கை மாறுபடுகிறது, தமிழகத்தில் ரயில்வே உள்கட்டமைப்புத் திட்டங்கள் மற்றும் பாதுகாப்பு பணிகளுக்காக 2009 - 2014 வரையிலான ஐந்து ஆண்டுகளில் ரூ.879 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், 2025 - 26 ஆண்டில் மட்டும் சுமார் ஏழரை மடங்கு அதிகமாக ரூ.6,626 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது" இவ்வாறு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்தார்.












Click it and Unblock the Notifications