மாதம் மாதம் மின் கட்டணம் முறையை தமிழக அரசால் அமல்படுத்த முடியாதது ஏன்? இன்னும் எத்தனை காலம் ஆகும்?
சென்னை: தமிழக அரசு மின் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தி விட்டது. இனி ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணம் உயரப் போகிறது. ஆனால் ஆட்சிக்கு வரும் முன்பு திமுக அரசு அறிவித்த மாதம் மாதம் மின் கட்டணம் செலுத்தும் முறை அமலுக்கு வரவில்லை. மாதம் மாதம் ரீடிங்க் எடுக்கும் முறையை அமல்படுத்த முடியாதது ஏன்? அதற்கு இன்னும் எத்தனை காலம் ஆகும் தெரியுமா? இதை பாருங்கள்.
தமிழ்நாடு மின்வாரியத்தின் கீழ் வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என 3 கோடிக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. இந்த இணைப்புகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்துக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கும் கட்டணத்தை மின்வாரியம் வசூலித்து ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வசூலித்து வருகிறது.

இந்தநிலையில் மின் கட்டணத்தை யூனிட்டுக்கு 20 பைசா முதல் 55 பைசா வரை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நேற்று அறிவித்தது. இதன்படி இந்த புதிய மின் கட்டண உயர்வு கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் முன்தேதியிட்டு அமலுக்கு வந்துள்ளது.
அதன்படி 400 யூனிட் வரை உள்ள வீட்டு பயன்பாடு மின்கட்டணம், இதுவரை ஒரு யூனிட்டுக்கு ரூ.4.60 ஆக இருந்தது. தற்போது 20 பைசா உயர்ந்து, ரூ.4.80 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. 401 முதல் 500 வரையிலான யூனிட் பயன்படுத்துவோருக்கு, ஒரு யூனிட்டுக்கு ரூ.6.15 ஆக இருந்த கட்டணம், தற்போது 30 பைசா உயர்ந்து, ரூ.6.45 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
501 முதல் 600 வரையிலான யூனிட் பயன்படுத்துவோருக்கு, ஒரு யூனிட்டுக்கு ரூ.8.15 ஆக இருந்த கட்டணம், தற்போது 40 பைசா உயர்ந்து, ரூ.8.55 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 601 முதல் 800 வரையிலான யூனிட் பயன்படுத்துவோருக்கு, ஒரு யூனிட்டுக்கு ரூ.9.20 ஆக இருந்தது. தற்போது 45 பைசா உயர்ந்து, ரூ.9.65 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
801 முதல் 1,000 வரையிலான யூனிட் பயன்படுத்துவோருக்கு, ஒரு யூனிட்டுக்கு ரூ.10.20 ஆக இருந்தது. தற்போது 50 பைசா உயர்ந்து, ரூ.10.70 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 1,000 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு இதுவரை யூனிட்டுக்கு ரூ.11.25 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது 55 பைசா உயர்ந்து, ரூ.11.80 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின் கட்டணம் ரூ.8.15-ல் இருந்து ரூ.8.55 ஆக உயர்ந்துள்ளது. கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட குடிசைகள், தாட்கோ நிறுவனங்களுக்கு மின் கட்டணம் ரூ.9.35-ல் இருந்து ரூ.9.80 ஆக அதிகரித்துள்ளது. ரயில்வே மற்றும் ராணுவ குடியிருப்புகளுக்கான மின் கட்டணம் ரூ.8.15-ல் இருந்து ரூ.8.55 ஆக அதிகரித்துள்ளது. குடிசை மற்றும் குறு நிறுவன மின் கட்டணம் 500 கிலோ வாட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ரூ.6.95 ஆக அதிகரித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், அரசு மருத்துவமனைகளுக்கான மின் கட்டணம் ரூ.8.15-ல் இருந்து ரூ.8.55 ஆக அதிகரித்துள்ளது. தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் விடுதிகளுக்கான 500 கிலோ வாட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ரூ.8.70-ல் இருந்து ரூ.9.10 ஆக அதிகரித்துள்ளது.
விசைத்தறிகளுக்கு மின் கட்டணம் 500 கிலோ வாட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ரூ.7.65-ல் இருந்து ரூ.8 ஆக அதிகரித்துள்ளது. தொழில், ஐ டி நிறுவனங்களுக்கான மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ.7.65-ல் இருந்து ரூ.8 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.வேளாண், அரசு விதை பண்ணைகளுக்கான மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ.4.60-ல் இருந்து ரூ.4.80 ஆக அதிகரித்துள்ளது. கட்டுமான பணிகளுக்கான மின்சார கட்டணம் ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.12.25-ல் இருந்து ரூ.12.85 ஆக அதிகரித்துள்ளது.
முன்னதாக தமிழக அரசு மின்சார கட்டணத்தை உயர்த்த போவதாக இரண்டு மாதங்களுக்கு வந்த செய்தியை "வதந்தி" என்று திட்டவட்டமாக மறுத்தது. ஆனால் இப்போது மின் கட்டண உயர்வை சொன்னது போலவே ஜூலை 1ம் தேதி முதல் அதிகரித்து செயல்படுத்தி விட்டது. உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டதுதான் மின் கட்டணத்தை அரசு உயர்த்தியதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. உதய் மின்திட்டத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக அரசு கையழுத்திட்டது. இந்த விதிமுறைகளின் படி மின் கட்டணத்தை ஆண்டுக்கு ஒரு முறை உயர்த்தினால் மட்டுமே மத்திய அரசு தரும் மின்வாரியத்திற்கான நிதி தமிழகத்திற்கு கிடைக்கும். அதனால் தான் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக திமுகவினர் கூறுகிறார்கள்.
தற்போதைய நிலவரப்படி தமிழக அரசு மின் கட்டணத்தை ஜூலை 1ம் தேதி முதல்,முன் தேதியிட்டு அதிரடியாக மின் கட்டணத்தை உயர்த்தி விட்டது. இனி ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணம் உயரப் போகிறது. ஆனால் ஆட்சிக்கு வரும் முன்பு , தேர்தல் அறிக்கையில் திமுக அரசு அறிவித்த மாதம் மாதம் மின் கட்டணம் செலுத்தும் முறை அமலுக்கு வரவில்லை. மாதம் மாதம் ரீடிங்க் எடுக்கும முறைய அரசால் அமல்படுத்த முடியவில்லை.
இதற்கு டிஜிட்டல் மீட்டர் தான் முக்கிய காரணம் என்கிறார்கள். எல்லா வீடுகளுக்கும், கடைகளுக்கும், நிறுவனங்களுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த வேண்டும். கிட்டதட்ட சப் மீட்டர்கள் எல்லாம் சேர்த்தால் 3 1/2 கோடி ஸ்மார்ட் மீட்டர் மாற்ற வேண்டும். சென்னையில் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இது ரெடியாகி விட்டால் மாதா மாதம் என்று இல்லை.. அன்றாடமே மின் செலவினத்தை மொபைலிலேயே கணக்கிட முடியும். ஆனால் டிஜிட்டல் மீட்டர் எல்லா வீடுகளுக்கு வர குறைந்தது இன்னும் சில வருடங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. எனவே அவ்வளவு எளிதாக மாதம் மாதம் மின் கட்டணம் செலுத்தும் முறை அமலுக்கு வராது என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications