உங்கள் காரில் இதெல்லாம் இருக்கா.. நடவடிக்கை உறுதி.. ஹைகோர்ட் எழுப்பிய சரமாரி கேள்விகள் தெரியுமா?
சென்னை: உச்ச நீதிமன்றம் தடை விதித்தும் கருப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட கார்கள் தமிழகத்தில் ஒடும் நிலை இருக்கிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது.
தமிழ்நாடு முழுவதுமே தனி நபர்கள் வைத்துள்ள வாகனங்களில் பிரஸ், அரசு, போலீஸ், ஊடகம், வக்கீல், டாக்டர், தலைமை செயலகம், நீதிமன்றம், கட்சி தலைவர்கள் சின்னம் போன்ற பல்வேறு ஸ்டிக்கர்கள் ஒட்டுகிறார்கள். இந்த ஸ்டிக்கர்களை திருடர்கள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் சிலர் ஒட்டிக்கொண்டு வாகன சோதனையில் தப்பிப்பதாக புகார் எழுந்தது.

இதேபோல் சிலர் வாகன சோதனையை தவிர்க்கவே இப்படி ஒட்டுவதாகவும் புகார்கள் எழுந்தது. இந்த விவாகரத்தில் போலீசார் அவ்வப்போது நடவடிக்கை எடுப்பார்கள். போலியாக பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டியவர்கள் மீது அடிக்கடி நடவடிக்கையும் எடுக்கப்பட்டது உண்டு. எனினும் ஸ்டிக்கர் ஒட்டுவது தொடரவே செய்தது.
இந்நிலையில் தனியார் வாகனங்களில் அரசு, போலீஸ், ஊடகம், வக்கீல், டாக்டர் போன்ற ஸ்டிக்கர்களை ஒட்டக் கூடாது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகர போலீசார் முறைப்படி அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதை எதிர்த்து சென்னை உயர்நீதின்றத்தில், டாக்டர்கள் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வாகனங்களில் டாக்டர் ஸ்டிக்கரை பயன்படுத்த டாக்டர்களுக்கு இடைக்கால அனுமதி வழங்கியது. இந்தநிலையில், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.பவானி சுப்பராயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை ஜூலை 2-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.
இந்த வழக்கின் வாதங்களுக்கு பிறகு நீதிபதி கூறுகையில், "கார்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உள்ளது. ஆனாலும் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கார்கள் தமிழக சாலைகளில் இன்னும் ஓடிக் கொண்டு தான் இருக்கின்றன. மேலும் கார்களில் கட்சி கொடிகள் கட்டப்பட்டு செல்வதையும் காண முடிகிறது. இவைகளுக்கு எதிராக இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? சுங்கச்சாவடிகளில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு என்று தனி வழி இருந்தும், அந்த பாதை முறைப்படுத்தப்படாமல் உள்ளது. நகரங்களில் உள்ள சாலைகளில் பைக்குகளுக்கு என்று தனி வழி இல்லை. முன்பு போல பைக்குகள் செல்வதற்கு என்றே தனி வழி ஏற்படுத்த வேண்டும்.
சாலை விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளதால், சாலை விபத்துக்களை தடுக்க பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" இவ்வாறு நீதிபதி கருத்து தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ள கார்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள். கார்களில் கட்சி கொடி கட்டப்பட்டு இருந்தால், அதற்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கிறார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications