முதல்வர் ஸ்டாலின் தந்த "மிட்நைட் அசைன்மென்ட்".. இரவோடு இரவாக நேற்று திடீர் விசிட் ஏன்? என்ன நடந்தது?
சென்னை: நேற்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சென்னையில் தேனாம்பேட்டை மற்றும் வாரன்ஸ் சாலை மற்றும் மகாலிங்கபுரம் சாலைகளில் நடந்து வந்த சாலை பணிகளை சோதனை செய்தார்.
நேற்று இரவு திடீரென சாலை பணிகளை பார்வையிட வந்த முதல்வர் ஸ்டாலின் அங்கு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். சாலைகளை அகழ்ந்தெடுக்கும் பணிகள் அங்கு நடந்து கொண்டு இருந்தன. இதை நேரில் பார்வையிட்ட ஸ்டாலின் சாலையின் தரம் குறித்து கேட்டறிந்தார்.
சாலை முறையாக போடப்படுகிறதா, முன்பே போடப்பட்ட சாலைகள் நீக்கப்பட்டு அதன்பின் புதிய சாலைகள் போடப்படுகிறதா என்று முதல்வர் ஸ்டாலின் சோதனை செய்தார். முதல்வர் ஸ்டாலினின் இந்த திடீர் விசிட்டிற்கு பின் முக்கியமான சில காரணங்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்பே உத்தரவு
தமிழ்நாடு தலைமை செயலாளராக இறையன்பு பதவி ஏற்ற போதே சாலைகள் போடுவது குறித்த அறிவிப்பு மாநிலம் முழுக்க அது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு சென்று இருந்தது. சாலைகளை போடும் போது ஏற்கனவே போட்ட சாலைகள் மீது போடாகூடாது. ஏற்கனவே போட்ட சாலைகளை நீக்கிவிட்டு புதிய சாலைகள் போட வேண்டும். சாலை மீது சாலை போட்டால் மேடு ஏற்பட்டு அருகில் இருக்கும் வீடுகளுக்கு மழை நீர் செல்லும் என்று இறையன்பு முக்கிய உத்தரவு பிறப்பித்து இருந்தார். முதல்வரின் அறிவுறுத்தலின் பெயரில் தலைமை செயலாளர் இப்படி உத்தரவிட்டதாக கூறப்பட்டது.

ஆனாலும் கடைபிடிக்கவில்லை
ஆனால் என்னதான் அரசு இதில் உறுதியாக இருந்தாலும் மாநிலம் முழுக்க பல அதிகாரிகள் இந்த உத்தரவை கடைபிடிக்கவில்லை. சாலை மீது சாலை போடும் பழக்கம் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நடந்து வந்தது. வடகிழக்கு பருவமழையின் போது இது எதிரொலித்தது. சென்னையில் புதிதாக சாலை போடப்பட்ட இடங்களில் கூட மழை நீர் போன மாதம் தேங்கியதிற்கு இது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அரசு தரப்பு உத்தரவு போட்ட பின்பும் அதை மதிக்காத சில அதிகாரிகள் சாலை மீது லேசாக இன்னொரு லேயர் போட்டது அம்பலம் ஆனது. சமூக வலைத்தளங்களிலும் இதை பலர் புகைப்படமாக பகிர்ந்து இருந்தனர்.

ஸ்டாலின் அசைன்மென்ட்
இப்படிப்பட்ட நிலையில்தான் இனி சாலைகளில் இப்படி லேயர் கோட்டிங் போட கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் டாப் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இரவில் தானே சாலை போடுகிறார்கள்.. முன்னறிவிப்பின்றி போய் விசிட் செய்யுங்கள்.. சாலை மீது சாலை போட்டால் அங்கேயே நடவடிக்கை எடுங்கள்.. ரெய்டு நடத்துங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் முக்கிய உயர் அதிகாரிகளுக்கு கடந்த வாரமே "மிட்நைட் அசைன்மென்ட்" கொடுத்து இருந்தார். இதையடுத்து தலைமை செயலாளர் இறையன்பு தலைமையிலான குழு நேரடியாக சென்னையில் சாலை போடும் பணிகளை கண்காணித்தனர்.

அதிகாரிகள் பார்வை
கடந்த வாரம் தலைமை செயலாளர் இறையன்பு, சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, துணை ஆணையாளர்கள் எம்.எஸ்.பிரசாந்த், சிம்ரன்ஜீத் ஆகியோர் இரவோடு இரவாக சாலை போடும் பணிகளை ஆய்வு செய்தனர். அடையாறு மண்டலத்தில் சாலை போடும் பணிகளை நேரில் ஆய்வு செய்தனர். சாலையை அகழ்ந்துவிட்டு புதிய சாலை போடுகிறார்களா, சரியான கலவை பயன்படுத்தப்படுகிறதா, தார் முறையாக பயன்படுத்தப்படுகிறதா, சாலையின் மட்டும் எப்படி இருக்கிறது, சாய்தளம் இருக்கிறதா என்று சோதனை செய்துள்ளனர்.

முதல்வரே களமிறங்கினார்
இப்படி டாப் அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்ததால் சென்னையில் சாலை பணிகள் முறையாக செய்யப்பட்டு வருகிறது. அதிகாரிகள் இடையே இப்போதுதான் அச்சமே ஏற்பட்டுள்ளதாம். எப்போது வந்து சோதனை செய்வார்களோ என்ற அச்சத்தில் சாலை பணிகள் முறையாக செய்யப்படுகிறது. ஆனாலும் சில இடங்களில் இப்போதும் சாலைகள் சரியாக போடப்படுவது இல்லை என்று புகார் வந்துள்ளது.. பார்த்துக்கலாம் என்று சில அதிகாரிகள் விட்டேத்தியாக இருக்கிறார்களாம். இந்த புகார்கள் முதல்வர் அலுவலகத்திற்கு செல்லவே.. முதல்வர் ஸ்டாலினே நேற்று நேரடியாக களமிறங்கி சாலை பணிகளை ஆய்வு செய்தார்.

நேரில் சோதனை
சென்னையில் உள்ள வாரன்ஸ் சாலையிலும், மகாலிங்கபுரத்திலும் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டுப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். 312 கிலோ மீட்டர் நீளம் கொண்ட 1,656 பேருந்து மற்றும் உட்புறச் சாலைகள் சென்னையில் புனரமைக்கப்பட்டு வருகின்றது. இதைத்தான் நேற்று முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.. சரியாக சாலைகள் அகழ்ந்தெடுக்கும் பணிகள் நடக்கிறதா, சாலையின் மட்டம் சரியாக உள்ளதா, சாய்தளம் இருக்கிறதா, சாலை ஓரத்தில் முறையாக பினிஷிங் செய்யப்படுகிறதா என்று முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்துள்ளார். சென்னையில் சாலைகளை முறையாக போடுவதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார்.. அதிகாரிகள் ஏமாற்ற கூடாது என்பதால் இப்படி சோதனை செய்துள்ளார் என்று முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications