செங்கோட்டையனை கவனிச்சீங்களா? அதிமுக 3வது இடத்துக்கு போனது ஏன்? எடப்பாடி பழனிசாமி சறுக்கியது இங்கேதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் ஒரு புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.. குறிப்பாக, அதிமுக 3வது இடத்துக்குத் தள்ளப்பட்டிருப்பதும், ஏற்கெனவே அதிமுகவில் இருந்தவர்கள் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பதும் கவனத்தை ஈர்த்துள்ளன.. இப்படிப்பட்ட சூழலில், அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த மூத்த தலைவர் செங்கோட்டையன் மீண்டும் சில கருத்துகளை இப்போது தெரிவித்துள்ளது, அரசியல் கூடாரங்களில் பரபரப்பை கிளப்பி விட்டுள்ளது..!!

சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் செங்கோட்டையன் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அப்போது அதிமுகவிலிருந்து 15 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு வரப்போவதாக கூறியிருந்தார்..

AIADMK

நேற்றைய தினம் இடைத்தேர்தல் ரிசல்ட் வெளியான நிலையில், செய்தியாளர்கள் செங்கோட்டையனிடம் மீண்டும் அதே கேள்வியை எழுப்பினார்கள்..

அதற்கு செங்கோட்டையன், "எடப்பாடியிடம் மற்றவர்களை அரவணைத்துச் செல்லும் தலைமை இல்லை.. இனி அடுத்தடுத்த இடைத்தேர்தல்களில் தவெக வரலாறு படைக்கும்... அதிமுகவிலிருந்து மேலும் யாராவது தவெகவில் இணைவார்களா என்று கேட்கிறீர்கள்.. பொறுத்திருந்து பார்க்க வேண்டும்'' என்று பதிலளித்துள்ளார்

செங்கோட்டையன் போட்ட வெடி

செங்கோட்டையனின் இந்த பதில், அதிமுகவுக்குள் அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.. உண்மையிலேயே இந்த இடைத்தேர்தல் முடிவுகளைப் புரிந்துகொள்ள, அதிமுகவின் கடந்தகால அரசியல் அணுகுமுறையையும் நாம் சற்று கவனிக்க வேண்டியிருக்கிறது..

2026 தேர்தலில் தவெக தங்களுடன் கூட்டணி அமைக்கும் என்று அதிமுக எதிர்பார்த்ததே எடப்பாடி பழனிசாமி செய்த அரசியல் கணக்கு, அவரது முதல் தவறாகப் பார்க்கப்படுகிறது..

விஜய்யின் அரசியல் வருகையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்திருக்கலாம். கரூர் சம்பவத்துக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி எடுத்த மென்மையான அணுகுமுறையும், 2 கட்சிகளுக்கும் இடையே கூட்டணி அமையலாம் என்ற பேச்சுக்கு வழிவகுத்தது. ஆனால், அப்படி ஒரு கூட்டணியே உருவாகவில்லை. இப்போது தவெகவுக்கு எதிரான நிலைப்பாட்டை அதிமுக வெளிப்படுத்தி வருகிறது.

எடப்பாடி சறுக்கியது எங்கே?

கூட்டணி கணக்கு ஒருபுறம் இருக்கட்டும்.. ஒரு கட்சியின் பலம் என்பது அதன் வாக்கு வங்கியிலும், தொண்டர்களிடமும் மட்டுமல்ல, கட்சிக்குள் இருக்கும் நிர்வாகிகளையும் தலைவர்களையும் எப்படி அரவணைத்துச் செல்கிறது என்பதிலும் இருக்கிறது.

இதைத்தான் செங்கோட்டையன் தனது பேட்டியில் சுட்டிக்காட்டியிருக்கிறார்... எம்ஜிஆர் தன்னை விமர்சித்தவர்களையும் அரவணைத்துச் சென்றார் என்று குறிப்பிட்ட அவர், எடப்பாடி பழனிசாமியிடம் அத்தகைய தலைமைப் பண்பு இல்லை என்று விமர்சித்துள்ளார்.. இது செங்கோட்டையனின் அரசியல் கருத்து என்றாலும், அதிமுகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறியிருப்பதால் இந்தக் கேள்வி கவனத்தை பெறுகிறது.

ஏற்கனவே அதிமுக சார்பில் வெற்றி பெற்ற சத்தியபாமா, மரகதம் குமாரவேல் ஆகிய 2 பேரும் தவெகவில் இணைந்து, அதே தொகுதிகளில் அந்தக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். இதை வெறும் 2 தொகுதிகளை இழந்ததாக மட்டும் பார்க்க முடியாது.. ஏற்கனவே வெற்றி பெற்றிருந்தவர்கள் வேறு கட்சிக்கு சென்று, அங்கேயும் வெற்றியைப் பெற்றிருப்பது, அதிமுகவின் உள்ளூர் அமைப்பு மற்றும் தலைமைக்கும் அவர்களுக்கும் இடையிலான உறவு குறித்த கேள்விகளை எழுப்புகிறது.

ஒரு கட்சியிலிருந்து ஒருவர் வெளியேறுவது மட்டுமே அந்தக் கட்சியின் பலவீனத்துக்கான ஆதாரம் கிடையாது. ஆனால், கட்சியிலிருந்து விலகியவர்கள் வேறு கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெறும்போது, அவர்கள் ஏன் வெளியேறினார்கள், அவர்களுக்கு தொகுதியில் இருந்த ஆதரவு என்ன, அந்த ஆதரவைத் தக்கவைக்க அதிமுக தவறிவிட்டதா என்பதையெல்லாம் தலைமை ஆராய வேண்டியிருக்கிறது.

தேர்தல் களத்தில் என்ன நடந்தது?

கட்சியின் தலைமை அணுகுமுறையைத் தாண்டி, தொகுதி அளவிலான தேர்தல் பணிகளையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.. தாராபுரத்தில் உள்ளூர் நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்தும், மதுராந்தகத்தில் தேர்தல் பணிகள் குறித்தும் ஏற்கெனவே விவாதங்கள் எழுந்தன. கே.பி.முனுசாமி தலைமையில் மதுராந்தகத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அதிமுகவால் அந்தத் தொகுதியைக் கைப்பற்ற முடியவில்லை.

அதேபோல், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் போன்ற முக்கிய நிர்வாகிகள் நேரடியாக பிரச்சாரத்தில் ஈடுபடவும் இல்லை.. அவர்கள் ஏன் பிரசாரத்தில் பங்கேற்கவில்லை என்பதற்கான காரணம் தெளிவாக தெரியாத நிலையில், அதையே தோல்விக்கான காரணமாக நாம் சொல்லிவிட முடியாது. இருந்தாலும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் தேர்தல் பணிகளில் ஒருங்கிணைந்து செயல்படுகிறார்களா என்பதைக் கட்சித் தலைமை உறுதிப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக எத்தனையோ அரசியல் சவால்களை சந்தித்து வருகிறது. ஏற்கனவே 25 எம்எல்ஏக்கள் எதிராக வாக்களித்துவிட்டு, பிறகு மன்னிப்புக் கடிதம் அளித்த சம்பவமும் கட்சிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளை அப்பட்டமாக வெளிப்படுத்தியதை நம்மால் மறுக்க முடியாது.. எனவே, தேர்தல் தோல்விகளை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், கட்சிக்குள் என்ன நடக்கிறது என்பதையும் தலைமை கவனிக்க வேண்டியிருக்கிறது.

இனி அதிமுக என்ன செய்ய வேண்டும்?

முதலில், கட்சிக்குள் இருக்கும் அதிருப்திக்கான காரணங்களை கண்டறிய வேண்டும்.. யார் தவறு செய்தார்கள் என்று தேடுவதோடு நிறுத்திக்கொள்ளாமல், நிர்வாகிகள் ஏன் விலகுகிறார்கள், தொண்டர்களுக்கு என்ன எதிர்பார்ப்பு இருக்கிறது, உள்ளூர் அளவில் கட்சியின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்பதையெல்லாம் ஆராய வேண்டும்.

அடுத்ததாக, ஒவ்வொரு தொகுதியிலும் கட்சியின் உண்மையான பலம் என்ன என்பதை மதிப்பிட வேண்டும். தேர்தல் நேரத்தில் மட்டும் நிர்வாகிகளை சந்திப்பதைவிட, தொடர்ந்து தொண்டர்களுடனும் மக்களுடனும் தொடர்பில் இருப்பது அவசியம். வேட்பாளர் தேர்வு, தேர்தல் பணிப் பகிர்வு, உள்ளூர் நிர்வாகிகளின் பங்களிப்பு ஆகியவற்றிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.

இரட்டை இலை சின்னம் பலம்

அதேபோல், கட்சியிலிருந்து விலகியவர்களை விமர்சிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், அவர்கள் ஏன் வெளியேறினார்கள் என்பதையும் ஆராய வேண்டும். கருத்து வேறுபாடுகள் இருந்தால் அவற்றை பேசித் தீர்ப்பது, நிர்வாகிகளை அரவணைப்பது, தொண்டர்களின் நம்பிக்கையைத் தக்கவைப்பது போன்றவை கட்சியை வலுப்படுத்த உதவும்.

அதிமுகவிடம் இரட்டை இலைச் சின்னமும், நீண்டகால அரசியல் அனுபவமும், வலுவான கட்சி அமைப்பும் இருக்கின்றன. அதனால், இந்த 2 தொகுதிகளின் முடிவுகளை மட்டும் வைத்து கட்சியின் ஒட்டுமொத்த பலத்தையும் தீர்மானித்துவிட முடியாது. அதேநேரத்தில், தவெக வளர்ந்து வரும் சூழலில் அதிமுக தனது அரசியல் வியூகத்தை எப்படி மாற்றியமைக்கப் போகிறது என்பதும் முக்கியமான கேள்வியாக இருக்கிறது..

ஆக,

அதிமுக எதிர்கொள்ளும் சவால் 2 தொகுதிகளில் தோல்வியடைந்தது மட்டுமல்ல.. கட்சியிலிருந்து முக்கிய தலைவர்கள் ஏன் வெளியேறுகிறார்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் வேறு கட்சியில் வெற்றி பெறும் சூழல் ஏன் உருவானது என்பதைக் கண்டறிந்து, கட்சியின் செயல்பாடுகளில் தேவையான மாற்றங்களைக் கொண்டுவர எடப்பாடி பழனிசாமி முன்வருகிறாரா என்பதில்தான் அதிமுகவின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் அடங்கியிருக்கின்றன.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+